தற்போதைய செய்திகள்

தமிழ்சொற்கள் பற்றிய சந்தேகங்களை அறிந்துகொள்ள கட்டணமில்லா மையம் – அமைச்சர் க.பாண்டியராஜன் தகவல்…

சென்னை:-

தமிழ்மொழியின் சொல்வளத்தையெல்லாம் ஒருங்கு திரட்டி நிரல்படுத்தும் `சொற்குவைத்’ திட்ட கட்டணமில்லா தொலைபேசி அழைப்பகம் முதலமைச்சரால் அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கி வைக்கப்படும் என்று தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழர் பண்பாட்டுத் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார்.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சார்பில், அகராதியியல் வல்லுநர் குழுக் கூட்டம், சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்றது. இதில், பல்வேறு துறைகளைச் சார்ந்த 40 அறிஞர்கள் பங்கேற்று `சொல்லாக்க உத்திகள்’ என்ற தலைப்பில் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்ததோடு, `சொற்குவைத்’ திட்டத்தைச் சிறப்பாகச் செயற்படுத்துவதற்கான தங்களது ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநர் தங்க. காமராசு வரவேற்புரையும், நோக்கவுரையும் ஆற்றினார்கள். இக்கூட்டத்தில், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழர் பண்பாட்டுத் துறை அமைச்சர் க.பாண்டியராசன் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார்.

`சொற்குவைத்’ திட்டம் என்பது தமிழில் உள்ள அனைத்துச் சொற்களையும் தொகுத்து நிரல்படுத்துதல், சொற்களின் இலக்கண வகைப்பாடுகளைப் பதிவு செய்தல், நிகரான சொற்களுக்குப் பொருள் விளக்கம் தேடும் வசதியை அமைத்துத் தருதல், அடிக்கடி தேடப்படும் சொற்களுக்கு வண்ண அடையாளம் கொடுத்தல், வந்த சொற்கள் மீளவும் வராமல் தடுத்தல், புதிய சொற்களைப் பதிவு செய்தல் போன்ற வசதிகளை உள்ளடக்கியதாக அமையவுள்ளது என்று தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழர் பண்பாட்டுத் துறை அமைச்சர் க.பாண்டியராசன் தெரிவித்தார்.

`சொற்குவைத்’ திட்டத்தின் ஒரு பகுதியாக செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தில், 24 மணி நேரம் இயங்கும் கட்டணமில்லா அழைப்பு மையம் (Toll Free) அமைக்கப்படும் என்றும், அதில் தொடர்பு கொண்டு உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் யார் வேண்டுமானாலும் தமிழ்ச் சொற்கள் தொடர்பான ஐயங்களைக் கேட்டுத் தெளிவு பெற முடியும் என்று கூறினார்.

`சொற்குவைத்’ திட்டத்தின் மூலம், தமிழின் தனிப்பெரும் சொல்வளம் காக்கப்படும் என்றும், தமிழ்ச் சொற்களின் எண்ணிக்கை வரையறுக்கப்படும் என்றும், தமிழ்ச் சொல்லாக்கம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

யுனெஸ்கோ நிறுவனம் வெளியிட்டுள்ள உலகின் மதிப்பு வாய்ந்த 100 மொழிகள் பட்டியலில் 14ஆம் இடத்திலுள்ள தமிழை 10ஆம் இடத்திற்கு மேலேற்றம் செய்வதற்குச் `சொற்குவைத்’ திட்டம் உறுதுணையாக இருக்கும் என்றும் மாண்புமிகு தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழர் பண்பாட்டுத் துறை அமைச்சர் திரு. க. பாண்டியராசன் அவர்கள் தெரிவித்தார்கள்.

மேலும், இந்தச் `சொற்குவைத்’ திட்டத்தில் தமிழறிஞர்கள் மட்டுமல்லாமல், மாணவர்களும், இளைஞர்களும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.