சிறப்பு செய்திகள்

தமிழகத்தை பாலவனமாக துடிக்கிறார் ராகுல்காந்தி, அந்த துரோகத்துக்கு துணை போகிறார் ஸ்டாலின் – முதலமைச்சர் கடும் தாக்கு…

தேனி:-

தமிழகத்தை பாலவனமாக துடிக்கிறார் ராகுல்காந்தி. அந்த துரோகத்துக்கு ஸ்டாலின் துணை போகிறார் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.

பாரதப் பிரதமர் நரேந்திரமோடி தேனியில் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பங்கேற்று பேசியதாவது:-

சங்கம் வைத்து, தமிழ் வளர்த்த பாண்டிய மண்ணில் பேசுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். நாளைய தினம் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இந்த புத்தாண்டு பாரத பிரதமர் மீண்டும் இந்திய திருநாட்டின் பிரதமராக ஆவதற்கு பிறக்கின்ற புத்தாண்டு என்று இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமராக வருவதற்கு தனித் தகுதி வேண்டும், திறமை வேண்டும், வலிமை வேண்டும். இந்த நாட்டில் உள்ள 130 கோடி மக்களை பாதுகாக்கக்கூடிய ஒரு வலிமைமிகுந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி. அவர் மீண்டும் பிரதமராவதற்கு இன்றைக்கு இந்திய நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கூட்டணியைப் பொறுத்தவரைக்கும், பாரதப் பிரதமராக நரேந்திர மோடி தான் என்று கூறி மக்களைச் சந்தித்து வாக்குக் கேட்டு வருகிறோம். ஆனால், எதிரணியைச் சார்ந்த திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையில் அமைந்துள்ள கூட்டணிக் கட்சியில் தி.மு.க. தலைவர் ஒருவர் மட்டும் தான் ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என அறிவித்திருக்கிறார். அந்த கூட்டணியில் இடம்பெற்றிருக்கின்ற மற்ற கட்சிகள் யாரும் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி என இதுவரை அறிவிக்கவில்லை. தமிழகத்தில் திராவிட முன்னேற்றக்கழகம் தலைமையில் அமைந்துள்ள கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்கு கேட்கிறது, அதே போன்று கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு கேட்கிறது.

ஆனால், கேரளாவிலே காங்கிரஸ் கட்சியை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. ஆகவே, திராவிட முன்னேற்றக் கழக தலைவரைப் பார்த்து நான் கேட்பது என்னவென்றால் உங்கள் கூட்டணி குழப்பத்தில் இருக்கிறது, தெளிவு கிடையாது, ஒற்றுமை கிடையாது ஒரு சந்தர்ப்பவாத கூட்டணியை நீங்கள் அமைத்துள்ளீர்கள். கேரளாவில் நீங்கள் காங்கிரசிற்கு ஆதரவு அளிக்கிறீர்களா? அல்லது கம்யூனிஸ்டுக்கு ஆதரவு அளிக்கிறீர்களா? பாராளுமன்ற தேர்தல் என்பது இந்திய நாடு முழுமைக்கும் நடைபெறுகின்ற தேர்தல். மாநில அளவில் நடைபெறுகின்ற தேர்தல் அல்ல. இந்திய அளவில் எந்த கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறுகிறதோ. அந்த கட்சி தான் ஆட்சிப் பொறுப்புக்கு வரும். அதனடிப்படையில் பார்த்தால் நம் கூட்டணி தான் வெற்றி பெறும்.

