தற்போதைய செய்திகள்

தாலிக்கு தங்கம் – ஸ்கூட்டி தொடர்ந்து கிடைக்க இரட்டை இலைக்கு வாக்களிப்பீர் – அமைச்சர் பா.பென்ஜமின் பிரச்சாரம்…

திருவள்ளூர்:-

அம்மா அரசின் சாதனைகளை கூறி கழகத்தை வெற்றிபெறச் செய்யுங்கள் என திருவள்ளூரில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் பா.பென்ஜமின் பேசினார்.

திருவள்ளூரில் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் பி.வேணுகோபால் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் மேற்கு மாவட்டக் கழக செயலாளரும், சிறுணியம் பி. பலராமன் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மாநில துணை பொதுச்செயலாளர் பாலயோகி, மாவட்ட அமைப்பு செயலாளர் நா.வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் தினேஷ்குமார், மாவட்ட செயலாளர் பூபதி, மற்றும் மாவட்ட செயலாளர் சி.பி.குமார், பா.ஜ.க. மாவட்ட செயலாளர் லோகநாதன், முரளி கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் சிறுணியம் பி.பலராமன் எம்.எல்.ஏ பேசியதாவது:-

பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான ஒரே அரசு அம்மாவின் அரசு மட்டும் தான். தாலிக்கு தங்கம், அம்மா உணவகம், பள்ளி மாணவிகளுக்கு 14 வகையான நலத்திட்டங்கள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு நிதி உதவி, வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஸ்கூட்டி என பல்வேறு திட்டங்களை பெண்களுக்கு அறிவித்து அம்மா செயல்படுத்தி வந்தார். இன்று அம்மா அவர்கள் நினைவிடம் சென்று பார்த்தால் கழக நிர்வாகிகள் மட்டுமின்றி சாமானிய மக்களும் அம்மா அவர்களின் மறைவிற்கு கண்ணீர் விட்டு அழும் காட்சிகளை பார்க்கும் போது மக்களின் மனதில் அம்மா அவர்கள் எப்போதும் குடி கொண்டுள்ளார் என்பது நிரூபணம் ஆகிறது.

பெண்களின் வாழ்வு முன்னேற அம்மா அவர்கள் பெண் கமாண்டோ படை, குழந்தை பேறு கால விடுமுறை, குழந்தை பிறந்தவுடன் 18 வகையான அம்மா குழந்தை நல பெட்டகம் என பல்வேறு திட்டங்களை வழங்கினார். ஓர் ஏழை பெண்ணுக்கு வளைகாப்பு செய்ய முடியாத நிலையில் சமூக நலத்துறை சார்பில் அம்மாவின் அரசே வளைகாப்பு செய்து அவர்களுக்கு சீர்வரிசை முதற்கொண்டு வழங்கும் அரசு இந்திய திருநாட்டிலேயே அம்மா அரசு மட்டும் தான்.வேறு எந்த அரசாங்கமும் செய்ய முடியாத சாதனைகளை அம்மாவின் வழியில் வரும் அரசு செய்கிறது.

அம்மா அவர்கள் தனக்கு பிறகும் கழகம் 100 ஆண்டுகள் தழைத்தோங்கும் என்றார். அதற்கு வித்தாக வருவது தான் நாடாளுமன்ற தேர்தல். இன்று நாம் செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்போம். ஆனால் தி.மு.கவினர் எதை சொல்லி ஓட்டு கேட்பார்கள். தி.மு.க என்றாலே தில்லு, முல்லு கட்சி என்கின்றனர். இன்று தி.மு.கவில் உள்ள அத்தனை பேரும் கோடீஸ்வரர்கள். ஆனால் கழகத்தில் அப்படி இல்லை. நாங்கள் மக்களோடு, மக்களாக உள்ளோம். எனவே அம்மா அவர்களின் சாதனைகளை எடுத்து கூறி நமது வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்வோம் என்று உறுதியேற்போம்.

இவ்வாறு அமைச்சர் பா.பென்ஜமின் பேசினார்.

இக்கூட்டத்தில் ஜி.திருநாவுக்கரசு, ஆர்.சந்திரசேகர், பி.ரவிச்சந்திரன், சீற்றம் ஜெ. ஸ்ரீனிவாசன், பொன்னேரி தயாளன், மணவாளநகர் ஞானகுமார் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பேரூராட்சி கிளை கழக நிர்வாகிகள், பிற அணி நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.