தற்போதைய செய்திகள்

தமிழக மக்களுக்கு பொன்னான திட்டங்களை நிறைவேற்றியவர் புரட்சித்தலைவி அம்மா – அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேச்சு…

திருப்பூர்:-

தமிழக மக்களுக்கு பொன்னான திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றியவர் புரட்சித்தலைவி அம்மா என்று அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கூறினார்.

திருப்பூர் புறநகர் மாவட்டம் உடுமலை நகர கழகம் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு உடுமலை வெங்கடகிருஷ்ணா ரோட்டில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் ஏ.ஹக்கீம் தலைமை தாங்கினார். கழக அமைப்புச் செயலாளரும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன். பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளரும், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

இந்திய அரசியல் வரலாற்றில் உடைந்த கட்சிகள் இணைந்ததாக வரலாறு கிடையாது. கம்யூனிஸ்ட் இரண்டாக பிரிந்தது. இதுவரை ஒன்றாக இணையவில்லை. அதேபோல் காங்கிரஸ் கட்சியும் இரண்டாக பிரிந்து இதுவரை இணையவில்லை. வடமாநிலங்களிலும் பல்வேறு கட்சிகள் இரண்டாக உடைந்தது. இதுவரை அவைகள் இணையவில்லை. ஆனால் உலக அரசியல் வரலாற்றில் பிரிந்த இயக்கம் இணைந்தது என்றால் அது புரட்சித்தலைவரால் உருவாக்கப்பட்ட இயக்கம் தான்.

பிரிந்த இயக்கத்தை இணைத்த பெருமை இதயதெய்வம் அம்மா அவர்களையே சாரும். இதற்காக அவர் எத்தனையோ போராட்டங்களை தன்னந்தனியாக சந்தித்தார். இப்படி பிரிந்த இயக்கம் ஒன்றாக இணைந்ததால் இரட்டை இலை சின்னமும் மீண்டும் கிடைத்தது. அதன் பிறகு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இதயதெய்வம் அம்மா அவர்களின் தலைமையில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 17 ஆண்டுகாலம் இதயதெய்வம் அம்மா அவர்கள் ஆட்சி பொறுப்பிலே இருந்தார். கட்சியையும் ஆட்சியையும் மிக உயர்ந்த நிலைக்கு கொண்டுசென்ற பெருமை அம்மாவையே சாரும். மேலும் புரட்சித்தலைவர் மறைவுக்கு பின்பு கழக உறுப்பினர்களின் 16 லட்சமாக இருந்தது. ஆனால் இதயதெய்வம் அம்மா அவர்களின் செயல்பாட்டால் சுமார் ஒன்றரை கோடி உறுப்பினர்களை கொண்ட மிகப்பெரிய இயக்கமாக வளர்ச்சியடைந்தது. இந்தியாவிலேயே 3-வது பெரிய இயக்கமாக இன்று வளம் வந்துக் கொண்டிருக்கின்றது.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அரசியல் கட்சித்தலைவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படுவதில்லை. சில வாக்குறுதிகள் நிறைவேற்றாமல் போகலாம். ஆனால் இதயதெய்வம் அம்மா அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு என்ன வாக்குறுதிகள் கொடுத்தாரோ அத்தனையும் நிறைவேற்றினார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். குழந்தைகள் படிக்க பள்ளி வர வேண்டும் என்பதற்காக சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். ஆனால் இதயதெய்வம் அம்மா அவர்கள் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கு தேவையான உடுத்த உடை, காலணி, மிதிவண்டி, மடிகணினி, பாடப்புத்தகம், நோட்டு புத்தகம், பேனா, ஜாமென்ட்ரி பாக்ஸ் உட்பட அனைத்தும் வழங்கினார்.

அதோடு விலையில்லா மிக்சி, கிரைண்டர், பெண்களுக்கு தாலிக்கு தங்கம், கறவை பசு மாடுகள் உட்பட ஏராளமான நலத்திட்டங்களை வழங்கியவர் இதயதெய்வம் அம்மா அவர்கள். இந்தியாவிலே எத்தனையோ முதலமைச்சர்கள் இருந்தார்கள். பல ஆண்டுகாலம் முதலமைச்சராக பதவி வகித்தார்கள். அவர்களுக்கெல்லாம் உதிக்காத இத்தகைய பொன்னான திட்டங்கள் எல்லாம் இதயதெய்வம் அம்மா மனதில் தோன்றியது. அதை நிறைவேற்றிக் காட்டினார்.
இப்படி மக்கள் நலன்களை கருத்தில் கொண்டு மக்களுக்காக வாழ்ந்த இதயதெய்வம் அம்மாவின் மறைவிற்கு பின்னால் இந்த இயக்கத்தை கபளீகரம் செய்ய சிலர் முயன்றார்கள்.

மு.க.ஸ்டாலின் இந்த ஆட்சியை கவிழ்க்க எவ்வளவோ முயற்சி மேற்கொண்டார். ஆனால் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கழக அரசையும் கழகத்தையும் காப்பாற்றி கட்டுக்கோப்பாக இயக்கத்தை வழிநடத்தி வருகிறார்கள். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கழகத்தின் தலைமையிலான கூட்டணிக்கு உங்கள் பொன்னான வாக்குகளை அளித்து மாபெரும் வெற்றிபெற செய்வீர்கள்.

இவ்வாறு அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசினார்.