தற்போதைய செய்திகள்

திருச்சியில் ஒரே இடத்தில் 3 பேருக்கு மணிமண்டபம் – தேர்வு செய்யப்பட்ட இடத்தை 3 அமைச்சர்கள் ஆய்வு

திருச்சி:-

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சர் ஏ.டி.பன்னீர்செல்வம், எம்.கே.தியாகராஜபாகவதர் ஆகியோருக்கு மணி மண்டபம் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதன் பின்னர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அவருடைய ஆட்சி காலத்தில் நம் நாட்டில் சுதந்திரத்திற்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், சமுதாய மேம்பாட்டிற்காகவும், தமிழ்மொழி வளர்ச்சிக்கும் வித்திட்ட பல ஆன்றோர்களையும், சான்றோர்களையும், நாட்டுக்காக உழைத்த நல்லோர்களையும் போற்றுவிக்கும் விதமாக அதிக மணி மண்டபங்களையும், அவர்களுக்கு சிலைகளையும், நிறுவினார். அவர்களின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் எனவும் அறிவித்தார். அதன்படி தமிழ்நாட்டில் 69 மணி மண்டபங்கள், மொழி போராட்டத்தின் போது இன்னுயிர் ஈத்தவர்களுக்கு சிலைகள், 5 அரங்குகள், 4 நினைவுச்சின்னங்கள், 1 நினைவுத்தூண் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழியிலே சிறப்பாக ஆட்சி செய்து வரும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு மெரினா கடற்கரையிலே ரூ.50 கோடியே 8 லட்சம் மதிப்பில் நினைவிடம் கட்டப்படும் என அறிவித்தார். அதற்கான கட்டுமான பணி 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. அம்மா அவர்கள் வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற ரூ.32 கோடி செலவில் மேற்கொள்ள அரசு ஆணை வெளியிடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடலூரில் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டு முதலமைச்சரால் மிக விரைவில் திறக்கப்படவுள்ளது. சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் அமைக்கும் பணி 95 சதவீதம் நிறைவுபெற்றுள்ளது. பாரத மாதா சிலையுடன் கூடிய மணி மண்டபம் தருமபுரி மாவட்டம் பாப்பாரபட்டியில் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கி.பி. 7-ம் நூற்றாண்டில் தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களில் களம் பல கண்டு, வெற்றிகள் பல கொண்டு ஆட்சி செய்தவர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் ஆவார். அவரின் வீரத்தை பெருமைப்படுத்தும் விதத்தில் 1996- ம் ஆண்டு திருச்சி மாநகரில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அன்னாருக்கு அரசு சார்பில் சிலை ஒன்றை நிறுவினார். அம்மா அவர்கள் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 14.02.2019 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன்கீழ் திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு ரூ.1 கோடி மதிப்பீட்டில் திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபமும், 1 நூலகமும் அமைக்கப்படும் என அறிவித்தார்.

சென்னை மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும், உள்துறை மற்றும் நிதித்துறை அமைச்சராக பணி புரிந்து ஆங்கிலேய அரசால் “ராவ்பகதூர்” மற்றும் “சர்” பட்டங்களையும் பெற்றவர். சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் நீதிகட்சியின் வைரத்தூண் என்று அழைக்கப்பட்ட சர்.ஏ.டி. பன்னீர் செல்வத்துக்கு திருச்சியில் திருவுருவச் சிலையுடன் கூடிய மணி மண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் சட்ட பேரவையில் விதிஎண் 110ன் கீழ் 14.02.2019 அன்று அறிவித்தார்.

தமிழ்திரைப்படத்துறையின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற கதாநாயகனும், மிகச்சிறந்த கர்நாடக சங்கீத தமிழ் பாடகருமான தியாகராஜ பாகவதர். இவர் தென்னிந்திய திரைப்படத்துறையின் முதல் சூப்பர் ஸ்டார் ஆவார். 1934-ம் ஆண்டு பவளக்கொடி என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிலும் 1944-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இவரின் சாதனை படமான ஹரிதாஸ் 3 ஆண்டுகள் சென்னையில் ஒரே திரையரங்கில் திரையிடப்பட்டு 3 தீபாவளிகளை கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை படைத்தது.

திரைப்படத்துறையில் அன்னாரது பன்முக பங்களிப்பினையும், சாதனையையும், நினைவினையும், போற்றும் வகையிலும், அன்னாரது புகழினை வரலாற்றில் நிலைத்திட செய்யும் வகையில் திருச்சி மாவட்டத்தில் எம்.கே.தியாகராஜ பாகவதருக்கு திருவுருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என கடந்த 20.07.2019 அன்று சட்டப்பேரவைக் கூட்டத்தில் சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் அறிவித்தார்.

அதன்படி திருச்சி மாவட்டம் மத்திய பேருந்து நிலையம் அருகில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், எம்.கே.தியாகராஜபாகவதர் ஆகியோருக்கு ஒரே இடத்தில் மணிமண்டபம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டன. பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு 74 சென்டில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருவுருச்சிலையுடன் கூடிய மணி மண்டபமும், 1 நூலகமும் அமைக்கப்படும். சர்.ஏ.டி.பன்னீர் செல்வம், எம்.கே.தியாகராஜ பாகவதர் ஆகியோர்களுக்கு தலா 50 லட்சம் மதிப்பீட்டில் தலா 43 சென்டில் திருவுருவச்சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கூறினார்.