தற்போதைய செய்திகள்

தருமபுரி – கிருஷ்ணகிரி மக்களுக்கு விரைவில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் – அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்…

தருமபுரி:-

காவிரியில் வெள்ளபெருக்கு தடையப்பட்டிருந்த ஒகேனக்கல் கூட்டு குடிநீர் விரைவில் அனைத்து பகுதிகளுக்கும் வழங்கப்படும் என அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தருமபுரி மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தருமபுரி மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்வது குறித்து ஆலோசனைக் கூட்டம் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.மலர்விழி, முன்னிலை வகித்தார். தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக தண்ணீரில் ஏற்பட்ட கலங்கல் தன்மையால் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் எடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில், தருமபுரி நகராட்சி, 10 பேரூராட்சிகள், 251 ஊராட்சிகளில் பழுதான போர்வெல்கள், ஆழ்துளைக் கிணறுகள், கைப்பம்புகள் ஆகியவற்றை உடனடியாக சரிசெய்து குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். மேலும் சரிசெய்ய இயலாதவைகளை மாற்றி புதிதாக வாங்கி பயன்படுத்தவேண்டும். தேவைப்படும் இடங்களில் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் கே.பி.அன்பழகன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

1971-ம் ஆண்டுக்குப் பின்பு தமிழக எல்லையான பிலிகுண்டுலு காவிரியாற்றில் விநாடிக்கு 2 லட்சத்து 60 ஆயிரம் கன அடி தண்ணீர் தற்போது தான் வந்துள்ளது. இந்த நீரில் கலங்கல் தன்மையால் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் நீரேற்றும் பணிகள் 10.8.2019 அதிகாலை 2 மணி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்திட்டம் மூலம் குடிநீர் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஒகேனக்கல்லில் நீர்வரத்து  2 மணி நிலவரப்படி 1 லட்சத்து 35 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. எனவே, ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்துவிடும் என நம்புகிறோம். நீரேற்றம் செய்ய உகந்த வகையில் தண்ணீர் தெளிவடைந்தால் நீரேற்றும் பணிகள் தொடங்கும். மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் போதுமான குடிநீர் வழங்குவதற்கான பணிகளை தருமபுரி நகராட்சி, 10 பேரூராட்சிகள், 251 ஊராட்சிகளில் விரைந்து மேற்கொள்ள ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீரத் திட்டம் மூலம் நாளொன்றுக்கு 120 எம்எல்டி தண்ணீர் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் தேவைக்காக நீரேற்றம் செய்யப்படுகிறது. வெள்ளப்பெருக்கு காலங்களில் ஒகேனக்கல் உபரிநீரை கெண்டையன் குட்டை ஏரியில் நிரப்பி மாவட்டத்தின் இதர பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு கொண்டு செல்வதற்கான திட்டம் தொடர்பான திட்ட அறிக்கை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.