சிறப்பு செய்திகள்

தரக்குறைவாக பேசுவதை ஸ்டாலின் நிறுத்திக் கொள்ள வேண்டும் – முதலமைச்சர் எச்சரிக்கை

பெரம்பலூர்:-

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தரக்குறைவாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். மரியாதை கொடுத்தால் மரியாதை கிடைக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி  பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் என்.ஆர். சிவபதியை ஆதரித்து முசிறி, மண்ணச்சநல்லூர், துறையூர் ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியதாவது:-

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தமிழக மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கின்ற வகையில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளது வரவேற்கதக்கதாகும். குறிப்பாக நதிநீர் இணைப்பு மிகவும் முக்கிய பங்கினை வகிக்கிறது. காவேரி-கோதாவரி இணைப்பு திட்டம் நிறைவேறும் போது தமிழக டெல்டா மாவட்டங்களுக்கு தேவையான நீர் கிடைக்கும். இதன் மூலம் தங்குதடையின்றி விவசாய பணிகள் மேற்கொள்ளலாம். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று சொன்னால், அந்த கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருந்தால்தான் நிறைவேற்ற முடியும். ஆனால் தி.மு.க. அறிவித்துள்ள வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்ற முடியாது. பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை நம்பவைப்பதுதான் தி.மு.க.வின் வாடிக்கை. ஆனால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காக எந்த திட்டத்தை செயல்படுத்த முடியுமோ அந்த திட்டத்தை தான் அறிவிக்கும். தேர்தல் நேரத்தில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் ஒரே அரசு அம்மாவின் அரசு.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் கழக வேட்பாளராக போட்டியிடும் என்.ஆர்.சிவபதி உங்கள் பகுதியை சார்ந்தவர். இப்பகுதி மக்களுக்காக உழைக்கக் கூடியவர். இப்பகுதி மக்களின் கோரிக்கைகளை நாடாளுமன்றத்தில் எடுத்துரைக்கும் ஆற்றல் மிக்கவர். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர். எனவே, மக்கள் பணி செய்யும் உள்ளூர் வேட்பாளரை வெற்றிபெறச் செய்வது பொதுமக்களாகிய உங்களது கடமை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

காவிரி நடுவர் மன்றம் தனது இறுதித் தீர்ப்பினை வெளியிட்டது. அவ்வாறு வெளியிடப்பட்ட தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட்டால்தான் அந்த தீர்ப்பு நடைமுறைக்கு வரும். ஆனால் அப்போது மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த தி.மு.க. இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக பத்தாண்டு காலம் நம்முடைய உரிமைக்காக நாம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எடுத்த சட்டப் போராட்டத்தின் காரணமாக காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது.

அதன் பிறகு உச்சநீதிமன்றம் வரை சென்று சட்ட ரீதியாக போராடியதன் மூலமும் தமிழகத்தைச் சேர்ந்த 37 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதன் காரணமாக மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்க உத்தரவிட்டது. 50 ஆண்டுகாலமாக நிலவிவந்த காவிரி நீர்ப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கண்ட அரசு அம்மாவின் அரசு. காவிரி பிரச்சினைக்காக ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடாத கட்சி தி.மு.க. ஆனால் இன்று தேர்தல் நேரத்தில் காவிரி பிரச்சினைக்காக தாங்கள் தான் குரல் கொடுத்ததாக ஸ்டாலின் பேசி வருவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்ட அம்மாவின் அரசு தைப்பொங்கல் திருநாளையொட்டி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 பொங்கல் பரிசு வழங்க உத்தரவிட்டது. ஆனால், தி.மு.க. ரூ.1,000 பொங்கல் பரிசு வழங்கக் கூடாதென நீதிமன்றத்திற்கு சென்றது. ஆனால், நீதிமன்றம் தைப்பொங்கலுக்கு ரூ.1,000 வழங்குவதில் தவறில்லை எனக்கூறி அதை வழங்க அனுமதி அளித்ததன் பேரில் அனைவருக்கும் வழங்கப்பட்டது. ஏழை எளிய மக்களுக்காக அரசின் சார்பில் வழங்கக்கூடிய நலத்திட்டங்களை தடுப்பதுதான் தி.மு.க.வின் வேலையாக இருக்கிறது. பொதுமக்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் கட்சியினருக்கு வாக்களிக்க வேண்டுமா?

மழைக்காலங்களில் பெய்கின்ற மழைநீர் வீணாகாமல் தடுத்திட தடுப்பணைகள் கட்டும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயம் மேற்கொள்வதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குடிமராமத்து என்ற மகத்தான திட்டம் நம் மாநிலத்தில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை 3,200 ஏரிகள், குளங்கள் தூர் வாரப்பட்டுள்ளது. இதன் மூலமும் பருவ காலங்களில் பெய்கின்ற மழைநீர் சேமிக்கப்படுகிறது. விவசாயிகள் நலனை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் அரசு அம்மாவுடைய அரசு. முக்கொம்பில் தடுப்பணை கட்டும்பணி நடந்து வருகிறது. கோதாவரி-காவேரி நதிகள் இணைக்கப்பட்டால் வீணாக கடலில் கலக்கும் சுமார் இரண்டாயிரம் டி.எம்.சி. நீர் தமிழகத்திற்கு கிடைக்கும். அதனை விவசாயத்திற்கு பயன்படுத்தலாம். உடலுக்கு உயிர் போல் விவசாயத்திற்கு நீர் மிகவும் முக்கியமானது. முழுக்க முழுக்க விவசாய மேம்பாட்டிற்கான திட்டங்களை அம்மாவின் அரசு செயல்படுத்தி வருகிறது.

