தற்போதைய செய்திகள்

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.57.50 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் – அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தொடங்கி வைத்தார்…

திண்டுக்கல்

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.57.50 லட்சம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட என்.எஸ்.நகர், ஜி.எஸ்.நகர் மற்றும் சீலப்பாடி காவலர் குடியிருப்பு ஆயுதப்படை வளாகம் ஆகிய பகுதிகளில் குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் தொடக்க விழா  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் டி.ஜி.வினய் தலைமையில்  நடைபெற்றது.

வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் வளர்ச்சி பணிகளை தொடங்கி வைத்து பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில், செயல்பட்டுக் கொண்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு முன்பாகவே பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து, சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

பருவமழை பொய்த்தன் காரணமாக கோடை காலத்தில் தமிழகம் முழுவதும் தற்போது நிலவி வரும் குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் துறை ரீதியான அலுவலர்களுடன் மாவட்டம் வாரியாக ஆய்வு கூட்டம் மேற்கொண்டார்.

அதில் திண்டுக்கல் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை அதிகமாக நிலவி வருவது குறித்து தெரிவிக்கப்பட்டது. அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில் திண்டுக்கல் மாநகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் ஆத்தூர் அணை தூர்வாரப்பட்டு, மழைநீர் சேகரிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்சமயம் மழை பொய்த்ததின் காரணமாக ஆத்தூர் நீர் தேக்கத்திலிருந்து தண்ணீர் சேமிக்க இயலாத நிலை உள்ளது. இச்சூழ்நிலையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, காவேரி கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலம் திண்டுக்கல் பகுதிக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெறவுள்ள பகுதிகள் தவிர்த்து, கூடுதலாகவும் பல்வேறு பகுதிகளை இணைக்க அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு அடிப்படை தேவையான குடிநீரினை தடையின்றி வழங்குவதற்கு, தொடர்ந்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பு பகுதியில் நீண்ட காலமாக குடிநீர் குழாய் பழுதினால், குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்ததை, எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

பொதுமக்களை காக்கின்ற பணியினை மேற்கொண்டு வரும் காவலர்களின் தேவையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய்கள் பதித்து சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, இக்குடியிருப்பில் வசித்து வரும் 410 காவலர் குடும்பங்களின் குடிநீர் தேவை தற்சமயம் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.

மேலும், திண்டுக்கல் ஊராட்சி பகுதி என்.எஸ்.நகரில் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை, ஜி.எஸ்.நகர் பகுதிகளில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் உடற்பயிற்சி கூடத்துடன் கூடிய அம்மா பூங்கா மற்றும் ஜி.எஸ்.நகர் பகுதியில் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் தரைப்பாலம் என மொத்தம் 4 பணிகள் ரூ.57.50 லட்சம் மதிப்பீட்டில் பொதுமக்களின் பயன்பாடிற்கென தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதில் ஜி.எஸ்.நகர் பகுதியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தரைப்பாலம், சிறுமலை பகுதியிலிருந்து வரும் கழிவு நீர் இப்பகுதி வழியாக கடந்து செல்வதால், பொதுமக்களுக்கு எந்தவித இடையூறுமின்றி தங்கு தடையின்றி கழிவுநீர் செல்வதற்கு இத்தரைபாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு முன்பாகவே அரசின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசால் செயல்பட்டு வரும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் திரு.திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர் க.ஜோஷி நிர்மல்குமார், திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் ரா.சக்திவேல், முன்னாள் மேயர் வி.மருதராஜ், செயற்பொறியாளர் ஆர்.பிரபுராம், நல்லமநாயக்கன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தலைவர் அ.ஜெயசீலன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரேம்குமார், துறை அலுவலர்கள், காவல்துறையை சார்ந்த காவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.