கோவை

தமிழ்நாட்டுக்கு தி.மு.க செய்த நன்மை என்ன? சரத்குமார் கேள்வி…

கோவை;-

பொள்ளாச்சி நாடாளுமன்ற கழக வேட்பாளர் சி.மகேந்திரனை ஆதரித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை தொகுதிகளில் உள்ள பகுதிகளில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டு பிரசாரம் செய்தார்.

கழக தேர்தல் பிரிவு செயலாளரும், சட்டப்பேரவை துணைத்தலைவருமான பொள்ளாச்சி ஜெயராமன், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம், வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் கஸ்தூரி வாசு, முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது அவர் பேசியதாவது:-

வளர்ச்சி பாதையில் வருங்கால சமுதாயத்தை கொண்டு செல்ல வலுவான ஆட்சி, நிலையான ஆட்சி மத்தியில் அமைய வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்த கூட்டணி உருவாக்கப்பட்டு உள்ளது. மத்தியிலும், மாநிலத்திலும் சிறந்த ஆட்சி நடக்கிறது. இந்த மெகா கூட்டணி அமைந்தவுடன் மு.க.ஸ்டாலினுக்கு அச்சம் வந்து விட்டது.

17 ஆண்டுகள் பதவி சுகத்தை அனுபவித்த திமுக தமிழகத்திற்கு என்ன செய்தது. பா.ஜ.க வுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்த போதும், பதவியில் இருக்கும்போதும் மதவாத கட்சி என்று தெரியாதா? 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை காங்கிரஸ் வேடிக்கை பார்த்தது. ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோது காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் திமுக அங்கம் வகித்தது. அப்போது வைகோ, காங்கிரசும், தி.மு.க.வும்தான் ஈழத்தில் நடந்த படுகொலைக்கு காரணம் என்று சொன்னார். இன்றைக்கு அவர் பதவி கிடைக்குமா? என்று அந்த கூட்டணியில் சேர்ந்து விட்டார்.

கழக வேட்பாளர் மகேந்திரன் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை கேந்திர வித்யாலயா பள்ளிக்காக கொடுத்தவர், தென்னை விவசாயிகளின் நலனுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தவர், தொகுதியில் சிறந்த சாலைகள் அமைய காரணமானவர், உங்களுக்காக உழைக்க கூடியவர். ஆகவே மறந்து விடவேண்டாம். அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து மீண்டும் வெற்றிபெற செய்யுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.