சென்னைக்கு அருகே ரூ.2,000 கோடியில் உணவுப் பூங்கா அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்தில் ஒரு காய்கறி மார்க்கெட், குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும். இதன் மூலம் விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகளை ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்து உடனடியாக பணம் பெற்றுக் கொள்ளலாம்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விவசாயத்தை கொச்சைப்படுத்தி பேசி வருகிறார். அவருக்கு விவசாயம்பற்றி எதுவும் தெரியாது. முதலமைச்சரை பார்த்து மண்புழு என்று கூறுகிறார். மண்புழுவின் நன்மை என்ன என்று தெரியாமல் ஸ்டாலின் பேசுகிறார். மண்புழு விவசாயிகளின் நண்பன்ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து பிறகு படிப்படியாக உயர்ந்து முதலமைச்சராக பொறுப்பு வகிக்கின்ற என்னைப் பார்த்து ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார். நான் யாரையும் விமர்சனம் செய்வது இல்லை. 9 முறை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் பணி ஆற்றியிருக்கிறேன். நான் வந்த வழி வேறு. ஸ்டாலின் வந்த வழி வேறு கஷ்டம் என்றால் என்னவென்று ஸ்டாலினுக்கு தெரியுமா. நாகரீகமாக பேசினால் அதற்கேற்றது போல் நாங்களும் பதிலளிப்போம். அநாகரிகமாக பேசினால் அதற்கு தகுந்த பதில் எங்களாலும் தர முடியும். மரியாதை கொடுத்தால் மரியாதை. இல்லையென்றால் அதற்கேற்ப பதில் கொடுப்போம்.

செல்லும் இடங்களில் எல்லாம் தமிழகத்தில்சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாக கூறுகிறார். இந்த ஆட்சியில் எங்காவது ஜாதி மதக் கலவரங்கள் நடந்துள்ளதா. மக்களுக்கு பயனுள்ள வகையில் அம்மா வழியில் சிறந்த ஆட்சியை கொடுத்து வருகிறோம். மு.க.ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது மதுரையில் காலடி வைக்க முடியவில்லை. ஆனால், ஒரு வாரத்திற்கு முன்பு தேர்தல் பிரச்சாரத்திற்காக மதுரைக்குச் சென்ற ஸ்டாலின் சாலையில் டீ-சர்ட் அணிந்து சுதந்திரமாக சென்று வருகிறார். சாலையில் நடந்து சென்று கடைகளில் உள்ள மக்களிடம் வாக்கு சேகரிக்கிறார். இது ஒன்றே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதற்கு ஒரு சாட்சி. மக்களை ஏமாற்றி ஓட்டுகளை பெற ஸ்டாலின் முயற்சி செய்கிறார். அது ஒரு போதும் நடக்காது.

நாடாளுமன்றத்திற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த உறுப்பினர்கள் சென்றால் மக்களுக்கான திட்டங்களை போராடி பெறுவார்கள். மத்தியிலும் மாநிலத்திலும் ஒத்த கருத்துடைய ஆட்சி நடைபெறும்போது மாநிலத்திற்கு தேவையான நல்ல திட்டங்களை கேட்டு பெற முடியும். அப்போது தான் மாநிலத்தில் அதிக வளர்ச்சித் திட்டங்கள் நடைபெறும்.

தொட்டியம் நகராட்சிக்குட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.2 கோடி செலவில் கூடுதல் பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் ரூ.2. கோடி செலவில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. ரூ.144 கோடி மதிப்பில் தொட்டியத்தில் வாழும் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்காக கூட்டுக் குடிநீர் திட்டம்செயல்படுத்தப்படும். அதேபோன்று ரூ.110 கோடியில் தா.பேட்டை கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.3.50 கோடி செலவில் வெங்காய சேமிப்புக் கிடங்கு அமைக்கப்படும். லால்குடி கூகுரிலிருந்து கிளிக்கூண்டு வரை கொள்ளிடம் ஆற்றில் மேம்பாலம் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படும். சமயபுரம் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக ரூ.13 கோடியில் வணிகவளாகம் கட்டப்படும். ரூ.51 கோடி மதிப்பில் சமயபுரத்தில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மண்ணச்சநல்லூர் பகுதியில் புறவழிச்சாலை அமைக்கவும் குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதற்கும், மக்கள் நலத்திட்டங்கள் தங்குதடையின்றி செயல்படுத்துவதற்கும் வாக்காள பெருமக்களாகிய நீங்கள் வருகின்ற தேர்தலில் உங்கள் பேராதரவினை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு அளிக்க வேண்டும்.

எனவே, பெரம்பலூர் நாடாளுமன்ற கழக வேட்பாளர் என்.ஆர்.சிவபதிக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.கண்ட, புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கட்டி காக்கப்பட்ட சின்னமான இரட்டைஇலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.