தமிழகம்

தமிழர்கள் வாழ்வில் வளர்ச்சி மலரட்டும் – முதலமைச்சர் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து…

சென்னை:-

தமிழர்கள் வாழ்வில் வளர்ச்சியை வழங்கும் ஆண்டாக புத்தாண்டு மலரட்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி விடுத்துள்ள ’’தமிழ்ப் புத்தாண்டு’’ வாழ்த்து செய்தி வருமாறு:-

தமிழ்ப் புத்தாண்டு திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் எனது அன்புக்குரிய தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த “தமிழ்ப் புத்தாண்டு” திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

“தமிழ னென்ற பெருமை யோடு தலை நிமிர்ந்து நில்லடா!
தரணி யெங்கும் இணையிலா உன் சரிதை கொண்டு செல்லடா! ”

என்ற நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அவர்களின் பாடல் வரிகளுக்கேற்ப, ஈடில்லா பெருமைமிக்க வரலாற்றை கொண்ட தமிழ் பெருமக்கள், சித்திரைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக பன்னெடுங்காலமாக கொண்டாடி மகிழ்கிறார்கள்.

இந்த இனிய புத்தாண்டு, தமிழர்களின் வாழ்வில் புதிய எழுச்சியையும், வளர்ச்சியையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும் என்று வாழ்த்தி, உலகெங்கும் வாழும் தமிழ் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது உளப்பூர்வமான தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் விடுத்துள்ள தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.