திருச்சி

திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்…

திருச்சி:-

திருச்சி விமான நிலையத்தில் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 3 ஆயிரத்து 149 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சி விமான நிலையம் வந்தடைந்த ஏர் ஏசியா விமான பயணிகளிடம், சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் 6 பேர் தங்கத்தை பேஸ்ட் வடிவில் மாற்றி, பெல்ட் மற்றும் உள்ளாடைகளில் மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பேஸ்ட் வடிவில் கடத்திவரப்பட்ட ஆயிரத்து 832 கிராம் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், மேலும் அவர்கள் அணிந்திருந்த ஆயிரத்து 317 கிராம் மதிப்பிலான தங்க சங்கிலிகளையும் பறிமுதல் செய்தனர்.

மொத்தமாக ஒரு கோடியே 7 லட்ச ரூபாய் மதிப்பிலான 3 ஆயிரத்து 149 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால் கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு தனித்தனியே 20 லட்ச ரூபாயை தாண்டாததால், யாரும் கைது செய்யப்படவில்லை. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.