தற்போதைய செய்திகள்

தமிழக அரசின் திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக திகழ்கிறது – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பெருமிதம்…

திண்டுக்கல்

தமிழக அரசின் திட்டங்கள் மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக திகழ்கிறது என்று அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் கூறினார்.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், கே.ஆர். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் டி.ஜி.வினய் தலைமையில் நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பங்கேற்று ஒட்டன்சத்திரம் வட்டத்தை சேர்ந்த 1042 பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் மூலமாக ரூ.1.05 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசியதாவது:- 

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்பட்டு கொண்டிருக்கும் முதலமைச்சர் ஏழை, எளியோர், விவசாயிகள் என அனைவரும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து, சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, பெண்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அவர்கள் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் அனைத்தும் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது. அதில் 5 துறைகளில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் பெற்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் பாராட்டுக்களை பெற்றுள்ளார்.

மேலும் இந்திய அளவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தமிழகம் முன்னனியில் உள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு கைகளையும் இழந்த நாராயணசாமி என்ற இளைஞர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்ததின் அடிப்படையில், அம்மனுவினை அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்று, உறுப்புமாற்று அறுவை சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனையில் மூளை சாவு அடைந்த ஒருவரின் கைகளை எடுத்து வைத்து, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் கை இழந்தவருக்கு இரண்டு கைகளும் பொறுத்தி தற்போது தனது தேவைகளை பூர்த்தி செய்கின்ற வகையில் சுகாதாரத்துறையினர் சாதனை புரிந்துள்ளனர்.

நாராயணசாமிக்கு இரண்டு கைகளையும் பொருத்தி, அவரின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் வார்டு மேலாளருக்கான பணிநியமன ஆணையினையும் முதலமைச்சர் வழங்கி உள்ளார்.இதுபோன்று, ஏழை, எளியோர்களின் தேவை அறிந்து, அவர்களின் கோரிக்கைகளுக்கு முன்பாகவே திட்டங்களை அறிவித்து, அத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி அதன் மூலம் எண்ணற்ற பயனாளிகள் பயன்பெற்று வருகின்றனர்.
தமிழக அரசு, தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சியினர் தொகுதிகளுக்கும் எந்தவித பாகுபாடுமின்றி நிதி ஒதுக்கீடு செய்து, அத்தொகுதிகளிலும் பல்வேறு வளர்ச்சி பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு, அதனை தொடர்ந்து, கிராமப்புற ஏழை பெண்கள் பயன்பெறும் வகையில் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலமாக கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு தலா 50 விலையில்லா நான்கு வார வயதுடைய அசீல் இன நாட்டுக்கோழிகள் மற்றும் அவற்றின் பாதுகாப்பிற்காக கூண்டு வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் தொடங்கி வைத்ததின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்டத்தில் தகுதியுடைய பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியின் மூலம் அதன்படி, சமூகநலத்துறைத்துறையின் சார்பில் 213 பயனாளிகளுக்கு ரூ.53.25 லட்சம் மதிப்பீட்டிலும் திருமண நிதியுதவியுடன்கூடிய தாலிக்கு தங்கம் மற்றும் 1 பயனாளிகளுக்கு ரூ.4000 மதிப்பீட்டில் விலையில்லா தையல் இயந்திரம், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் குழித்தட்டு நாற்றுகள், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.1.29 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா ஆடுகள் மற்றும் 40 பயனாளிகளுக்கு ரூ.2.56 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா கோழிகள்,

வருவாய்த்துறையின் சார்பில் 71 பயனாளிகளுக்கு ரூ.19.88 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா வீட்டுமனைப்பட்டா மற்றும் 56 பயனாளிகளுக்கு ரூ.56 ஆயிரம் மதிப்பீட்டில் முதியோர் மற்றும் இதர உதவித்தொகை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.35 ஆயிரம் மதிப்பீட்டில் விலையில்லா தையல் இயந்திரம் மற்றும் 50 பயனாளிகளுக்கு ரூ.2.51 லட்சம் விலையில்லா தேய்ப்பு பெட்டி, பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 561 மாணவ, மாணவிகளுக்கு ரூ.20.83 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள்,

மாற்றுத்திறாளிகள் நலத்துறையின் சார்பில் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.06 லட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் 6 மாற்றுத்திறனாளிக்கு ரூ.26 ஆயிரம் மதிப்பீட்டில் விலையில்லா தையல் இயந்திரம் என 1042 பயனாளிகளுக்கு ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இதுபோன்று பல்வேறு திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு, அதன் மூலம் பயன்பெற்று தங்களது வாழ்க்கைத்தரத்தினை முன்னேற்றிக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் மேயர் வி.மருதராஜ், பழனி வருவாய் கோட்டாட்சியர் (பொ) கமலகண்ணன், முன்னாள் ஒன்றியகுழு தலைவர் பாலசுப்பிரமணியம், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பாலகிருஷ்ணன், சமூகநலத்துறை அலுவலர் (பொ) முத்துமீனாள் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள், பயனாளிகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.