தற்போதைய செய்திகள்

தமிழர்களின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் அரணாக அம்மாவின் கழக அரசு திகழும் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி…

மதுரை:-

தமிழர்களின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் அரணாக அம்மாவின் கழக அரசு திகழும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதிபடி தெரிவித்தார்.

மதுரை தமிழ் சங்கத்தில் தமிழ்நாடு சிலம்பாட்ட கலைஞர்களின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கதிரவன் தலைமை தாங்கினார். விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு பரிசு வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ்.சரவணன், பெரிய புள்ளான் என்ற செல்வம், கே.மாணிக்கம், கழக அம்மா பேரவை துணை செயலாளர் பா.வெற்றிவேல், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் திருப்பதி, ஒன்றிய கழக செயலாளர்கள் மகாலிங்கம், ராமசாமி, அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

தமிழகம் புராதன கலைகளையும், புராதன சின்னங்களையும் காப்பதில் முதன்மை இடத்தில் இருந்து வருகிறது. குறிப்பாக சிலம்பாட்டம் 5000 ஆண்டுகளுக்கு முன்பாக பழமையானதாக கருதப்படுகிறது. 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகத்தியர் மாமுனி 64 கலைகளில் சிலம்பத்தை குறிப்பிட்டுள்ளார். சிலம்பம் என்ற பெயர் சிலம்பு என்ற வார்த்தையில் தான் உருவானது. சிலம்பம் ஆடும் பொழுது உருவாகும் மொழியை குறிக்கும் விதமாக சிலம்பம் என்ற பெயர் சூட்டப்பட்டதாக வரலாற்றில் கூறப்படுகிறது.

இந்த சிலம்பத்தில் இருந்து ஒத்தைச்சுவடு, பிரிவுச்சுவடு, ரெட்டு வீச்சு, கூட்டுப்பிரிவு, மடுசிரமம், எடுத்தெறித்தல், நெடுங்கம்படி, கோபட்டா, வாள் வீச்சு, பீச்சுவா, சுருள்பட்டா, லேசம், செண்டாயுதம், வளரி, இடிகட்டை, கட்டாரி, கண்டக்கோட்டாரி, வீச்சரிவாள், வெட்டரிவாள், கல்துணி போன்ற ஆயுதப்பிரிவுகளும் உள்ளன. ஊமைத்துரை சுருள் பட்டா வீசுவதிலும், கட்டபொம்மன் நெடுங்கம்பு வீசுவதிலும், சின்னமருது வளரி வீசுவதிலும் வல்லவர்களாக விளங்கினர்.
இந்தியாவில் தமிழ்நாட்டில் இருந்து தான் சிலம்பம் தோன்றியது.

இங்கிருந்து இலங்கை, மலேசியா, பிரான்சு, கனடா போன்ற நாடுகளிலும் சிலம்பாட்டம் பரவியது. இது மட்டுமல்லாது, பண்டைய காலத்தில் காட்டுப்பகுதியில் வேட்டையாடச் செல்லும் போது சிங்கம், புலி போன்ற மிருகங்களிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள சிலம்பத்தை கையாண்டதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாது, சிலம்பாட்டம் ஆடும் போது கை, கால், மூளை, உடம்பு உள்ளிட்ட பல்வேறு பாகங்களின் அசைவுகள் ஏற்படுகிறது. இது நமது உடம்பிற்கு சிறந்த உடற்பயிற்சியாகும்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். தனது திரைப்படங்களில் சிலம்பாட்டத்தை விரும்பி வைக்க சொல்வார். அது மட்டுமல்லாது சிலம்பு சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடிப்பார். தற்போது இது போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை புரட்சித்தலைவருக்கு பின் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பாதுகாத்தார். தற்போது அம்மாவின் வழியில் செயல்பட்டு வரும் முதலமைச்சர் தமிழர்களின் பாரம்பரியமிக்க இந்த விளையாட்டுக்களை பாதுகாத்து வருகிறார். இதற்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் இருந்து வருகிறார்.

கடந்த தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு உரிமை பறிபோனது. அதனை டெல்லி வரை சென்று கடுமையாக வலியுறுத்தி ஜல்லிக்கட்டை மீட்டு தமிழர்களின் உரிமையை நிலைநாட்டியது அம்மாவின் அரசு. தமிழக மக்களுக்கு அம்மாவின் அரசு என்றென்றைக்கும் பாதுகாப்பு அரணாக இருக்கும். நிச்சயம் தமிழர்களின் பாரம்பரியத்தை உரிமையை பாதுகாக்கும் அரசாக இருக்கும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.