சிறப்பு செய்திகள்

தினகரனை மக்கள் ஓட ஓட விரட்டி அடிப்பார்கள் – துணை முதலமைச்சர் முழக்கம்…

மதுரை

மதுரையில் நடைபெற்ற திருபரங்குன்றம் இடைத்தேர்தல் சம்பந்தமான ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

கழக நிறுவனத் தலைவர், புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவி அம்மாவும் எந்தவொரு அரசியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் வெள்ளோட்டமாக மதுரை மாவட்டத்தில் தான் நிகழ்ச்சியை தொடங்கி வைப்பார்கள் என்பது வரலாற்று உண்மையாகும், இந்த இருபெரும் தலைவர்களின் வீரவரலாற்றில் மதுரை தொடங்கிய அத்துணை நிகழ்ச்சியும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. அதில் முத்தாய்ப்பாக அமைந்த இந்த திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தல் எப்போது வந்தாலும், எப்படி வந்தாலும் அதனை வெற்றித்தேர்தலாக நாங்கள் செயல்படுத்தி காட்டுவோம் என்று திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி கழக நிர்வாகிகள், தாய்மார்கள், கழக செயல்வீரர்கள் என்று அனைவரும் மகிழ்ச்சியோடு இங்கு கூடியிருக்கிறீர்கள்.

திராவிட இயக்கத்தின் பரிணாம வளர்ச்சியாக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அம்மா அவர்களும், ஆவார்கள். சமுதாய சீர்திருத்ததிற்காக வாழ்ந்தவர் தந்தை பெரியார், தமிழ் சமுதாயத்திற்காக பாடுபட்டவர் பேரறிஞர் அண்ணா, ஏழை தாய்மார்களின் கண்ணீரை துடைத்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் இந்த மூவரின் அன்பு, அறிவு, ஆற்றல் ஆகியவற்றை பெற்ற ஒரே தலைவர் என்றால் அது புரட்சித்தலைவி அம்மா ஆவார்கள்.

புரட்சித்தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த இயக்கம் மக்களின் ஆதரவை பெற்று தொடர்ந்து முதலமைச்சராக இருந்து 10 ஆண்டுகாலம் மக்களுக்கு ஒரு சிறப்பான ஆட்சியை புரட்சித்தலைவர் தந்தார். அதனை தொடர்ந்து புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 18 ஆண்டுகாலம் தமிழகமுதலமைச்சராக பொறுப்பேற்று தமிழக மக்களுக்கு ஒரு சிறப்பான ஆட்சியை தந்தார்கள். அதில் குறிப்பாக மக்கள் பயன்பெறும் வகையில் தொலைநோக்கு திட்டங்களை உருவாக்கி 100 ஆண்டுகள் ஆனாலும் எதிர்கால சந்ததிகள் பயன்பெறும் வகையில் நல்லதொரு ஆட்சியை அம்மா அவர்கள் நடத்தினார்கள்.

அதற்கு பிறகு இன்றைக்கு அருமை அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றுக் கொண்டி ருக்கின்ற ஆட்சி அம்மாவின் மக்கள் நல திட்டங்களை அப்படியே செயல்படுத்துகின்ற ஆட்சி, எந்த குறைபாடும் இல்லாத ஆட்சியாக, சாதனை மிகுந்த ஆட்சியாக டெல்லியில் நடைபெறும் பல்வேறு ஆய்வுகளில் தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது என்ற சான்றிதழ் பெறுகின்ற ஆட்சியாக இன்று நடைபெற்று கொண்டிருக்கிறது.

