தற்போதைய செய்திகள்

தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் 4 உயர் சிகிச்சை பிரிவுகள் – அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்…

தருமபுரி:-

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் 4 உயர் சிகிச்சை பிரிவுகளை அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்.

தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.1.5 கோடி மதிப்பில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு ரூ.3 கோடி மதிப்பில் இருதய உள்டுருவிக் கணிப்பு ஆய்வகம் ரூ.1 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட தீவிர மருத்துவ சிகிச்சை பிரிவு ரூ.50 லட்சம் மதிப்பில் முதியோர் சிகிச்சை பிரிவு என மொத்தம் ரூ.6 கோடி மதிப்பிலான 4 உயர் சிகிச்சை பிரிவுகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைந்துள்ள தீவிர நுரையீரல் சிகிச்சை பிரிவு, குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு, உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை பிரிவுகளை நேரில் சென்று பார்வையிட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து அம்மா உணவகத்திற்கு நேரில் சென்று உணவு சாப்பிடும் நபர்களிடம் உணவு தரம் குறித்து கேட்டறிந்தார்.

இதன்பின்னர் அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த அவசரகால தாய்சேய் நல பராமரிப்பு மையத்தை மேம்படுத்துவதற்கான கட்டடம் கட்டும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் 4 மாதங்களில் நிறைவுப்பெறும். தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த பொதுமக்களின் மருத்துவ சேவைக்காக இந்த மருத்துவமனை தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. மேற்கண்ட பணிகள் நிறைவுப்பெற்று பொதுமக்களுக்கு உயர்தர சிகிச்சை கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக தருமபுரி நகராட்சி சார்பில் நடைத்தப்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கான முழு உடல் பரிசோதனை முகாமினை தொடங்கி வைத்து, துப்புரவு உபகரணங்களை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்;.