தற்போதைய செய்திகள்

தரம் தாழ்ந்த அரசியல் நடத்துகிறது தி.மு.க. : ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி கடும் தாக்கு

தேனி

தி.மு.க. தரம் தாழ்ந்த அரசியல் நடத்துகிறது என்று ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி. கூறினார்.

தேனி மாவட்டம் கூடலூரில் கழகம் சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் பாலமணிமார்பன் தலைமை தாங்கினார். கூடலூர் நகர செயலாளர் அருண்குமார், மாவட்ட மாணவரணி தலைவர் மனோஜ், துணை தலைவர் பாஸ்கரன், இணை செயலாளர்கள் ஜெயக்குமார், ஹரிதாஸ், ராமச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் ஈஸ்வரன், சதீஸ்குமார், சண்முகசுந்தரம், பாலசுப்பிரமணி, மாவட்ட பொருளாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட கழக பொருளாளர் சோலைராஜ் வரவேற்றார். இதில் தேனி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத்குமார், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைத்தலைவர் ஜெயச்சந்திரன், மதுரை பாண்டியன், அதிரடி ஆறுமுகம், நாகை பன்னீர்செல்வம், மாவட்ட கழக செயலாளர் சையதுகான், கம்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜக்கையன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் ப.ரவீந்திரநாத்குமார் பேசியதாவது:-

மொழிப்போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு முதலில் எனது வீரவணக்கம். ஒரு சில கட்சிகள் ஒப்பற்ற தியாகிகளின் தியாகத்தை ஓட்டு அரசியலாக மாற்ற பார்க்கிறார்கள். இது அவர்களுக்கு அரசியல் பிழைப்பு தானே தவிர வேறு ஒன்றும் இல்லை. மொழியின் அடிப்படையில் பல்வேறு பிரிவினைவாதங்களையும் பல்வேறு குழப்பங்களையும் இளைஞர்களின் மனதில் விதைக்கிறார்கள். சமூக வலைதளங்களில் பரப்பும் இதுபோன்ற விஷமத்தனமான செய்திகள் கண்டனத்துக்குரியது.

திராவிட நாடு கோரிக்கையை பேரறிஞர் அண்ணாவால் கைவிடப்பட்ட கோரிக்கையாகும். அதே நேரத்தில் மதராஸ் என்பதை தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்தது பேரறிஞர் அண்ணா தான். இந்தி திணிப்பை தமிழகத்தில் எதிர்த்து போராடி கொண்டிருந்த போது புரட்சித்தலைவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ பட்டம் வழங்கியது. தமிழக மக்கள் மீது பற்று கொண்ட புரட்சித்தலைவர் அதை வாங்க மறுத்துவிட்டார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது கனியன் பூங்குன்றனாரின் பாடல் வரிகள் தமிழர்களின் உலகளாவிய சிந்தனையை பறைசாட்டுகின்றன. ஆனால் இன்று போலி தமிழ் தேசியம் பேசிக்கொண்டு முதல்வர் கனவு காண்கிறார்கள். தமிழை தேசிய அலுவல் மொழியாக ஆக்க வேண்டுமென்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்தேன்.

தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின் ஏன் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் அதை வலியுறுத்தவில்லை என்று மக்களே கேள்வி கேட்க தொடங்கி விட்டனர். தஞ்சை பெரிய கோயிலில் வழிபாட்டு மொழி எந்த மொழியாக இருந்தாலும் இறைவனுக்கு புரியாத மொழியாகவா இருக்க போகிறது. எதில் அரசியல் பண்ண வேண்டுமோ அதில் அரசியல் பண்ண வேண்டும். தற்போது திமுக சுயநலமிக்க தரம் தாழ்ந்த அரசியலை நடத்தி கொண்டிருக்கிறது.

புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சாமானிய தொண்டர்களாகிய கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகிய இரு தமிழர்கள் தான் ஆட்சியை நடத்திக் கொண்டு இன்று தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக மாற்றி இருக்கின்றனர். அதேபோல் பாரத பிரதமர் நரேந்திர மோடி நமது தமிழின தொண்டையும், புகழையும் உலகமெங்கும் பேசி கொண்டிருக்கிறார். இந்திய மக்கள் அனைவரும் உடன்பிறப்பே. தமிழ் வாழ்க என்பதை விட வெல்க தமிழ் என நாம் அனைவரும் முழங்க வேண்டும்.

இவ்வாறு ப.ரவீந்திரநாத்குமார் எம்.பி. பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் பொன்னுப்பிள்ளை, மாவட்ட துணை செயலாளர் முறுக்கோடை ராமர், முன்னாள் எம்.பி பார்த்திபன், முன்னாள் மாவட்ட செயலாளர் சிவக்குமார் மற்றும் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள் மற்றும் கூடலூர் நகர அவைத்தலைவர் துரை, துணை செயலாளர் பாலை.ராஜா, அம்மா பேரவை சேதுபதி, இளைஞரணி லோயர், பாசறை ஜெயபிரபு, தொழில்நுட்ப பிரிவு கோகுல் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முடிவில் கூடலூர் நகர மாணவரணி செயலாளர் பூபேஸ்குப்தா நன்றி கூறினார்.