தற்போதைய செய்திகள்

திராவிட இயக்கத்திற்கு அழியாத புகழ் சேர்த்தவர் அம்மா – வைகைச்செல்வன் பேச்சு…

சேலம்:-

இதயதெய்வம், புரட்சித்தலைவி அம்மாவின் 71-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம், சேலம் புறநகர் மாவட்டம், கெங்கவல்லி, தம்மம்பட்டியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் ஆர்.இளங்கோவன் தலைமை தாங்கினார். ஒன்றியக் கழகச் செயலாளர் கூடமலை வி.ராஜா வரவேற்புரையாற்றினார். கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கே.காமராஜ், கெங்கவல்லி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.மருதமுத்து, தலைமைக் கழகப் பேச்சாளர் இரா.அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கழகக் கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், கழக செய்தி தொடர்பாளர், நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரக்குழு பொறுப்பாளருமான டாக்டர் வைகைச்செல்வன் பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா 1981-ல் அ.தி.மு.க.வில் இணைந்து கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார். 1984-ம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பேரறிஞர் அண்ணா அங்கம் வகித்த அதே 185-வது எண் கொண்ட இருக்கை அளிக்கப்பட்டது. பேரறிஞர் அண்ணாவைப் போல, புரட்சித்தலைவி அம்மா, 8 மொழிகளில் புலமை பெற்று ஒரு பேரறிஞருக்கு உரிய அத்தனை அறிவுசார்ந்த பெட்டகமாகவும், எதனையும் எளிதில் புரிந்து கொண்டு துரிதமாக நடவடிக்கை எடுப்பதில் தலைசிறந்த தலைவியாகவும், உலகத் தலைவர்களின் கவனத்தை ஈர்த்து புகழ் பெற்று விளங்கியவர்.

தமிழிலும், ஆங்கிலத்திலும் அழகாகப் பேசி, எழுதி அரிய பல சாதனை சரித்திரம் அறிஞர் அண்ணா அரசியல் உலகில் படைத்தார் என்றால், அவர் தம் பரிணாம வளர்ச்சியாக, வழித்தோன்றலாக திகழ்ந்திடும் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தலைவி அம்மா அவர்களோ தமிழ், ஆங்கிலம் மட்டுமின்றி பன்மொழிப் புலமைத் திறன் பெற்ற வித்தகராய் விளங்கி சாதனை படைத்து திராவிட இயக்கத்திற்கு அழியாத புகழ் சேர்த்தவர்.

மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றிய போது, மாநில உரிமைகள் தொடர்பாகப் பல முக்கிய விவாதங்களில் கலந்து கொண்டு அற்புதமாகப் பேசியவர். 1984 மே 5ல் கல்வி, கலாச்சாரம் மற்றும் சமூக வளர்ச்சி அமைச்சகத் திட்டம் குறித்த விவாதத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனை மேற்கோள் காட்டி, தமிழுக்கு ஏன் செம்மொழி அந்தஸ்து தர வேண்டும் என்ற அவருடைய பேச்சு அனைவரையும் ஈர்த்தது. அவருடைய ஆங்கிலப் பேச்சும், இந்தி மொழியிலிருந்த ஆற்றலும், இந்திராகாந்தி முதல் எல்லாத் தலைவர்களையும் கவர்ந்தவர்.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அரசியலுக்கு வருகின்றபோதே மக்களுக்காக நான், மக்களால் நான் என்ற உறுதிமொழியோடு தான் அரசியலில் கால் பதித்தார். மக்கள் பணியில் தூய்மையும், அரசு பணியில் நேர்மையும் இருக்க வேண்டும் என நினைத்து செயல்படத் துவங்கினார். சத்துணவு உயர்மட்ட குழு உறுப்பினர், கொள்கை பரப்புச் செயலாளர், ராஜய்சபா உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், கழகப் பொதுச் செயலாளர், எதிர்க்கட்சி தலைவர், முதலமைச்சர் என படிப்படியாக சுயமாக உழைத்து அரசியலில் முன்னேறியவர் புரட்சித்தலைவி அம்மா. தன் வாழ்க்கையிலும், பொது வாழ்விலும் எளிமையாகவும், எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாகவும் இருந்தவர் புரட்சித்தலைவி அம்மா.

புரட்சித்தலைவரின் மறைவிற்குப் பிறகு 1989ம் ஆண்டில் அ.தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பேற்று பொதுச்செயலாளராகப் பதவியேற்றார். 1984 முதல் 1989 வரை தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகவும், பின்னர் தமிழ்நாட்டின் 2வது பெண் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பிறகு அம்மா அவர்களின் தலைமையிலான அ.தி.மு.க ஐந்தே ஆண்டுகளில் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் கட்சியையும், ஆட்சியையும் 15 ஆண்டுகள் நிர்வாகம் செய்தார். ஆனால் அம்மா அவர்களின் முழுமையான ஆளுமையின் கீழ் கால் நூற்றாண்டுகளைக் கடந்திருக்கிறது.

அ.தி.மு.க. அனைத்துத் தேர்தல்களையும் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் எதிர்கொண்டவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆனால் 2014 மக்களவைத் தேர்தல், 2016 சட்டமன்றத் தேர்தல்களில் தனித்து நின்று வெற்றிச் சரித்திரத்தைப் படைத்தவர் அம்மா அவர்கள். அசாத்தியம் என்று நினைத்ததை அவர் தனி நபராகச் சாத்தியமாக்கினார். தலைமைப்பண்புகள் இல்லாமல் கட்சியின் தலைவராகத் தொடர்ந்து இருப்பது சாத்தியமில்லை. பாலின, மத, இன, கட்சி பேதங்களுக்கு அப்பாற்பட்ட வீச்சை அவரது ஆளுமை அடைந்ததற்கு அம்மாவின் சொந்த முயற்சியும், மதியூகமும் தான் அம்மா அவர்களின் வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது.

இந்திய அரசியல் வரலாற்றில் சாதனை படைத்த முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பெற்று, அதை ஒவ்வொரு செயலிலும் நிரூபித்து காட்டிய ஒரே தலைவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மட்டும்தான். ஒரு அரசியல் இயக்கத்தின் தலைவராக, ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வென்று காட்டிய அதிசயங்கள் அனைவரின் மனங்களையும் விட்டு இன்னும் அகலாதவை. காலம் வழங்கிய கருணைத்தாயாக, மகத்தான ஆளுமை படைத்த தலைவியாக திகழ்ந்த, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் தமிழக மக்களின் மனங்களில் என்றென்றும் மறக்க முடியாத மாபெரும் தலைவியாக நிலைத்து நிற்பார்.

இவ்வாறு கழகக் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வைகைச்செல்வன் பேசினார்.