தற்போதைய செய்திகள்

திட்டங்களை நிறைவேற்றுவதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் வழிகாட்டியாக திகழ்கிறது – ப.தனபால் பெருமிதம்

திருப்பூர்

திட்டங்களை நிறைவேற்றுவதில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் வழிகாட்டியாக திகழ்கிறது என்று சட்டப்பேரவை தலைவர் ப.தனபால் பெருமிதத்துடன் கூறினார்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஊராட்சி ஒன்றியம், நம்பியாம்பாளையம் ஊராட்சி பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில், அவிநாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.96.68 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில், சட்டபேரவைத்தலைவர் ப.தனபால், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்து 760 பயனாளிகளுக்கு ரூ.3.87 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இவ்விழாவில் சட்டப்பேரவை தலைவர் ப.தனபால் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழக மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற பல திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தியுள்ளார்ள். வல்லரசு நாடுகளே வியக்கும் வண்ணம் பல புதுமைகளை செய்து பல்வேறு திட்டங்களை வாரி வழங்கி அம்மா அவர்கள் புரட்சி படைத்தார். அம்மா அவர்கள் விட்டுச்சென்ற அனைத்து திட்டங்களையும் அவரது வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி முனைப்புடன் செயல்படுத்தி வருகிறார்.

இந்திய துணைக்கண்டத்தில், இல்லாத வகையில் அம்மா அவர்கள் கல்வித்துறைக்காக 14 வகையான கல்வி உபகரணங்களையும், கால்நடைத்துறையின் சார்பில் ஏழைப்பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக விலையில்லா ஆடுகள் மற்றும் கறவை பசுக்களும், பெண்களின் திருமணத்திற்கு திருமண நிதியுதவியும், திருமாங்கல்யத்திற்கு தங்கத்தினையும் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் எண்ணற்ற திட்டங்களை வழங்கி தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறது.

மேலும், அவிநாசி சட்டமன்ற தொகுதியின் வளர்ச்சிக்காக எண்ணற்ற வளர்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பகுதி பொது மக்களின் 60 ஆண்டு கால கோரிக்கையான அவிநாசி-அத்திக்கடவு திட்டப்பணிகள் துவங்கப்பட்டு சிறப்பான முறையில் நடைபெற்று வருகின்றன. மேலும், குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடற்ற ஏழைகளுக்கு அடுக்குமாடி வீடுகளும் கட்டப்பட்டு வருகிறது. இத்தொகுதி சட்டமன்ற உறுப்பினரான நான் அளித்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகின்றேன். அனைத்து திட்டங்களையும் விரைவாக நிறைவேற்றுவேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாற சட்டபேரவை தலைவர் ப.தனபால் பேசினார்.