தற்போதைய செய்திகள்

திமுகவில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு எதுவுமே கிடையாது – டாக்டர் ராமதாஸ் கடும் தாக்கு…

திண்டுக்கல்:-

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி கழக கூட்டணியின் பா.ம.க வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டக் கழகச் செயலாளரும் மாநகராட்சி முதல் மேயருமான மருதராஜ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் வனத் துறை அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளருமான திண்டுக்கல்.சி. சீனிவாசன், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா விசுவநாதன் ஆகியோர் பேசினர்.

இக்கூட்டத்தில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

வேட்பாளர் ஜோதிமுத்து வெற்றிக்காக அயராது பாடுபட்டு வருகின்ற அ.இ.அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகளுக்கு எனது நன்றி. அ.இ.அ.தி.மு.க.வில் தான் கடைசி தொண்டன் கூட உண்மையாக இருப்பார்கள். சூதுவாது அவர்களுக்கு தெரியாது. அதனால் தான் அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்த போது இது இயற்கையான கூட்டணி என்றேன். அ.இ.அ.தி.மு.க தொண்டர்கள் உயிரைக் கொடுத்து பணியாற்றுவார்கள். ஆனால் தி.மு.க.வினரோ மாலை போட்டு கழுத்து அறுப்பார்கள். இந்தக் கூட்டணி மகா கூட்டணி, மெகா கூட்டணி, வெற்றிக்கூட்டணி. திண்டுக்கல் தொகுதி அ.இ.அ.தி.மு.க.வின் கோட்டை. இந்த கோட்டையில் யாரும் ஓட்டை போட முடியாது. இங்கு அ.இ.அ.தி.மு.க கட்டுக்கோப்பாக இருக்கும்.

வறுமையை ஒழிப்பதற்காக ஏழை குடும்பங்களுக்கு மாதம் ரூ 6 ஆயிரம் வீதம் வருடத்திற்கு 72 ஆயிரம் வழங்கப்படும் என ராகுல் காந்தி கூறியுள்ளார். அதில் குடும்ப வருமானம் ரூ.1000 மட்டுமே இருக்க வேண்டுமாம். இந்த காலத்தில் ஆயிரம் ரூபாயை வைத்து குடும்பம் நடத்த முடியுமா? மக்களை ஏமாற்றும் வேலை இது. ராகுலின் கொள்ளுத்தாத்தா நேரு காலத்தில் இருந்தே வறுமையை ஒழிப்போம். வறுமையை ஒழிப்போம் என்கிறார்கள். 60 ஆண்டு காலமாக காங்கிரஸ் தானே மத்தியில் ஆட்சி புரிந்தது. வறுமையை ஒழித்தார்களா? மத்தியில் தி.மு.க 18 ஆண்டு காலம் ஆட்சியில் பங்கு வகித்தது. பதவி சுகம், ஆட்சி கட்டில் என்பார் கருணாநிதி. அதை இந்த தேர்தலோடு தி.மு.க மறந்துவிட வேண்டியது தான். இனி தி.மு.க தேறாது. மு.க.ஸ்டாலின் முதிர்ச்சி இல்லாமல் பேசி வருகின்றார். அக்கட்சியில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு எதுவும் இல்லை.

நமது தேர்தல் அறிக்கையில் தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை அறிவித்து உள்ளோம். அதனை திமுக 90% காப்பி அடித்து உள்ளனர். திமுகவின் தேர்தல் அறிக்கை வெறும் குப்பை என்று தான் சொல்ல வேண்டும். ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு துணை போனவர்கள் தான் தி.மு.க.வினரும் காங்கிரசும்.தமிழகத்தில் முதல்வரும், துணை முதல்வரும் ஏழ்மை ஒழிப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

பொங்கல் பரிசுடன் ரூ. 1000, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் குடும்பத்திற்கு ரூ. 2000. இனி மாதந்தோறும் ரூ.1500 மற்றும் விவசாயிகளுக்கு நல்ல திட்டங்கள் என பல வகையில் சிறப்பாக திட்டங்களை அமல்படுத்தி வருகின்றனர்.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தி.மு.க காங்கிரஸ் கூட்டணி வாக்களித்தால் அவர்கள் உங்களை ஏமாற்றி விடுவார்கள். ஆனால் அ.இ.அ.தி.மு.க கூட்டணிக்கு வாக்களித்தால் தமிழக முதல்வரிடம் கூறி அவரது குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இக்கூட்டத்தில் வேடசந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம், ஆவின் சேர்மன் ஏ.டி.செல்லச்சாமி, ஒன்றிய செயலாளர் ஜெயசீலன், அகரம் பேரூர் கழக செயலாளர் சக்திவேல், அரசு வழக்கறிஞர்கள் மனோகரன், பழனிச்சாமி மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.