திருச்சி

திருச்சியில் ஆடிப்பெருக்கு விழா கோலாகலம் – சுமங்கலி பெண்கள் தாலி கயிற்றை மாற்றி வழிபாடு…

திருச்சி:-

திருச்சியில் அம்மா மண்டபம் உள்பட காவிரி கரையோர பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா உற்சாகம் பெருக்கெடுத்துள்ளது. இதில் புதுமண தம்பதிகள் மற்றும் கன்னிப்பெண்கள் ஏராளமானோர் குவிந்தனர்.

ஆடி மாதம் 18-ந்தேதி ஆடிப்பெருக்கு விழாவாக கொண்டாடப்படுகிறது. காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் காவிரி ஆறு நுழையும் ஒகேனக்கல் முதல் கடலில் சங்கமிக்கும் பூம்புகார் வரை காவிரி கரையோரங்களில் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழா நேற்று கொண்டாடப்பட்டது.

கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. 50 அடியை தாண்டியுள்ள அணையில் இருந்து நேற்று முந்தினம் முதல் ஆடிப்பெருக்கு விழாவுக்காக 2 ஆயிரம் கன அடி தண்ணீர் கூடுதலாக திறக்கப்பட்டுள்ளது.திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் புனித நீராடுவதற்காக வந்த பக்தர்கள் அங்கு மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த ‌ஷவர்கள் மற்றும் தொட்டிகளில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீரில் நீராடினர்.

பின்னர் அவர்கள் படித்துறையிலும், ஆற்றின் மணற் பரப்பிலும் வாழை இலை விரித்து அதில் மஞ்சள் பிள்ளையார் வைத்து, தேங்காய், காதோலை கருக மணி, வளையல்கள், அரிசி, வெல்லம், பழ வகைகள் உள்பட மங்கல பொருட்களை படையலிட்டு பூஜை செய்தனர். பின்னர் அவற்றை ஒரு வாழை மட்டையில் வைத்து ஆற்றில் தேங்கியிருந்த தண்ணீரில் மிதக்க விட்டனர். காவிரி ஆற்றிற்கும் தீபாராதனை காட்டி வழிபட்டு நன்றி தெரிவித்தனர்.

புதுமண தம்பதிகள் தாங்கள் திருமணத்தின் போது அணிந்த மாலைகளை ஆற்றில் கொண்டு வந்து விட்டனர். மூத்த சுமங்கலி பெண்களிடம் புதுமண தம்பதிகள் ஆசி பெற்றனர். மேலும் சுமங்கலி பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக் கொண்டனர்.

அதேபோல திருமணமாகாத இளம்பெண்களும் தங்களுக்கு திருமணம் நடக்க வேண்டி கையில் மஞ்சள் கயிறு கட்டிக் கொண்டனர். மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும் வகையில் ஆற்றங்கரையோரம் உள்ள வேப்ப மரத்திலும் மஞ்சள் கயிறு கட்டினர். சுமங்கலி பெண்கள் தாலிக்கயிற்றை மாற்றிக் கொண்டனர்.

ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி ஆறு படித்துறைகளில் கூட்டம் அலை மோதியது. வழிபாடு முடிந்ததும் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து கொண்டு வந்திருந்த எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, சர்க்கரை பொங்கல் வைத்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து உண்டு மகிழ்ந்தனர்.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு மற்றும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடந்து விடாமல் தவிர்ப்பதற்காக படித்துறை அருகே முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் டூம் கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன.காவிரி கரையிலேயே கட்டுப்பாட்டு அறை அமைத்து ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதேபோல் திருச்சி காவிரி கரையோரமான கருட மண்டபம், கீதாபுரம், ஓடத்துறை, அய்யாளம் மன் படித்துறை, திருவளர்ச்சோலை, கம்பரசம்பேட்டை, பெட்டவாய்த்தலை, பனங்காவேரி, திருப்பராய்த்துறை, தொட்டியம், ஸ்ரீராமசமுத்திரம், முசிறி, முக்கொம்பு காவிரி ஆற்றிலும் ஆடிப்பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.