தற்போதைய செய்திகள்

திமுகவின் பொய் பிரசாரங்களை முறியடித்து 2021-ல் கழகம் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் – அமைச்சர் கே.பி.அன்பழகன் திட்டவட்டம்

தருமபுரி

தி.மு.க.வின் பொய் பிரச்சாரங்களை முறியடித்து 2021-ல் கழகம் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தருமபுரி ஒன்றியத்திற்கு உட்பட்ட செங்கல்மேட்டில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் முருகேசன் வரவேற்றார்.

இதில் முன்னாள் அமைச்சர் வி.எஸ்.விஜய், தலைமை கழக பேச்சாளர் அதிரடி கே.பி. ஆறுமுகம், தருமபுரி மாவட்ட கழக செயலாளரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான கே.பி.அன்பழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசியதாவது:-

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். உயிரோடு இருக்கும்வரை தீய சக்தி கருணாநிதி ஆட்சிக்கு வரமுடியவில்லை. எம்.ஜி.ஆர். கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்துவதற்கு புரட்சித்தலைவி அம்மா அவர்களை அடையாளம் காட்டி விட்டு சென்றார். அதன்பிறகு அம்மா அவர்கள் இந்த இயக்கத்தை வழிநடத்தி கழக நிர்வாகிகள் தொண்டர்களை கண்ணை இமை காப்பதுபோல் கட்டிக்காத்தார்.

ஒரு தகுதி வாய்ந்த தலைவருக்கு நாம் பிறந்தநாள் விழா எடுத்துக் கொண்டிருக்கிறோம். தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை வழங்கியவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். தமிழகத்தில் தொடர்ந்து அம்மாவின் ஆட்சி 19 ஆண்டுகாலம் நடைபெற்று வருகிறது. அம்மா அவர்கள் கொண்டு வந்த அனைத்து திட்டங்களும் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த அவர்களுக்கு கொண்டு வரப்பட்ட திட்டமாகும்.

தருமபுரியில் ஆயிரம் ஏக்கரில் சிப்காட் தொழிற்சாலை அமைக்க ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழக அரசின் அனைத்து திட்டங்களும் தமிழக மக்களுக்கு சீராக சென்று சேர வேண்டும் என்று இந்த பட்ஜெட்டில் அனைத்து துறைகளுக்கும் சீரான வகையில் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். 2 கோடியே 5 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்டது. இந்தியாவில் 18 மாநிலங்கள் பெரிய மாநிலங்கள்.

மற்றவை சிறிய மாநிலங்கள் ஆகும். மத்திய அரசானது நல் ஆளுமை விருது தமிழகத்துக்கு வழங்கி கவுரவித்தது. முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் சிறப்பான செயல்பாட்டால் தமிழ்நாடு அரசு இந்தியாவின் தரவரிசையில் முதலிடத்தை பெற்றுள்ளது. முதலீட்டாளர்களை ஈர்த்து 10000 பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தந்தவர் முதலமைச்சர் ஆவார். தமிழகத்திற்கு 11 மருத்துவக் கல்லூரி பெற்றுத் தந்துள்ளார்.

தகுதி வாய்ந்த அனைவருக்கும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது அம்மாவின் எண்ணம். ஆனால் வீட்டோடு சேர்த்து அடுக்குமாடி வீடுகள் கட்டி அவர்களுக்கு பட்டா வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. 20 லட்சம் பேருக்கு மேல் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்க கழக அரசு உத்தரவிட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் 7 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு விட்டது. இன்னும் மூவாயிரம் பேருக்கு விரைவில் வழங்கப்படும்.

தருமபுரி மாவட்டத்தில் உணவு பூங்கா அமைக்கப்பட உள்ளது. அனைத்து துறைகளிலும் இந்தியாவிலேயே முதன்மை இடத்தில் உள்ளது தமிழகம். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத திமுகவினர் வருகின்ற கழக அரசு மீது பழி சுமத்தி ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதற்காக பல சூழ்ச்சிகளை செய்வார்கள். தி.மு.க.வின் பொய் பிரச்சாரம் அத்தனையும் முறியடித்து, வருகின்ற 2021 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.