சிறப்பு செய்திகள்

திமுக கூட்டணிக்கு முடிவு கட்டுங்கள் – வாக்காளர்களுக்கு முதல்வர் வேண்டுகோள்…

அரியலூர்:-

ஊழல்வாதிகளே மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதால் தி.மு.க. கூட்டணிக்கு முடிவு கட்டுங்கள் என்று வாக்காளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் பொ.சந்திரசேகரை ஆதரித்து குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியதாவது:-

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும். மத்தியில் நிலையான உறுதியான அரசு அமைந்திட வேண்டும் என்பதற்காக பாரதிய ஜனதா கட்சியுடன் பல கட்சிகள் ஒருங்கிணைந்து கூட்டணி அமைத்து இந்தத் தேர்தலை சந்திக்கிறது. இந்தத் தேர்தலில் மகத்தான வெற்றிபெற்று நரேந்திர மோடி மீண்டும் பாரதப் பிரதமராக வர நீங்கள் அனைவரும் பேரதரவை அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் எப்போது பேசினாலும் முதலமைச்சர் பழனிசாமி உடனடியாக பதவி விலக வேண்டும் என கூறுகிறார். அவர் முதலமைச்சர் பதவி மீது ஒரு கண்ணாகவே இருக்கிறார். 24 மணி நேரமும் முதலமைச்சர் பதவி கனவிலேயே இருக்கிறார். மக்கள் அளித்தால் அதை அவர் வாங்கிக் கொள்ளட்டும். நாங்கள் வேண்டாம் என்றா சொல்லுகிறோம். எனக்கு பதவி ஆசை கிடையாது. மக்கள் அளித்த பேராதரவின் மூலமாகவும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஒட்டுமொத்த ஆதரவோடும் அம்மாவின் ஆசியோடு முதலமைச்சராக பொறுப்பேற்று மக்கள் பணியாற்றி வருகிறேன்.

மக்கள் தான் யாரை முதலமைச்சர் ஆக்குவதென்று முடிவு செய்வார்கள். மக்கள் தான் நீதிபதிகள். அவர்கள் அளிக்கின்ற தீர்ப்பை தான் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஸ்டாலின் எப்போதுமே பொய்யைத்தான் சொல்லி வருகிறார். அவர் சொல்வதில் எதுவுமே உண்மை இல்லை என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.நான் முதலமைச்சராக பொறுப்பேற்று கடந்த 2 ஆண்டுகாலத்தில், எதிர்கட்சிகளின் தூண்டுதலின் பேரில் சுமார் 35,000-க்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடைபெற்றன. அந்த போராட்டம் நடத்தியவர்களை அழைத்துப்பேசி அவர்களை சமாதானப்படுத்தி அதில் நிறைவேற்றக்கூடிய கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றித் தந்து அதிலும் வெற்றி கண்ட அரசு அம்மாவின் அரசு.

அரசிடம் கோரிக்கை வைத்து ஒரு அமைப்பினர் போராட்டம் நடத்தினால் அதற்கு பின்புலமாக இருந்து தூண்டுவிடுவது தி.மு.க. தான். மக்கள் மனதில் இடம்பெற வேண்டும் என்றால் மக்களுக்கான நல்லபல திட்டங்களை தீட்டி மக்கள் பணி செய்திட வேண்டும். அப்போதுதான் அந்த அரசு மீது மக்களுக்கு முழு நம்பிக்கை ஏற்படும். அந்த வகையில் அனைத்துதரப்பு மக்களின் ஒட்டுமொத்த நம்பிக்கை பெற்ற அரசு அம்மாவின் அரசு.

மு.க.ஸ்டாலின் தந்தை மு.கருணாநிதி தி.மு.க. தலைவராக இருந்தார். அவர் உடல் நலம் குன்றி இருந்தபோது கூட தலைவர் பதவியை ஸ்டாலினுக்கு தரவில்லை. ஸ்டாலின் செயல் தலைவராகதான் இருந்தார். கருணாநிதி மறைவிற்கு பின்புதான் ஸ்டாலின் தி.மு.க. தலைவரானார். தனது தந்தையே இவரை நம்பாமல் தான் இருந்தார். அப்படி இருக்கையில் நாட்டு மக்கள் இவரை எப்படி நம்புவார்கள் என்பதை வாக்காளப் பெருமக்களாகிய நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். கண்ணுக்கு தெரியாத காற்றிலேயே ஊழல் செய்தவர் இந்தப் பகுதியை சார்ந்த ஆ.ராசா. இவர் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் அ.இ.அ.தி.முக.வை பார்த்து ஊழல் என்று சொல்லுவதற்கு என்ன தகுதி இருக்கிறது.

