தர்மபுரி

தருமபுரியில் ஆடி பெருக்கு கொண்டாட்டம் – தலையில் தேங்காய் உடைத்து மக்கள் வினோத வழிபாடு…

தருமபுரி:-

தருமபுரி மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட ஒகேனக்கல் காவேரி ஆற்றில் குருமனஸ் இன மக்கள் வீரபத்திரர் சாமியை புனித நீராட்டி, தலையில் தேங்காய் உடைத்து வினோத வழிபாடு நடத்தினார்கள்

காவேரி கரை பகுதியில் உள்ள மாவட்டங்களில், ஆடி பெருக்கு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று ஆடி -18 தினத்தை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் காவிரி கரையோரம் நீராடியும் ஒகேனக்கல் நீர் வீழ்ச்சியில் குளித்தும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த ஆடிப்பெருக்கு தினத்தன்று பென்னாகரம், பாலக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் குரும்பர் இன மக்கள் தங்களது குல தெய்வமான வீரபத்திர சாமியை காவேரி ஆற்றில் புனித நீராடி சிறப்பு பூஜைகளை செய்து தலையில் தேங்காய் உடைத்து வினோத வழிபாடு செய்வது வழக்கம்.

ஆடிப்பெருக்கு என்பதால் பென்னாகரம் அருகே உள்ள கூத்தப்பாடி, பருவதனஹள்ளி, காவேரிப்பட்டினம் உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் குரும்பர் இன மக்கள் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வீரபத்திரர் சாமியை கொண்டு வந்து புனித நீராடி அலங்கரித்து சிறப்பு பூஜைகள் செய்தனர். இதனையடுத்து சாமியை ஊர்வலமாக எடுத்துச் சென்று ஒகேனக்கல் முதலைப்பண்ணை அருகில், தங்களது பாரம்பரிய முறைப்படி தலையில் தேங்காய் உடைத்து வினோத வழிபாடு செய்தனர்.

இந்த விழாவில் பெண்கள் தங்களது பாரம்பரியமான பாடல்களைப் பாடி மகிழ்ந்தனர்.இதேபோல் தொப்பூர், ஏ.பள்ளிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி, பையர்நத்தம், மோளையானூர் உள்ளிட்ட பல பகுதிகளில் தலையில் தேங்காய் உடைத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.