தற்போதைய செய்திகள்

தமிழகம் – புதுச்சேரியில் 10 லட்சம் பேர் பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர்…

சென்னை:-

தமிழகம், புதுச்சேரியில் பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு இன்று  தொடங்கியது. 10 லட்சம் மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதினர்.

2018-19-ம் கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று  தொடங்கியது. வருகிற 29-ம்தேதி வரை இந்த தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டு மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் (தமிழ், ஆங்கிலம்) மட்டும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.45 மணி வரை நடைபெறும். மற்ற பாடங்களுக்கான தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 12.45 மணி வரை நடக்கும். பிற்பகல் தமிழ் முதல் தாள் தேர்வு தொடங்கியது.

10-ம் வகுப்பு. பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 12 ஆயிரத்து 546 பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 59 ஆயிரத்து 618 மாணவ-மாணவிகளும், தனித்தேர்வர்களாக 38 ஆயிரத்து 176 பேரும் என மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதினர்.

தமிழ்நாடு, புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கு மொத்தம் 3 ஆயிரத்து 731 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை காட்டிலும் 133 தேர்வு மையங்கள் அதிகம் ஆகும். சென்னை மாநகரில் 567 பள்ளிகளில் இருந்து 213 தேர்வு மையங்களில் 50 ஆயிரத்து 678 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.

தேர்வுக்காக 49 ஆயிரம் ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர் பணியில் ஈடுபட்டனர். தேர்வு பணியில் அனைத்து நிலைகளிலும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பிட வசதிகள் சிறப்பான முறையில் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 5 ஆயிரத்து 500 எண்ணிக்கையிலான பறக்கும்படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.