தர்மபுரி

தருமபுரி, கிருஷ்ணகிரியில் விரைவில் வரலாற்று சான்றுகள் கணக்கெடுப்பு – தொல்லியல் துறை ஆணையர் தகவல்…

தர்மபுரி:-

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ள வரலாற்று சான்றுகள் குறித்து விரைவில் கணக்கெடுக்கப்படும் என்று தொல்லியல் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

தர்மபுரியில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்ச்சிக்கு தர்மபுரி தமிழ்ச்சங்கத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஆசிரியர் சவுந்திரபாண்டியன் வரவேற்றார். டாக்டர் சிவ.சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். தகடூர் புத்தக பேரவை நிர்வாகிகள் சிசுபாலன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழக தொல்லியல்துறை ஆணையர் த.உதயச்சந்திரன் பேசியதாவது:-

தமிழ் பாடப்புத்தகங்களில் மிக முக்கிய எழுத்தாளர்களின் படைப்புகள் அனைத்தும் இடம் பெற்றுள்ளன. பழமையில் புதுமையை காண்பதும் நவீனத்துவத்தில் தொடர்ச்சியை காண்பதும் தான் புதிய தமிழ்ப்பாட புத்தகத்தின் அடிப்படை நோக்கம். பள்ளிப் பாடம் நடத்துவதற்கு முன்பாகவே மாணவர்களை செயலி மூலம் பாடத்தை படித்து வந்து ஆசிரியர்களுக்கு சொல்லி கொடுக்கின்ற ஒரு நிலை உள்ளது. தர்மபுரியை பின்தங்கிய பகுதி எனக் கூறுவது தவறாகும். தகடூர் என்னும் தர்மபுரி மேன்மையான பழமையான வரலாற்றுப் பெருமைகளைக் கொண்டது.

கீழடியில் மேற்கொண்ட ஆய்வில் அங்கு கிடைத்திருப்பதை ஆய்வு செய்யும் போது அவை கி.மு. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது ஆகும். ஆதிச்சநல்லூரில் மேற்கொண்ட ஆய்வில் அங்கு கிடைத்திருக்கும் வரலாற்று பொக்கிஷங்கள் கி.மு. 9ம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என தெரியவருகிறது. ஆனால் தகடூர் பகுதிக்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு உள்ளது. இங்குள்ள பெருங்கற்கள், நடுகற்கள், ஈமக்குழிகள் ,ஆதி மனிதன் பயன்படுத்திய கோடரி ஆகியவை அதனை உறுதிப்படுத்துகின்றன.

எண்ணற்ற வரலாற்றுச் சான்றுகள் தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தொல்லியல் துறை சார்பில் கணக்கெடுக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும். பழமையை மீட்பது என்பது நம்மை நாம் மீட்பதாக ஆங்கிலேய அதிகாரியான சர் தாமஸ் மன்றோ தனது மிகச்சிறந்த பணியினை ஆட்சியராக இருந்தபோது தொடங்கிய இடம் தர்மபுரி ஆகும். தர்மபுரியை அதிகம் காதலித்த மன்றோ இதுகுறித்து அவர் தனது குடும்பத்தினருக்கு எழுதிய கடிதங்களில் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகள் அரசுக்கு நேரடியாக வரி செலுத்தும் ரயத்வாரி முறை அவர் கொண்டு வந்தது. இந்தப் பகுதியில் அதிகாரியாக இருந்தபோது தான் மூதறிஞர் ராஜாஜி தன்னை சந்திக்க வரும் மாவட்ட ஆட்சியர்களிடம் சர் தாமஸ் மன்றோ அவை பற்றி படிக்கச் சொல்வார். கற்காலம் முதல் ஆங்கிலேயர் காலம் வரை பல மாற்றங்களைக் கொண்டு வந்தது தர்மபுரி ஆகும்.

இவ்வாறு தொல்லியல் துறை ஆணையர் த.உதயச்சந்திரன் பேசினார்.