சிறப்பு செய்திகள்

தமிழக தேர்தல் பாதுகாப்புக்கு 10 கம்பெனி ராணுவ வீரர்கள் வருகை – தலைமை தேர்தல் அதிகாரி தகவல்…

சென்னை:-

தமிழக தேர்தல் பாதுகாப்புக்கு 10 கம்பெனி துணை ராணுவ படையினர் ஈடுபடுத்தப்பட இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

சென்னை தலைமை செயலகத்தில்  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தமிழகத்துக்கு 10 கம்பெனி துணை ராணுவ படையினர் 15, 16-ந் தேதிகளில் வருகின்றனர்.
ஒவ்வொரு துணை ராணுவ பிரிவிலும் 90 முதல் 100 வீரர்கள் இருப்பார்கள். அவர்களில் 80 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மற்ற வீரர்கள் கண்காணிப்பு குழுவினருடன் இணைந்து செயல்படுவார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு மாவட்ட தேர்தல் அதிகாரியும் தேர்தல் நடத்தும் அதிகாரியாக செயல்படுவார். ஒரே மாவட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மக்களவைத் தொகுதிகள் இடம்பெற்றிருந்தால், வருவாய் கோட்டாட்சியர் நிலைக்கு குறையாத அதிகாரிகள் தேர்தல் நடத்தும் அதிகாரிகளாக இருப்பார்கள். வாக்காளர் பட்டியல் தகவல்கள் பெறுவது மற்றும் தேர்தல் விதிமீறல் புகார்கள் தொடர்பாக இலவச எண் 1950-க்கு இதுவரை 46 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளன.

ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் முன்பு போடப்பட்ட கோலத்தில் வரையப்பட்டிருந்த தாமரை உருவத்தை அழிக்கப்பட்ட சம்பவம் பற்றி எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதுதொடர்பாக, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பறக்கும்படை சோதனை மூலம் இதுவரை ரூ.4 கோடியே 14 லட்சத்து 69 ஆயிரத்து 380 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிமம் பெற்றுள்ள 21 ஆயிரத்து 999 துப்பாக்கிகளில் 13 ஆயிரத்து 523 துப்பாக்கிகள் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. உரிய உரிமங்கள் இல்லாமல் வைக்கப்பட்டிருந்த 27 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.. 18 துப்பாக்கி உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 ஆயிரத்து 351 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஆயிரத்து 175 பேர் தடுப்புக்காவல் சட்டப்படி சிறையில்அடைக்கப்பட்டனர். மேலும், நீதிமன்றத்தில் ஆஜராகாத 4 ஆயிரத்து 289 பழைய குற்றவாளிகளுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டு பிறக்கப்பட்டுள்ளது. அனுமதி பெறாத கொடிக் கம்பங்களை தொடர்ந்து அதிகாரிகள் அகற்றி வருகிறார்கள்.

தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் கடுமையாக அமுல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருமான வரித்துறையுடன் இணைந்து பணப்பட்டுவாடா தொடர்பான கண்காணிப்புகளை தீவிரப்படுத்தி உள்ளோம். மாவட்ட வாரியாக வருமான வரித்துறையின் கண்காணிப்புக் குழுக்கள் தற்போது முழுமையாக இல்லாததால்,துணை ஆணையர், உதவி ஆணையர் மற்றும் 3 வருமான வரி அலுவலர்களை கொண்ட மாவட்ட குழுக்களை அமைக்கக் கோரியுள்ளோம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக விண்ணப்பித்திருந்த 7 லட்சம் மனுக்களில் 3 லட்சம் பேரின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. மீதமுள்ள 4 லட்சம் மனுக்கள் ஆய்வில் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் நேற்று மாலை தமிழக தேர்தல் பாதுகாப்புக்கு 6 கம்பெனி துணை ராணுவ படையினர் சென்னை வந்துள்ளனர். இன்று 4 கம்பெனி ராணுவத்தினர் வருகின்றனர்.இவர்களில் 4 கம்பெனி வீரர்கள் சென்னையில் இருப்பார்கள். இன்று கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, சேலம், திருப்பூர் ஆகிய இடங்களுக்கு தலா ஒரு கம்பெனி துணை ராணுவத்தினர் செல்கின்றனர்.