தற்போதைய செய்திகள்

தாராசுரம் அங்கன்வாடி மையத்திற்கு சொந்த கட்டடம் – அமைச்சர் வெ.சரோஜா தகவல்…

சென்னை:-

தாராசுரம் கலைஞர் காலனியில் அங்கன்வாடி மையத்திற்கு சொந்த கட்டடம் கட்டப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் வெ.சரோஜா கூறினார்.

சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது கும்பகோணம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் கேள்வி ஒன்றை எழுப்பினார். அதில் கும்பகோணம் தொகுதிக்குட்பட்ட தாராசுரம் பேரூராட்சி கலைஞர் காலனியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சொந்த கட்டடம் கட்ட அரசு ஆவன செய்யுமா? என்றார்.

அதற்கு பதிலளித்து சமூக நலத்துறை அமைச்சர் டாக்டர் வெ. சரோஜா பேசுகையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொகுதிக்குட்பட்ட தாராசுரம் பேரூராட்சி கலைஞர் காலனியில் உள்ள அங்கன்வாடி மையம் 2014-ம் ஆண்டு துவக்கப்பட்டு தனியார் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. தனியார் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வரும் இந்த மையத்திற்கு சொந்த கட்டடம் கட்டுவதற்கு தாராசுரம் பேரூராட்சி வாயிலாக இடம் தேர்வு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இடம் தேர்வு செய்யப்பட்ட பின்னர் அங்கு 8.50 லட்சம் மதிப்பீட்டில் சொந்த கட்டடம் கட்டித்தரப்படும் என்று கூறினார்.

திருப்பூர் வடக்கு தொகுதி உறுப்பினர் விஜயகுமார், தன் தொகுதியில் மகளிர் கலைக் கல்லூரி தொடங்க அரசு முன் வருமா என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.‘அன்பழகன், திருப்பூர் வடக்கு பகுதியில் மகளிர் கலைக்கல்லூரி தொடங்குவது குறித்த கருத்துரு எதுவும் அந்த பகுதியில் இல்லை. அந்த பகுதியில் 6 கலைக் கல்லூரிகளும், ஒரு அரசு உதவி பெறும் கல்லூரியும், 14 சுய நிதிக்கல்லூரியும் என மொத்தம் 21 கல்லூரிகள் உள்ளன. திருப்பூரில் ஒரு மகளிர் கல்லூரியும் உள்ளது.

அங்கு ஒப்பளிக்கப்பட்ட இடங்கள் போதுமானதாக உள்ளதால் புதிய மகளிர் கல்லூரி அமைக்க தற்போது அவசியமில்லை. ஆனாலும் திருப்பூர் பகுதி தொழிலாளர்கள் நிறைந்த பகுதி என்பதால் ஒரு புதிய மகளிர் கல்லூரி அமைப்பது குறித்து ஆய்வு நடத்தி பரிசீலனை செய்யப்படும் என்றார். இந்திய அளவில் உயர்கல்வியில் சேருபவர்களின் எண்ணிக்கை 25.8 சதவீகிதமாக இருக்கும் நிலையில் தமிழகத்தில் 48.8 சதவிதமாக உள்ளது. மேலும் ஒப்பளிக்கப்பட்ட இடங்களில் கூடுதலாக 20 சதவிகிதம் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

புரட்சித்தலைவி அம்மா பதிவியேற்ற பின்னர் 65 புதிய கல்லூரிகள் துவக்கப்பட்டன. அதில் 45 கலை கல்லூரிகளாகும்.
முதல்வராக எடப்பாடி கே.பழனிசாமி பதவியேற்ற பின்னர் 2017-2018ம் ஆண்டு 8 அரசு கலை கல்லூரிகளும், 3 உறுப்பு கல்லூரியும் மொத்தம் 11 கல்லூரிகள் துவக்கப்பட்டன. அதே போல் 1585 புதிய பாடப்பிரிவுகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன என்று கூறினார்.

வேப்பனஹள்ளி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முருகன், தனது தொகுதிக்குட்பட்ட மேகல சின்னம்பள்ளி கிராமத்தில் மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகம் கட்ட அரசு முன்வருமா என்ற கேள்வி எழுப்பினார்.

அதற்கு மின்சாரத் துறை அமைச்சர் பதிலளித்து கூறியதாவது:

மேகலசின்னம்பள்ளி கிராமத்தில் மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகம் தற்சமயம் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. அங்கு சொந்த கட்டடம் கட்ட தேவையான நிலம் அடையாளம் காணப்பட்டு வருகிறது. உரிய நிலம் கிடைக்கப்பட்டவுடன் சொந்த கட்டடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

அதே போல் ஆலங்குளம் தொகுதி உறுப்பினர் பூங்கோதை தனது தொகுதியில் மின் வேலி பழுதடைந்து இருப்தாகவும், வனவிலங்கு பாதிப்பு உள்ளதாகவும், புதிய மின்வேலி அமைக்கப்படும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். அதற்கு அமைச்சர் தங்கமணி பதிலளிக்கையில், உறுப்பினர் கோரிய இடம் வனத்துறை சம்பந்தப்பட்டது. வனத்துறை அனுமதி பெற்றவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.