சிறப்பு செய்திகள்

தமிழக மக்களுக்கு தி.மு.க. எந்த நன்மையும் செய்யாது – துணை முதலமைச்சர் ஆவேச பேச்சு…

திருச்சி:-

தமிழக மக்களுக்கு தி.மு.க. எந்த நன்மையும் செய்யாது. அவர்கள் துரோகம் செய்தே பழகி விட்டார்கள் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மக்களவை துணை சபாநாயகரும், கரூர் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளருமான தம்பிதுரையை ஆதரித்து கழக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று சூறாவளி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

மணப்பாறையில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

10 ஆண்டுகளுக்கு மேலாக தி.மு.க. மத்திய ஆட்சியில் அங்கம் வகித்தது. காங்கிரஸ் கூட்டணி அரசில் தங்களுக்கு லாபம் தரக்கூடிய இலாகாக்களை பெறுவதற்கு தி.மு.க. போராடியதே தவிர தமிழக மக்களின் நன்மைக்காக ஒரு துரும்பை கூட அவர்கள் கிள்ளி போட்டது இல்லை. 10 ஆண்டுகளுக்கும்மேல் மத்திய ஆட்சிப்பொறுப்பில் இருந்த தி.மு.க. தமிழகத்துக்கு செய்த நன்மைகளை இப்போது வாய்கிழிய பிரச்சாரம் செய்யும் மு.க.ஸ்டாலின் பட்டியலிடத் தயாரா? நாங்கள் மத்தியில் ஆட்சியில் இல்லாத போதே பல நன்மைகளையும், திட்டங்களையும் தமிழகத்திற்காக கொண்டு வந்துள்ளோம்.

ஜி.எஸ்.டி. வரியை கொண்டு வந்தது தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் கூட்டணி அரசு தான். அதேபோல் நீட்தேர்வை அறிமுகப்படுத்தியதும் காங்கிரஸ் கூட்டணி அரசு தான். நீட் தேர்வை கொண்டு வந்தபோது தங்கள் சுய நலத்திற்காக அதை எதிர்க்கத் தவறியவர்கள் இப்போது தேர்தல் அறிக்கையில் அதை ரத்து செய்வோம் என்று தி.மு.க. சொல்வது மக்களை ஏமாற்றத்தான்.

தி.மு.க.வை நம்பி மக்கள் ஒருபோதும் ஓட்டு போட மாட்டார்கள். ஏனென்றால் இவர்கள் ஆட்சியில் இருந்தபோது மக்கள் ஏமாற்றம் அடைந்ததே ஏராளம். இலங்கை தமிழர்களை அந்நாட்டு அரசு படுகொலை செய்ய போர் தொடுத்தபோது அதற்கு உதவி செய்தது அப்போதைய காங்கிரஸ் அரசு தான். அந்த சமயத்திலும் தி.மு.க. அந்த கூட்டணி அரசில் இடம் பெற்றிருந்தது. ஒரு வார்த்தை வட ஏன் இப்படி செய்கிறீர்கள் அவர்களால் தட்டிக் கேட்க முடியவில்லை. 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று புரட்சித்தலைவி அம்மா அவர்கள் காலத்திலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு முன்னதாக கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது அந்த 7 பேரையும் விடுதலை செய்ய முடியாது என்று கோப்பில் ்கையெழுத்திட்டவர் கருணாநிதி தான்.

இலங்கையில் உச்சகட்ட போர் நடந்தபோது முள்ளி வாய்க்காலில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு யார் காரணம்? 2 லட்சம் ஈழத் தமிழர்கள் குற்றுயிரும், கொலையுயிருமாக பதுங்கு குழியில் தங்கியிருந்தார்களே? அதற்கு யார் காரணம், தங்கள் வீடுகளையும், சொத்துக்களையும், சுகங்களையும் இழந்த சொந்த மண்ணிலேயே அனாதைளை போல் ஈழத் தமிழர்கள் வாழ்ந்தார்களே அதற்கு யார் காரணம்? கருணாநிதியும், அவரது குடும்பத்தாரும் தானே? ஏதோ ஒப்புக்காக 2 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து விட்டு போர் நின்று விட்டது என யாரோ சொன்னார்கள் என்று உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதாக அறிவித்ததின் விளைவு தானே லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு காரணம். இதையெல்லாம் தமிழக மக்கள் என்றுமே மறக்க மாட்டார்கள்.

காவேரி பிரச்சினையில் நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பலமுறை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியிடம் வலியுறுத்தினார்கள். பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் கடிதம் எழுதினார்கள். ஆனால் அவர்கள் அதை கண்டுகொள்ளவே இல்லை. அம்மா அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் தான் காவேரி நடுவர் மன்ற தீர்ப்பு மத்திய அரசியதழில் வெளியிடப்பட்டது என்பதை இந்த நல்ல நேரத்தில் நினைவூட்ட விரும்புகிறேன்.

தமிழகத்திற்கு தி.மு.க. ஒருபோதும் நன்மை செய்யாது. நன்மை செய்யும் ஒரே இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்று தான். ஏனென்றால் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நல்ல லட்சியத்தயைும், கொள்கைகளையும் நமக்கு கொடுத்து சென்றிருக்கிறார் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். அவர் வழிநின்று செயல்படும் இந்த அரசு எந்த காரணத்தை கொண்டும் தனது சுய மரியாதையை விட்டுக் கொடுக்காது.

தமிழக மக்களுக்கு பாதகம் ஏற்படும் என்றால் அதற்காக போராடவும் கழக அரசு தயங்காது. அதற்கு பல உதாரணங்களை நமது அம்மா அவர்களும், அதற்கு பின்னர் இப்போதைய அரசும் செய்திருக்கின்றன. நாம் மூன்றாவது மிகப்பெரிய இயக்கமாக நாடாளுமன்றத்தில் இருந்தபோது தமிழகத்தின் உரிமைக்காக ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று குரல் கொடுத்த ஒரே இயக்கம் புரட்சித்தலைவி அம்மாவின் வழிநின்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான்.

இதேபோல் எந்த ஒரு உரிமைக்காகவது தி.மு.க. போராடியதாக வரலாறு உண்டா? நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். மக்கள் நன்மை செய்கின்ற கூட்டணி எது என்பதை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார்கள். வரப்போகும் தேர்தலில் நமது கூட்டணி மகத்தான வெற்றிபெறும் என்பதை உறுதியாக இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

பிரச்சாரத்தின்போது வேட்பாளர் மு.தம்பிதுரையும், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கரும் உடனிருந்தனர்.