தமிழகம்

தமிழகம், புதுவை நாடாளுமன்றம், சட்டமன்ற இடைத்தேர்தல் : வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்…

சென்னை:-

நாடாளுமன்றத்தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள தமிழகம், புதுச்சேரி உள்பட 13 மாநிலங்களை சேர்ந்த 97 தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது. தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கு நாளை 19-ம்தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கு மனு தாக்கல் தொடங்குகிறது. இந்தியா முழுவதும் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 11-ம்தேதி தொடங்கி மே மாதம் 19-ம்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக ஏப்ரல் 11-ம்தேதி அன்று 20 மாநிலங்களைச் சேர்ந்த 91 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

2-ம் கட்டமாக ஏப்ரல் 18-ம்தேதி 13 மாநிலங்களைச் சேர்ந்த 97 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 3-வது கட்டமாக ஏப்ரல் 23-ம்தேதி 14 மாநிலங்களில் உள்ள 115 தொகுதிகளிலும், 4-வது கட்டமாக ஏப்ரல் 29-ம்தேதி 9 மாநிலங்களில் உள்ள 71 தொகுதிகளிலும், 5-வது கட்டமாக மே 6-ம்தேதி 7 மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளிலும், 6-வது கட்டமாக மே 12-ம்தேதி 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 7-வது கட்டமாக மே 19-ம்தேதி 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

தமிழ்நாடு, புதுச்சேரியில் 2-வது கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதிக்கும், ஏப்ரல் 18-ம்தேதி (வியாழக்கிழமை) ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அன்றே தமிழகத்தில் காலியாக 21 சட்டமன்ற தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

அதன்படி தமிழகம், புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை 19-ம்தேதி தொடங்குகிறது. மனுதாக்கல் செய்ய கடைசி நாள் 26-ம்தேதி. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை 27-ம்தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற 29-ம்தேதி கடைசிநாள். அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ம்தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 23-ம்தேதி நடைபெறும்.