தற்போதைய செய்திகள்

தமிழகத்தை வஞ்சித்த திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் – பெரியகுளத்தில் டாக்டர் ராமதாஸ் பேச்சு…

தமிழர்களை வஞ்சித்த தி.மு.க, காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள் என்று பெரியகுளத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் தேனி நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமார், ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் லோகிராஜன், பெரியகுளம் (தனி) தொகுதி கழக வேட்பாளர் மயில்வேல் ஆகியோரை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான் ஆகியோர் தலைமை தாங்கினர். கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், நகர செயலாளர் என்.வி.ராதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது;-

இது பிரச்சார கூட்டமா அல்லது மாநாடா என்று பார்க்கும் அளவுக்கு பொதுமக்கள், கழகத்தினர் திரளாக கலந்து கொண்டிருக்கிறீர்கள். இதை பார்க்கும் போதே நமது வேட்பாளர்களின் வெற்றி உறுதியாகி விட்டது. எதிரணியில் ஈ.வி.கே.எஸ் போட்டியிடுகிறார். அவருடைய தந்தை சொல்லின் செல்வன் சம்பத். அவரை தி.மு.க.விலிருந்து நீக்கியவர் கருணாநிதி. அதனை தொடர்ந்து சம்பத் தமிழ் தேசிய கட்சியை ஆரம்பித்தார். பின்னர் சம்பத் செய்த பெரிய தவறு காங்கிரசில் சேர்ந்தது தான்.

தமிழகத்தில் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்து மக்களிடம் கல்வியை ஊக்கப்படுத்திய கர்மவீரர் காமராஜரையே காங்கிரஸ்காரர்கள் மட்டுமல்லாது இந்திராகாந்தியும் அலட்சியப்படுத்தினார். மதிய உணவு திட்டத்தை சத்துணவு திட்டமாக கொண்டு வந்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அதை இன்னும் விரிவுபடுத்தியவர் புரட்சித்தலைவி அம்மா .

இலங்கையில் நமது தொப்புள்கொடி உறவுகளை ஒரே நாளில் ஒன்றரை லட்சம் பேரை கொன்று குவிக்க தேவையான ஆயுதங்களை வழங்கி, தமிழர்களுக்கு துரோகம் செய்தவர்கள் காங்கிரசார். அதற்கு உறுதுணையாக தி.மு.க.வும் இருந்தது. அதனை தொடர்ந்து 3 மணி நேரம் கருணாநிதி உண்ணாவிரதம் என்ற நாடகமாடினார். படுகொலை குறித்து கேட்டபோது மழை விட்டு விட்டது. தூவானம் விடவில்லை என்று எகத்தாளம் பேசினார். இப்படி தமிழர்களை வஞ்சித்த திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் 543 தொகுதிகளில் 350 தொகுதிகளில் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. அதே நேரத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு அதிகபட்சம் 125 தொகுதிகளே கிடைக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவை வலிமையான பிரதமர் நரேந்திர மோடியே மீண்டும் ஆளப்போகிறார். ஆவதும் பெண்ணாலே, ஆவதெல்லாம் பெண்ணாலே. ஆண்கள் இங்கு மைனாரிட்டி தான். பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். இங்கே கூடியிருக்கின்ற பெண்கள் கூட்டத்தை பார்க்கும்போது நமது வெற்றி என்பது உறுதியாகிவிட்டது.

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழகத்தை சிறப்பாக வழிநடத்துகின்றனர். தேர்தல் வரை உங்கள் கையை மூடிக்கொள்ளுங்கள். ஏன் என்றால் காங்கிரஸ் கட்சியின் சின்னம் கை சின்னம். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை தற்போது ஆளும் அரசு தான் நிறைவேற்றும். எனவே இங்கு தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ப.ரவீந்திரநாத்குமார், சட்டமன்ற தொகுதி வேட்பாளர்கள் பெரியகுளம் மயில்வேல், ஆண்டிபட்டி லோகிராஜன் ஆகியோருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்டக் கழக பொருளாளர் செல்லமுத்து, மதுரை ஆவின் பெருந்தலைவர் ஓ.ராஜா, நகர துணை செயலாளர் அப்துல்சமது, பா.ம.க பொருளாளர் திலகபாமா, மாநில துணை பொதுச்செயலாளர் முருகானந்தம், மாவட்ட செயலாளர் சேட் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.