தற்போதைய செய்திகள்

திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு தோல்வியை பரிசாக கொடுப்போம்- அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் சூளுரை…

ராமநாதபுரம்:-

தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு தோல்வியை பரிசாக கொடுப்போம் என்று அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் கூறினார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கழக மருத்துவரணி துணை செயலாளரும், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சருமான டாக்டர் எம்.மணிகண்டன் ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் நாடே எதிர்பார்க்கும் தேர்தலாக அமைய உள்ளது. இந்த தேர்தலில் சுயநல அரசியல்வாதிகளின் முகத்திரையை கிழித்தெறிய வேண்டும். தமிழினத் துரோகிகளின் சதித்திட்டங்களை உடைத்தெறிய வேண்டும். இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் செயல்படும் கழக அரசு ஏழை, எளிய மக்களின் வேதனைகளை தீர்க்கின்ற அரசாகவும் விவசாயிகள், மீனவர்களின் கவலைகளை போக்கின்ற அரசாகவும் உள்ளது. தாய்மார்கள் நேசிக்கின்ற ஆட்சி என்றால் அது கழக ஆட்சிதான் என பெருமைப்பட சொல்லலாம். சாதனை திட்டங்களை தமிழர்களுக்கு தந்த இயக்கம் நமது கழகம் தான்.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாடே புகழும் அளவிற்கு வெற்றியை ஒவ்வொரு தொண்டர்களும் பெற்றுத் தரவேண்டும். ராமேஸ்வரத்தில் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம் பெயரில் ஒரு கலைக் கல்லூரியை தந்த கழக அரசிற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக இருந்தது. முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியால் இன்று வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எனது கோரிக்கையினை ஏற்று பாரத பிரதமர் நரேந்திர மோடியிடம் முதலமைச்சர் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி வேண்டும் என கோரிக்கை வைத்தார். நமக்கான பிரதமரை நாம் தேர்ந்தெடுத்தால் தான் நமது மாவட்டத்திற்கு மருத்துவ கல்லூரியினை கொண்டு வர முடியும்.

கழகம் நிறுத்தும் வேட்பாளர் யாராக இருந்தாலும் அவர்களின் வெற்றிக்கு நிர்வாகிகள் உழைக்க தயாராக வேண்டும். சாதி, மத பேதமின்றி கழக பணியாற்ற வேண்டும். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிக் கனியை பறித்து இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் பாதத்தில் சமர்ப்பிப்போம். நல்லரசு காட்டிய வேட்பாளரால் தான் நாட்டை வல்லரசாக்க முடியும். திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை டெபாசிட் இழக்க செய்து படுதோல்வியை அவர்களுக்கு பரிசாக கொடுப்போம்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் பேசினார்.