கரூர்

தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்து விட்டார் – எடப்பாடியார் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு

கரூர்

குடிமராமத்து திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றியதன் மூலம் தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்து விட்டார் முதலமைச்சர் எடப்பாடியார் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வட்டங்கள் வாரியாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் த.அன்பழகன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கரூர் வட்டத்திற்குட்பட்ட 2,757 பயனாளிகளுக்கு, ரூ.28,38,56,025 மதிப்பிலும், கடவூர் வட்டத்திற்குட்பட்ட 1,008 பயனாளிகளுக்கு ரூ.8,78,26,132 மதிப்பிலும் நலத்திட்ட உதவிகளை கரூர் மாவட்ட கழக செயலாளரும், போக்குவரத்துத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியதாவது:-

கரூர் மாவட்டத்தில் முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் 35,327 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 23,939 மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. கரூர் மாவட்டத்திற்கு மேலும், கூடுதலாக உதவித்தொகைகள் வழங்கப்பட வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தவுடன், அந்த கோரிக்கையினை ஏற்று மேலும், கூடுதலாக வழங்க இசைவு தந்துள்ளார். அதனடிப்படையில், மேலும் 2,000 பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அம்மா அவர்களின் பொற்கால ஆட்சியில் ஏழை, எளிய மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றும் வகையிலான திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டது.

பெண் சிசு கொலைகளை தடுக்கும் விதமாக தொட்டில் குழந்தை திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு நிதி உதவி திட்டம், விலையில்லா ஆடுகள் மற்றும் கறவை மாடுகள், மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம், வளரிளம் பெண்களுக்கான சத்தான உணவு பொருட்கள் வழங்கும் திட்டம், இரண்டு பெண்குழந்தை பாதுகாப்பு நிதியுதவி திட்டம் என பல்வேறு திட்டங்கள் பெண்களுக்காகவே செயல்படுத்தப்பட்டது.

அனைவருக்கும் மாதந்தோறும் 100 யூனிட் விலையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்து செயல்படுத்தி, தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றிக்காட்டியவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். அதுமட்டுமல்ல, பணிக்கு செல்லும் மகளிருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை அறிவித்து ரூ.20,000 மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

அம்மா அவர்களின் வழியில் ஆட்சிபுரியும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ரூ.20 ஆயிரமாக இருந்த மானியத்தை, ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கினார். தமிழக போக்குவரத்துத்துறைக்கு புத்துயிர் ஊட்டிய அம்மா அவர்களின் வழியில், முதலமைச்சரும் பல்வேறு திட்டங்களை வழங்கி போக்குவரத்துத்துறை நவீனப்படுத்தியதில், மத்திய அரசின் சார்பில் வழங்கப்பட்ட 33 விருதுகளில் 11 விருதுகள் தமிழக போக்குவரத்துத்துறைக்கு கிடைத்திருக்கிறது. முதலமைச்சர் அவர்களும் ஒரு விவசாயி என்பதால், தமிழகத்து விவசாயிகளின் நலன் கருதி குடிமராமத்து என்ற திட்டத்தை ஒரு மக்கள் இயக்கமாகவே செயல்படுத்தி, குடிமராமத்து நாயகனாக மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார் முதலமைச்சர்.

பெண்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் பெண்களின் வாழ்க்கைத்தரமும் உயர வேண்டும், அனைவரும் கல்வி கற்கவும் முன்வர வேண்டும் என்ற சிறப்பான எண்ணத்தில் அம்மா அவர்கள் பெண்களின் படிப்பிற்கு ஏற்ப நிதியுதவியும், திருமாங்கல்யம் செய்வதற்கு தலா 4 கிராம் தங்கமும் வழங்க உத்தரவிட்டு, அத்திட்டத்தை வெகுசிறப்பாக செயல்படுத்தினார். பத்தாம் வகுப்பு வரை பயின்றவர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரமும், பட்டப்படிப்பு பயின்றவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் திருமண நிதியுதவியாக வழங்கப்படுகிறது.

அம்மா அவர்களின் வழியில் செயல்படும் முதலமைச்சர் 4கிராம் என்பதை, 8 கிராமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டதன் அடிப்படையில், ஏராளமான பெண்களின் வாழ்க்கையில் ஒளியேற்றியுள்ளார். அம்மா அவர்களின் திட்டங்கள் அனைத்தையும், அவர்களின் வழியில் செயல்படும் முதலமைச்சர் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இப்படி, மக்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் அம்மா அவர்களின் நல்லாசியோடு ஆட்சிசெய்து வரும் முதலமைச்சருக்கு அனைவரும் நன்றி சொல்ல கடமைபட்டிருக்கிறோம்.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசினார்.

இந்நிகழ்ச்சிகளில் கிருஷ்ணராயபுரம் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் ம.கீதா, மாவட்ட காவல்கண்காணிப்பாளர் இரா.பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் சி.இராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எஸ்.கவிதா, குளித்தலை சார் ஆட்சியர் ஷே.ஷேக்அப்துல்லா, கரூர் வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.