கடலூர்

தமிழக வாலிபரை காதலித்து மணக்கும் அமெரிக்க பெண்…

கடலூர்:-

பேஸ்புக் மூலம் தமிழக வாலிபரை காதலித்து அமெரிக்க பெண் ஒருவர் திருமணம் செய்ய இருக்கிறார். தமிழ் கலாச்சாரம் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நாட்டின் வடக்கு கரோலினா சான்போர்டு நகரை சேர்ந்தவர் பிரட்டி (22). இவரும், இவரது தந்தை பல்டன், தாய் பர்டிஷியா ஆகியோர் தமிழ் கலாச்சாரத்தை பற்றி தெரிந்து கொண்டு, அது தொடர்பாக ஆராய்ச்சி செய்வதற்தாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னைக்கு வந்தனர். அவர்கள் அங்கு ஒரு வீட்டில் தங்கி இருந்து தமிழ் கலாச்சாரம் பற்றி ஆராய்ந்து வருகின்றனர். அப்போது பிரட்டி, பேஸ்புக்கில் தமிழ் கலாசாரம் பற்றி தெரிவிக்குமாறு கூறி இருந்தார்.

இதை பார்த்த கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள அகரம்சீகூர் கிராமத்தை சேர்ந்த என்ஜினீயர் சூரியபிரகாஷ்(25) தமிழ் கலாசாரம் பற்றிய தகவல் மற்றும் புகைப்படங்கள், வீடியோக்களை முகநூலில் பதிவு செய்தார். இவ்வாறு இருவரும் முகநூல் மூலமே தகவலை பரிமாறிக்கொண்டனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில் இருவரும் பெற்றோரின் சம்மதத்தின் பேரில் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதுபற்றி காதலர்கள் இருவரும், தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்தனர். இவர்களது காதலுக்கு இருவீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பிரட்டி, சூரியபிரகாஷ் நிச்சயதார்த்தம் திட்டக்குடியில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் இருவரும் மோதிரம் மற்றும் மாலை மாற்றிக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பிரட்டியின் பெற்றோர் மற்றும் சூரியபிரகாஷ் குடும்பத்தினர், உறவினர்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து பிரட்டி கூறுகையில், தமிழ் கலாச்சாரம், உடை, உணவு, மனிதர்கள் அன்போடு பழகும் விதம் ஆகியவை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. எனவே நான் தமிழ் கலாச்சாரப்படி சேலை கட்டி வருகிறேன். இங்குள்ள ஒருவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். அப்போதுதான் சூரியபிரகாசுடன் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

முதலில் நட்பாக தொடங்கிய இந்த பழக்கம் பின்னர் காதலாக மாறியது. இருவரது மனமும் ஒத்துப்போனதால் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, தமிழ் கலாசாரப்படி நிச்சயதார்த்தம் நடந்தது. அமெரிக்காவில் இருந்து உறவினர்கள் சிலர் வர உள்ளனர். அவர்கள் வந்ததும், தேதி முடிவு செய்யப்பட்டு தமிழ் கலாசாரப்படி இங்கேயே எங்களது திருமணம் நடைபெறும் என்றார்.