தற்போதைய செய்திகள்

தமிழக மாணவர்கள் வரலாற்றில் இடம் பிடிக்க அரசு நடவடிக்கை – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உறுதி

ஈரோடு:-

தமிழக மாணவர்கள் வரலாற்றில் இடம்பிடிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

ஈரோடு மாவட்டம் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூயில் உலக விண்வெளி வாரத்தினை முன்னிட்டு இஸ்ரோ விண்வெளி கண்காட்சி 3 நாட்கள் நடைபெற்றது. இதன் நிறைவு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் சி.கதிரவன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் பள்ளிக்கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டு ஈரோடு மாவட்ட பள்ளிகளைச் சேர்ந்த 300 மாணவ, மாணவிகளுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:-

கோபி கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் கல்வியில் மட்டுமல்லாது, விண்வெளி கண்காட்சியிலும் சிறப்பாக பணியாற்றி உள்ளனர். இந்தியா ஒரு வல்லரசு நாடு. உலகத்தில் எல்லைக் கோடுகளில் இருக்கின்ற ஒவ்வொரு நாடும் நம்மை கண்டு அஞ்சுகிற அளவிற்கு இந்தியா வளர்ந்து வருகிறது. கல்லூரி நிறுவனங்கள் படிக்கின்ற குழந்தைகளை எதிர்காலத்தில் சிறந்த கல்வியாளர்களாக உருவாக்கப்படுவதற்கு ஏதுவாக மட்டுமல்லாமல், அவர்களுக்கு தூண்டுகோலாக இருந்து விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறது.

இந்திய புள்ளி விபரப்படி, மேல்படிப்பிற்கு செல்கின்ற மாணவர்களின் சதவீதம் இந்தியா முழுவதும் 25 சதவீதம். இந்தியாவின் இலக்கு 35 சதவீதம் ஆகும். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 14 கல்வி உபகரணங்கள் வழங்கியதன் அடிப்படையில், 25 சதவீதம் உயர்கல்விக்கு செல்லுகின்ற நிலை மாறி தற்பொழுது 48.98 சதவீதத்தை எட்டியிருக்கிறது. தமிழக மாணவர்கள் பல்வேறு சிறப்புகளை படைத்து தமிழ்நாட்டிற்கு சிறப்புகளை சேர்ந்து வருகின்றனர்.

புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். உலகத்தில் உள்ள தொழில் முதலீட்டாளர்களை வரவழைத்து 3 லட்சத்து 41 ஆயிரத்து 413 கோடி ரூபாயில் நிதிகளை ஈர்த்துள்ளார். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என்ற நிலையை மாற்றுவதற்காகவும் 10 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பிற்கு உத்திரவாதம் தருகின்ற நிலையினை முதலமைச்சர் உருவாக்கி தந்திருக்கிறார்.

கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் மாணவர்கள் கல்வியை முடித்தவுடன் அவர்களுக்கு வேலைவாய்ப்பிற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் தொழில் முதலீட்டாளர்களை வரவழைத்து வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் இருக்கும் மாணவ, மாணவிகளின் அறிவும், திறனும் அமெரிக்காவில் பிரதிபலித்திருக்கிறது. தமிழக மாணவர்கள் படிப்பில் மட்டுமல்லாமல் திறன் மேம்பாட்டிலும் சிறந்து விளங்குகின்றனர்.

இந்திய விண்வெளி மையத்தில் சிறந்து விளங்கிய மறைந்த குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் மற்றும் சிறப்பாக பணியாற்றிய மயில்சாமி அண்ணாதுரை, தற்போதைய இஸ்ரோ தலைசர் சிவன் ஆகியோர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். தமிழ் மண்ணில் பிறந்திருக்கின்ற ஒவ்வொருவரும் பெற்றிருக்கின்ற அறிவும், ஆற்றலும், சிந்தனையும் இந்தியாவிலே எந்த மாநிலத்திலும் இல்லை. எதிர்கால இந்தியாவை நோக்கி சென்று கொண்டிருக்கும் மாணவர்களாகிய நீங்கள் உலக வரலாற்றில் சிறந்த இடத்தினை அடைய தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இங்கு வருகை தந்திருக்கும் மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த மாணவர்களாக, நாடு போற்றுகின்ற கல்வியாளர்களாக, பெற்றோர்களை நேசிக்க கூடியவர்களாக நீங்கள் வளம் வர வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆவின் தலைவர் கே.கே.காளியப்பன், முதன்மை கல்வி அலுவலர் ரா.பாலமுரளி, கோபி வருவாய் கோட்டாட்சியர் சி.ஜெயராமன், கோபி கல்வி அலுவலர் சிவக்குமார், சி.ஜி.எம். சதீஷ் தவான் விண்வெளி மைய ஆர்.செந்தில்குமார், துணை இயக்குநர் கே.பொங்கிணன், கல்லூரி தாளாளர் கருப்பணன், கோபி நகர அம்மா பேரவை செயலாளர் விஜயகுமார், நகர மாணவர் அணி செயலாளர் செல்வராஜ், நிலவள வங்கி தலைவர் கே.என்.வேலுமணி, வழக்கறிஞர் வி.ஆர்.வேலுமணி, ஒன்றிய எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணை செயலாளர் பி.எம்.ஜெயராஜ், கிளை செயலாளர் ஆப்ரஹாம் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.