சிறப்பு செய்திகள்

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய குடியிருப்பில் திருநங்கையர்களுக்கு 255 வீடுகள் ஒதுக்கீடு – துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆணை…

சென்னை:-

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் சென்னைக்கு அருகில் ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் “அவசர சுனாமி மறுகுடியமர்வு” திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட 2048 குடியிருப்புகளில், 255 திருநங்கையர்களுக்கு புதிய வாடகை குடியிருப்புக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் 14 திருநங்கையர்களுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்.

சமூக நலத்துறையால் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் திருநங்கைகள் என கண்டறியப்பட்டு, அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ள, தகுதி வாய்ந்த 255 திருநங்கையர்களுக்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசாணை (நிலை) எண்.174 நாள்.17.12.2018ன் படி, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் வாடகை முறையில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில் ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை, குளியல் அறை, கழிப்பறை, குடிநீர் மற்றும் மின் வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. புதிய வாடகை வீடுகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளை பெற்றுக்கொண்ட திருநங்கையர்கள் தங்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, வீடுகளை ஒதுக்கிய துணை முதலமைச்சருக்கு தங்களின் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

இந்நிகழ்சியின் போது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் முதன்மை செயலர் ச.கிருஷ்ணன், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் ம.சு.சண்முகம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.