தற்போதைய செய்திகள்

தமிழ் புலவர்கள்- தமிழறிஞர்களுக்கு கழக அரசு காவல் அரணாக இருக்கும் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுதி…

மதுரை:-

தமிழ் புலவர்கள், தமிழறிஞர்களுக்கு கழக அரசு காவல் அரணாக இருக்கும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

மதுரை தமிழ் சங்கத்தில் ‘மீண்டும் சங்க புலவர்கள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் பொற்கைபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. வள்ளியப்பன் முன்னிலை வகித்தார். பல்வேறு தமிழ் புலவர்கள் பங்கேற்ற இக்கருத்தரங்கில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது:-

பல்வேறு இதிகாசங்கள் இன்றைக்கும் உயிரோட்டமாக திகழ்வதற்கு காரணம் தமிழ் புலவர்கள் தான். பண்டைய காலங்களில் மன்னர் அரசவையில் புலவர்கள் அலங்கரித்தனர். மன்னர்கள் பல்வேறு தேசங்களில் போரிட்டு சோர்வு ஏற்படும் போது புலவர்கள் மன்னரை ஊக்குவிக்கும் வகையில் பாடல்களை பாடுவார்கள். அதன் மூலம் புதிய உத்வேகத்துடன் மன்னர் போரிட செல்வதாக பல்வேறு வரலாறுகள் கூறுகின்றன. அது மட்டுமல்லாது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பொருளாதாரம் எவ்வளவு உயர்வாக இருந்தாலும் அதற்கு நிகராக கல்வி அறிவு இருந்தால் தான் அந்த நாடு சுபிட்சமாக இருக்கும். அதனால் தான் அரசவையில் புலவர்களுக்கு பொற்காசுகள் பரிசு கொடுத்து மன்னர்கள் மகிழ்விப்பார்கள்.

முத்தமிழ் வளர்த்த மதுரையில் புலவர்கள் என்று, கூறினால் நம் மனதில் நிற்பது நக்கீரர். இதே மதுரையம்பதியில் சிவபெருமானுக்கு முன்பு நெற்றிக்கண்ணை திறப்பினும் குற்றம் குற்றமே என்று நக்கீரர் கூறினார். அதனால் தான் மதுரையில் முத்தமிழ் வளர்ந்தது. பேரறிஞர் அண்ணா இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டை நடத்தினார். அதற்குப்பின் புரட்சித்தலைவர் மதுரையில் ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டை நடத்தினார். தஞ்சை தரணியிலே எட்டாம் உலகத்தமிழ் மாநாட்டை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நடத்திக்காட்டி தமிழுக்கு பெருமை சேர்த்தார்.

தற்போது முதலமைச்சர் கடல் தாண்டி தமிழை ஊக்குவிக்கும் வகையில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ரூ.10 கோடியை வழங்கியுள்ளார். தொடர்ந்து தமிழ் அறிஞர்களை ஊக்குவித்தும் வருகிறார். கடந்த தி.மு.க. ஆட்சியை எடுத்துக் கொண்டால் தமிழ் சமுதாயத்திற்கும், தமிழ் புலவர்களுக்கும் எதுவும் செய்யவில்லை. கோவையில் செம்மொழி மாநாட்டை நடத்தி அதில் தன் குடும்பத்தாரை முன் வரிசையில் அமர வைத்து அவர்கள் பின்னால் தமிழ் புலவர்கள், அறிஞர்களை நிற்கவைத்து அவர்களை கலங்கப்படுத்தினர். ஆகவே அம்மாவின் வழியில் செயல்பட்டு வரும் இந்த அரசு தமிழ் சமுதாயத்திற்கு தொண்டு செய்து வரும் தமிழ் புலவர்களுக்கும், தமிழ் அறிஞர்களுக்கும் காவல் அரணாக இருக்கும்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.