புரட்சித்தலைவர் மறையும் 16 லட்சம் உறுப்பினர்கள் இருந்த நம் இயக்கம், அம்மா அவர்கள் 28 ஆண்டுகாலம் கழகத்தி னுடைய பொதுச்செயலாளராக பொறுப்புற்று இந்த இயக்கத்திற்கு வந்த சோதனைகளையும், வேதனைகளையும் தனதாக்கிக்கொண்டு, இந்த இயக்கத்தை அழிக்க வேண்டுமென்று என்று கங்கனம் கட்டிக்கொண்டிருந்த தி.மு.க. உள்ளிட்ட அரசியல் எதிரிகள், இவர்கள் செய்த சதிகளையெல்லாம் முறியடித்து ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட மாபெரும் எஃகு கோட்டையாக அம்மா அவர்கள் உருவாக்கி தந்திருக்கிறார்கள். இந்த இயக்கத்தில் சாதாரண உறுப்பினராக இருப்பது கூட நமக்கு பெருமையாகும்,

அம்மாவின் மறைவிற்குப்பின் இந்த இயக்கம் எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கம் ஈடேற வேண்டும். அவர்கள் கடந்து வந்த லட்சிய பாதையில் தான் நாமும் தடம் பதித்து நடக்க வேண்டும் செயலாற்ற வேண்டும், கழகத்தையும், ஆட்சியையும் நடத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு நாம் இணைந்து இன்றைக்கு தொண்டர்கள் ஆட்சியாக இந்த இயக்கத்தை உருவாக்கிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், வளர்த்த புரட்சித்தலைவி அம்மாவும், தொண்டர்கள் இயக்கமாகத் தான் உருவாக்கினார்கள், தொண்டர்கள் இயக்கமாகத்தான் வளர்த்தார்கள்.

மக்களாட்சியாகத்தான் புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவி அம்மாவும் மக்களுக்கு 100 சதவிகிதம் பயனுள்ள ஆட்சியா கத்தான் வழிநடத்தினார்கள் அப்படித்ததான் இந்த ஆட்சியும், கட்சியும் இருக்க வேண்டும். 32 ஆண்டுகாலம் மாண்புமிகு அம்மா அவர்களிடம் உடனிருந்து திரும்பவமும் அவர்களே ஆட்சியையும், கட்சியையும் கபளிகரம் செய்யும் சூழல் ஏற்பட்ட போது நாம் வெகுண்டெழுந்து இணைந்தோம் அது தான் வரலாறு

விரைவில் திருப்பரங்குன்றம் தேர்தல் வரவிருக்கிறது. இந்த தேர்தலில் நம் முன்னே நிற்பவர்கள் நம்முடைய அரசியல் எதிரியான தி.மு.க.. இன்னொருவர் துரோகி தினகரன் இந்த தி.மு.க.வை புரட்சித்தலைவர் இந்த இயக்கம் தொடங்கிய காலம் முதல் அடிமேல் அடித்து மரணஅடி கொடுத்து தோற்கடித்திருக்கிறார். இன்று வரை நம்மை எதிர்கின்ற சக்தி தி.மு.க.வுக்கு இல்லை என்ற நிலையை நாம் தொடர்ந்து உருவாக்கியிருக்கிறோம்,

இன்னொருவர் தினகரன் அவர் வெற்றி பெறுவதற்காக வரவில்லை நம்மை பலவீனப்படுத்தி நம்மை தோல்வியடைச் செய்யவதற்காகவே வந்திருக்கிறார். என்றால் நம்முடைய தேர்தல் பணிகள் எவ்வாறு இருக்க வேண்டும். இந்த இயக்கத்தை 45 ஆண்டுகாலம் இரு பெரும் தலைவர்கள் கட்டிக்காத்து இந்த கோட்டையான திருப்பரங்குன்றம் போலிருக்கும் இந்த குன்றை எப்படியாவது குண்டுசியை வைத்து துளைபோட்டுவிடலாம் என்று தினகரன் நினைத்தால் அதனை இங்கிருக்கும் கழக தொண்டர்கள், தாய்மார்கள் அனைவரும் முறியடிப்பார்கள்.

