தற்போதைய செய்திகள்

திமுக தேர்தல் அறிக்கை வெற்றுக் காகிதம் – சிவகங்கையில் எச்.ராஜா பேட்டி…

சிவகங்கை

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெற்றுக் காகிதம் என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.

சிவகங்கையில் கழக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் ஜி.பாஸ்கரன், மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன் எம்.பி., பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் முடிவில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சி 19.5 சதவீத வாக்குகள் பெற்றது. 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளுடன் சேரும் நிலையில் 40 நாடாளுமன்ற தொகுதி மட்டும் இல்லாமல் 18 சட்டமன்ற இடைத் தேர்தலிலும் மெகா கூட்டணியே வெற்றிபெறும்.இந்த வெற்றிக்கு மத்தியில் சிறப்பாக ஆட்சி புரிந்து வரும் பிரதமர் மோடி மக்களுக்கு கொண்டு வந்த நல்ல திட்டங்களும் , மாநிலத்தில் ஆட்சி புரிந்துவரும் எடப்பாடி கே.பழனிசாமி மக்களுக்கு செய்து வந்த நலத்திட்டங்களின் பயனாகவே இந்த வெற்றி அமைய இருக்கின்றது.

தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை ஒரு வெற்றுக் காகிதம். ஒரு கோடி பேருக்கு மக்கள் பணியாளர் பதவியும், 50 லட்சம் பேருக்கு சாலை பணியாளர் பணியும் வழங்க இருப்பதாக கூறுகின்றனர். இந்த இரண்டு பணிகளுக்கு மட்டும் வேலையை செய்ய இடம் இருக்கிறதா என்றால் இல்லை. அதற்கான வருமானத்தை கொடுக்கும் வழி முறைகள் இருக்கின்றனவா என யோசித்தால் அதுவும் இல்லை. தமிழ்நாட்டிலே சுமார் 1 கோடி 50 லட்சம் குடும்பங்கள் தான் இருக்கும். இதிலிருந்தே தெரிகிறது அவர்களின் தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் வெற்றுக் காகிதம் என்று. சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராகவும் இருந்த ப.சிதம்பரம் எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வரவும் இல்லை. அப்போதைக்கு தொகுதி மக்களை கண்டுகொள்வதும் இல்லை.

இவ்வாறு எச்.ராஜா கூறினார்.

இந்நிகழ்ச்சியில் மானாமதுரை தொகுதி வேட்பாளர் நாகராஜ் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சித் தலைவர்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.