நாங்கள் அரசு செய்த சாதனைகளையும் நலத்திட்டங்களையும் சொல்லி வாக்கு கேட்டு வருகிறோம். ஆனால் ஸ்டாலின் எதைசொல்லி வாக்கு கேட்கிறார் என்று தெரியவில்லை. அதாவது நாட்டு நடப்புகளை சொல்லி வாக்கு கேட்க வேண்டும். அல்லது திட்டங்களை சொல்லி வாக்கு கேட்க வேண்டும். இந்த இரண்டையும் தவிர்த்து எங்கள்மீது குறைசொல்லி மட்டுமே அவர் வாக்கு கேட்டு வருகிறார். இதை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். அ.இ.அ.தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள மெகா கூட்டணியை பார்த்து ஸ்டாலின் அரண்டுபோய், மிரண்டுபோய் பயந்து ஏதேதோ பேசி வருகிறார். என்ன பேசுகிறோம் என்று தெரியாமலேயே பேசி வருகிறார். இந்தத் தேர்தலோடு தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுக்கு ஒரு முடிவு கட்டுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்.

தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி கொள்கை பிடிப்பில்லாத கூட்டணி. முரண்பட்ட கூட்டணி. கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் எதிர்த்து போட்டியிடுகிறது. ஆனால் தமிழகத்தில் இவ்விரு கட்சிகளும் ஒரே கூட்டணியில் அங்கம் வகித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ்க்கும் கம்யூனிஸ்ட்க்கும் கேரளாவில் ஒரு கொள்கை தமிழ்நாட்டில் ஒரு கொள்கை. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இதில் யாரை ஆதரிக்கப் போகிறார். பாலியல் குற்றங்கள் குறித்து ஸ்டாலின் பேசுகிறார். இதே பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் தனது வீட்டில் பணி செய்து வந்த பெண்ணிடம் பாலியல் குற்றம் செய்ததாக வழக்கு பதியப்பட்டு தற்போது நீதிமன்றத்தால் 10 ஆண்டுகாலம் அவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அம்மா வழியில் செயல்படும் இந்த அரசு விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் நவீன முறையில் விவசாயத் தொழிலை மேற்கொள்ள பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. இந்த திட்டங்கள் மூலமாக விவாசயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறிகளை விற்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்குவதற்கு, சந்தை ஏற்படுத்துவதற்காக 10 மாவட்டங்களில் இருக்கின்ற விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற காய்கறிகள் மற்றும் பழங்களை அங்கேயே விற்பனை செய்யலாம். ஆன்லைனில் விற்பனை செய்யலாம்.

விளைபொருட்களுக்கு குறைந்த விலை வருகின்ற போது பாதுகாத்து வைப்பதற்காக குளிர்பதன கிடங்குகளும் கட்டித் தரப்பட்டுள்ளது. விவசாய சந்தைகளின் மூலமாக சேகரிக்கப்பட்ட காய்கறிகள் எல்லாம் ஒரே இடத்தில் விற்பனை செய்வதற்கும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் விவசாயிகள் நல்ல விலைக்கு விற்கக்கூடிய சூழ்நிலையினை உருவாக்கும் வகையில் சென்னைக்கு அருகே ரூ.2,000 கோடியில் உணவுப் பூங்கா ஒன்று தனியார் பங்களிப்போடு அமைக்கப்படும்.

அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலங்கள், செவிலியர் கல்லூரி சிமெண்ட் ஆலைகளுக்கு இயக்கப்படும் லாரிகள் மூலம் அவ்வப்போது ஏற்படும் விபத்துகளை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே, சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் பொ. சந்திரசேகருக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கண்ட, புரட்சித்தலைவி அம்மா அவர்களால் கட்டி காக்கப்பட்ட சின்னமான இரட்டைஇலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.