இந்திய நாட்டின் பிரதமராக நரேந்திரமோடி தான் என்பதை நாம் அறிவித்திருக்கிறோம். ஆனால் எதிர் கட்சிகளில் தி.மு.க. மட்டும் தான் பாரத பிரதமராக ராகுல்காந்தி வரவேண்டும் என அறிவித்திருக்கிறது. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் எல்லாம் ஒற்றுமை இல்லாமல் யார் பிரதமர் வேட்பாளர் என்று தெரியாமலேயே மக்களிடத்தில் வாக்குகள் கேட்டு வருகிறார்கள். “தலை இல்லாத உடம்பு மாதிரி” நம்முடைய எதிரிகள் இருக்கிறார்கள். திறமையான, வலிமையான, இந்த நாட்டைக் காக்கக்கூட்டிய பிரதமர் நரேந்திரமோடி தான். அவர் மீண்டும் பிரதமராக பொறுப்பேற்று இந்த நாட்டை ஆள வேண்டும். அதற்காக நாம் முழு ஆதரவை அளித்துள்ளோம். அதிக இடங்களில் வெற்றி பெற்று, அவர் மீண்டும் பாரதத்தின் பிரதமராக வருவார் என தெரிவித்துக்கொள்கிறேன்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின், கழக அரசைப் பற்றியும், மத்தியில் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா அரசைப் பற்றியும் குறை கூறி வருகிறார். இந்திய நாட்டிற்கே தலை குனிவை ஏற்படுத்தியது, குறிப்பாக தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய தலை குனிவை ஏற்படுத்தியது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல். ஆகவே இன்றைக்கு தலை குனிவை ஏற்படுத்திய கட்சி திராவிட முன்னேற்றக் கழகம். அவர்கள் ஊழலைப்பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும், அருகதையும் இல்லை. இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொண்டு வந்த அனைத்துத் திட்டங்களும் அகழக அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, குடிசையில் வாழ்கின்ற சாதாரண மக்கள் கூட இந்த அரசால் பல்வேறு நன்மைகளை அடைந்திருக்கிறார்கள். நாட்டு மக்களுக்கு நன்மையை கொடுக்கக்கூடிய ஒரே அரசு, அம்மாவுடைய அரசு. அதே போன்று தான், பாரதப் பிரதமர் நரேந்திரமோடி ஏழை, எளிய மக்கள் முன்னேற்றம் அடைய வேண்டும், நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டும். நாடு வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து இந்திய நாட்டின் பெருமையை உலகளவில் வெளிவரச் செய்துள்ளார்.

பாரதப் பிரதமர் நரேந்திரமோடியால் இந்திய நாட்டிற்கு பெருமை வந்திருக்கிறது என்று சொன்னால் அவர் எடுத்த முயற்சி, கடும் உழைப்பு ஆகியவை தான் காரணம். இந்தியாவிற்கு உலகளவில் பெருமை கிடைத்திட வேண்டும் என்பதற்காக அவர் எடுத்த துணிச்சலான நடவடிக்கையையும் அனைத்துத் தரப்பு மக்களும் பாராட்டுகிறார்கள். அடித்தட்டு மக்கள் கூட வளமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக அவர் அறிவித்த திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு போய் சேர்ந்துள்ளது. எனவே, அவர் மீண்டும் பாரதப் பிரதமராக வருவதற்கு நாம் அனைவரும் ஒற்றுமையோடு உழைத்து பெரும் வெற்றியைத் தரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இந்த மண்ணின் மைந்தராக இருக்கின்ற தேனி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமாருக்கும், மதுரை நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் வி.வி.ஆர். ராஜ்சத்யனுக்கும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். இரண்டு வேட்பாளர்களும் இளைஞர்கள், இந்த தொகுதி மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்களை கொண்டு வரும் வகையில் இரண்டு இளைஞர்களையும் உங்களிடம் ஒப்படைத்திருக்கிறோம். அவர்கள் இரண்டு பேருக்கும் வெற்றி வாய்ப்பை கொடுத்து, தேனி, மதுரை மாவட்டங்கள் சிறக்கவும், வளர்ச்சி அடையவும் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனுக்கும் தாமரை சின்னத்திலும், திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் கோ.ஜோதிமுத்துவுக்கு மாம்பழம் சின்னத்திலும், விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி தேசிய முற்போக்கு திராவிட கழக வேட்பாளர் ஆர்.அழகர்சாமிக்கு முரசு சின்னத்திலும் வாக்களிக்குமாறும், நடைபெறுகின்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் ஏ.லோகிராஜனுக்கு அவர்களுக்கும், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் எம். மயில்வேலுக்கு, சாத்தூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மனுக்கும், நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் எஸ்.தேன்மொழிக்கும் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமாய் இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன்.