எப்படியாவது நம் இயக்கத்தை பலவீனப்படுத்துவது தான் தினகரனின் ஆசை அது ஒரு போதும் எடுபடாது. தினகரனிடம் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்ந்தனர். அறுவடை செய்யப்பட்ட நெல்மணியை கலத்தில் தூற்றுவோம் அவ்வாறு தூற்றும் போது நல்ல நெல்மணிகள் ஒன்று சேரும், அதில் பதர்கள் எல்லாம் காற்றில் பறந்து போய் விடும். நெல்மணியில் உள்ள பதர்கள் ஒரு போதும் முளைக்காது அதுபோலத்தான் இந்த 18 பேரும்

இவர்களெல்லாம் சேர்ந்து 45 ஆண்டுகாலம் இருபெரும் தலைவர்கள் கட்டிய இந்த எஃகு.கோட்டையை ஆட்டவோ, அசைக்கவோ எந்த காலத்திலும் முடியாது, இங்கு கூடியிருக்கின்ற கழக தொண்டர்கள் தேர்தல் காலத்தில் அதை தகர்த்தெறிந்து தேர்தல் காலத்தில் சுறுசுறுப்பாக பணியாற்றி வெற்றியைப்பெற்றுத்தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது

ஆர்.கே.நகரில் 20 ரூபாய் நோட்டு கொடுத்து ஏமாற்றினார். அதனால் இவர் தொகுதிக்கே போக முடியவில்லை தினகரனுக்கு ஒரு கேள்வி கேட்கின்றேன் 2011ம் ஆண்டு 16 பேரை கட்சியை விட்டு அம்மா நீக்கினார். இவர் ஏன் அம்மாவிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து சேரவில்லை. ஏனென்றால் இவர் அம்மாவுக்கு செய்த துரோகம் தெரிந்ததால் இவர் மன்னிப்பு கடிதம் கொடுத்தாலும் அம்மா சேர்க்கமாட்டார் என்பது எனக்கும் தெரியும், அம்மாவுக்கும் தெரியும், அம்மா அவர்கள் உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் இருந்த போது நாம் அம்மா குணமடைய கோவில் கோவிலாக சென்றோம்.

இவர் எந்த கோவிலுக்கு சென்றார் இவர் அம்மா பெயரைவைத்து கட்சி நடத்த இவருக்கு என்ன யோக்கியதை உள்ளது. அம்மா பெயரை சொல்லிக்கொண்டு திருப்பரங்குன்றம் தொகுதியில் நுழைய முடியுமா முடியாது மக்கள் ஓட ஓட விரட்டி அடிப்பார்கள் இந்த கழகத்தில் தான் கீழே இருக்கும் தொண்டர்கள் எங்களைப்போன்ற உயர்பதவிகளுக்கு வரலாம் ஏனென்றால் தொண்டர்களே ஒரு தொண்டனை முதலமைச்சராக்கிய பெருமை கழகத்திற்கு மட்டும்தான் உண்டு இந்த கட்சியை, உடைக்கவேண்டுமென்றோ, அழிக்க வேண்டுமென்றோ நினைத்தால் நினைத்தவர்கள் படுபாதாளத்தில் தான் விழுந்தார்கள் என்பது தான் வரலாறு.

ஆனால் வருகின்ற திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் எதிர்கட்சியாக இருந்தாலும், துரோகி கட்சியாக இருந்தாலும் அதை விரட்டியடிக்கும் ஆற்றல் அம்மா எங்களுக்கு தந்து;ள்ளார்கள். இந்த தேர்தலில் கழக தொண்டர்கள் கவனமாக செயல்படவேண்டும். கழகம் தான் நமக்கு உயிர்மூச்சு என்று நினைத்து அனைவரும் ஒருங்கிணைந்து கூடி வாழ்நதால் கோடி நன்மை என்று எண்ணி இது வரை யாரும் பெற முடியாத வெற்றியினை நீங்கள் தேடிதத்தர வேண்டும்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.