தற்போதைய செய்திகள்

தமிழ்நாட்டில் இதுவரை ரூ.213.18 கோடி ரொக்கம், 2403 கிலோ தங்கம், 645 கிலோ வெள்ளி பறிமுதல் – தமிழக தேர்தல் அதிகாரி தகவல்…

சென்னை:-

தமிழ்நாட்டில் இதுவரை ரூ.213 கோடி ரொக்கப்பணம் மற்றும் 2403 கிலோ தங்கம் மற்றும் 645 கிலோ வெள்ளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தகுந்த ஆவணங்களை கொடுத்து உரியவர்கள் இவற்றை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

சென்னை தலைமை செயலகத்தில்  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் 8 வாக்குச்சாவடிகளிலும், திருவள்ளூரில் ஒரு வாக்குச்சாவடியிலும், கடலூரில் ஒரு வாக்குச்சாவடியிலும் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் வந்தன. இது தொடர்பாக சம்பந்தபட்ட தேர்தல் அதிகாரியும், பொது பார்வையாளர் அனுப்பும் அறிக்கையும் முக்கியமானது. இதன் அடிப்படையில் 10 வாக்குச்சாவடிகளிலும் மறுவாக்குப்பதிவு நடத்தப்படுவது குறித்த விரிவான அறிக்கையை திருவள்ளூர், கடலூர், தருமபுரி நாடாளுமன்ற தொகுதிகளை சேர்ந்த பொது பார்வையாளர்கள், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளனர். இதன்அடிப்படையில் மறுவாக்குப்பதிவு நடத்துவது பற்றி தேர்தல் ஆணையம் முடிவு செய்து அறிவிக்கும். ஏற்கனவே உள்ள நடைமுறைகளின் அடிப்படையில் மறுவாக்குப்பதிவு நடைபெறும்.

கன்னியாகுமரி தொகுதியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளதாக வந்த புகார்களின் அடிப்படையில் மாவட்ட தேர்தல் அதிகாரியிடமிருந்து அறிக்கை பெறப்பட்டுள்ளது. அதில் இதுபோன்ற தவறுகள் நடக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வருவாய் கோட்டாட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் அதிக அளவில் சிறுபான்மை வாக்காளர்களின் பெயர், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக கூறுகின்றனர். வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணியின்போது, வாக்குச்சாவடி வாரியாகத்தான் பெயர் சேர்க்கப்படுகிறது. மத ரீதியாக வாக்காளர்களை பிரித்து வாக்காளர் பட்டியல் தயார் செய்வதில்லை. எனவே, குறிப்பிட்ட வகுப்பினர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் புகாரில் உண்மை இல்லை.

சென்னையில் வாக்குப்பதிவு குறைவாக உள்ளது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்க தேவையில்லை. நடிகர் ரஜினிகாந்தின் வலது கை ஆள்காட்டி விரலில் மை வைத்தது ஒரு பெரிய குற்றச்செயல் இல்லை. நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த் ஆகியோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லாவிட்டாலும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்சினைகள் குறித்து மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 19-ந்தேதி வரை தேர்தல் விதிமீறல் தொடர்பாக 4,690 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பொதுசொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல், தேர்தல் தொடர்பான வழக்கு, மக்கள் பிரதிநிதித்துவ அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பறக்கும்படை மற்றும் கண்காணிப்பு குழுக்கள் மூலம் ரூ.141.22 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருமானவரித்துறை மூலம் ரூ.71,96 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் இதுவரை ரூ.213.18 கோடி பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. 2403 கிலோ தங்கம் ,645கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பல இடங்களில் தகுந்த ஆவணங்களை அளித்து உரியவர்கள் பணத்தை பெற்று சென்றுள்ளனர். தகுந்த ஆவணங்களை அளித்து பணத்தை உரியவர்கள் பெற்றுக் செல்லலாம். தேர்தல் காலங்களில் பல்வேறு விதமான புகார்கள் வந்தன. இதுவரை 2823 புகார்கள் பெறப்பட்டு அவற்றில் 1516 புகார்கள் மீது மாவட்ட மற்றும் தேர்தல் அதிகாரிகள் தீர்வு கண்டுள்ளனர். 1264 புகார்கள் உண்மைத் தன்மை இல்லை என்று ஒதுக்கப்பட்டது. 43 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அரியலூர் பொன்பரப்பியில் மறுவாக்குப் பதிவுக்கு அவசியம் இருக்காது. அங்கு இருதரப்பினருக்கு மட்டுமே பிரச்சினை ஏற்பட்டது. ஆனால் வாக்குப்பதிவு நடைபெற்ற இடத்தில் எந்த பிரச்சினையும் நடக்கவில்லை.

இவ்வாறு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறினார்.