மூன்று நாட்களுக்கு முன்பு, ராகுல்காந்தி கர்நாடகத்தில் பேசும் போது, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக குறிப்பிடும் போது, “நான் பிரதமராகப் பொறுப்பேற்றவுடன் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவின் அணை கட்டப்படும்” என தெரிவித்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் நாம் 50 ஆண்டுகாலம் போராடி, நீதிமன்றத்தின் மூலம் நல்ல தீர்ப்பை பெற்று, மத்திய அரசின் மூலமாக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை நாம் அமைத்தோம். ஆனால் அந்த அமைப்புகளை களைப்பேன் என்றும் சொல்லியிருக்கிறார்.

ஆக தமிழ்நாட்டை பாலைவனம் ஆக்குவதற்காகவா ராகுல்காந்தியை பாரத பிரதமர் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவித்தார். எண்ணிப்பார்க்க வேண்டும் பெரியோர்களே. நம்முடைய விவசாயிகள், தமிழ்நாட்டு மக்கள் இரவு பகல் பாராமல் அந்த காவிரி நீரைப் பயன்படுத்தித் தான் அவர்களது வாழ்வாதாரம் இருக்கிறது. அந்த வாழ்வாதாரத்தை நிலைகுலைய செய்திருக்கிற இந்த அறிவிப்பு ஒட்டு மொத்த தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்த செயல் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி, தமிழக விவசாயிகளுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.

எனவே, காவிரியில் மேகதாது அணை கட்டப்படும் என அறிவித்த தி.மு.க. காங்கிரஸ், கூட்டணிக் கட்சி வேட்பாளருக்கா உங்கள் வாக்கு? நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்படி மேகதாது அணை கட்டப்பட்டுவிட்டால் தமிழ்நாடு பாலைவனமாகிவிடும், ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்திற்கு கிடைக்காது. அப்படிப்பட்டவரைத்தான் பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்திருக்கிறார். எனவே, பெரியோர்களும், விவசாய பெருமக்களும், வாக்காளப் பெருமக்களும் இந்த தேர்தலில் அந்த கூட்டணிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

முல்லைப் பெரியார் அணை நீர்மட்டத்தை உயர்த்திட, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உச்ச நீதிமன்றம் வரை சென்று நல்ல தீர்ப்பைப் பெற்றார்கள். 136 அடியிலிருந்து 142 அடி வரை உயர்த்த அனுமதி பெற்றுத்தந்த பெருமை புரட்சித்தலைவி அம்மா அவர்களையே சாரும்.

அதே போல, அம்மா இருக்கின்ற காலத்திலே 142 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவித்து, அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்து முடிவெடுக்க குழு ஒன்றையும் அமைத்தது, அந்த குழுவும் பரிந்துரை செய்து விட்டது. அணை பாதுகாப்பாக உள்ளது, அணையின் உறுதித்தன்மையும் கண்டறியப்பட்டு, பணிகள் மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால் கேரள அரசாங்கம் அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது.

ஆகவே மத்தியில் ஒரு நிலையான அரசு அமைந்தவுடன், முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியிலிருந்து 152 அடியாக உயர்த்தியே தீருவோம். இங்குள்ள மக்களுக்கு தேவையான நீரைப் பெற்றுத்தருவது தான் எங்கள் முதல் நோக்கம். இந்த மாவட்டம் மட்டும் அல்ல, ஐந்து மாவட்ட மக்களும் பயன்பெறுகின்ற வகையில் நீரைப் பெற்றுத்தருவதில் அம்மாவுடைய அரசு துணை நிற்கும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

விவசாயிகள் பயன்பெறும் வகையில், மத்தியிலே ஆட்சி அமைந்தவுடன் கோதாவரி – காவிரி நதி நீர் இணைப்புத்திட்டம் நிறைவேற்றப்படும் என்பதை தெரிவித்து, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு உங்களது வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.