தற்போதைய செய்திகள்

திருச்செங்கோடு கோயில்களில் அரசு சார்பில் தங்கும் விடுதிகள் – சட்டசபையில், பொன்.சரஸ்வதி எம்.எல்.ஏ கோரிக்கை…

சென்னை:-

திருச்செங்கோடு கோயிகளில் அரசு சார்பில் தங்கும் விடுதிகள் கட்ட வேண்டும் என்று சட்டப்பேரவையில் பொன்.சரஸ்வதி எம்.எல்.ஏ கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை, சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை விவாதத்தின் போது திருச்செங்கோடு தொகுதி கழக உறுப்பினர் பொன்.சரஸ்வதி தொகுதி சம்பந்தமான கோரிக்கைகளை முன் வைத்து பேசியதாவது:-

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். இதனால் கோயிலின் வெளிப்பிரகாரத்தில் தங்கத்தேர் வலம் வர கோயிலின் வடக்குப்பகுதியில் பாதை அமைக்க வேண்டும். திருச்செங்கோட்டில் அரசு கல்லூரி ஒன்று கூட அமைக்கப்படவில்லை. இங்கு அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும். திருச்செங்கோடு நகரில் உள்ள பயணியர் மாளிகை பழுதடைந்த நிலையில் இருக்கிறது. எனவே பயணியர் மாளிகைக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும். திருச்செங்கோடு நகரில் உள்ள திருத்தலங்களை தரிசிக்க விழாக்காலங்களில் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் தங்கி இறைவனை வழிபட்டு செல்ல அரசு சார்பில் தங்கும் விடுதி கட்ட வேண்டும்.

திருச்செங்கோடு வட்டத்திற்குட்பட்ட வட்டூர், கருமாபுரம், டி.புதுப்பாளையம், திருமங்களம், ஓ.ராஜபாளையம், டி.கைலாசபுரம் ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் மருத்துவ சிகிச்சை பெற 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சித்தாளந்தூர் செல்ல வேண்டியதிருக்கிறது. எனவே 6 ஊராட்சிகளுக்கும் மைய பகுதியான கவுண்டம்பாளையத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.

தொகுதிக்குட்பட்ட மல்லசமுத்திரம் பேரூராட்சியில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையத்திற்கு புற நோயாளிகள் பிரிவுக்கு புதிய கட்டடமும், கூடுதலாக மகப்பேறு கட்டடமும் கட்ட வேண்டும். நாமக்கல் சாலையில் இருந்து ஈரோடு சாலைக்கு புறவழிச்சாலைப் பணியை விரைந்து தொடங்க வேண்டும். மல்லசமுத்திரம் ஒன்றியம் செண்பகமாதேவி ஊராட்சியை சுற்றியுள்ள பள்ளக்குழி, பள்ளக்குழி அக்ரஹாரம், மங்களம், கூத்தாநத்தம், ஈ.புதுப்பாளையம், இருகலூர் போன்ற ஊராட்சிகளில் கால்நடைகளின் மருத்துவ வசதிக்காக செண்பகமாதேவி ஊராட்சியில் கால்நடை கிளை நிலையம் அமைக்க வேண்டும்.

திருச்செங்கோடு தொகுதிக்குட்பட்ட மல்லசமுத்திரம் ஒன்றியம் வையப்பமலையில் 550 அடி உயரம் கொண்ட மலை மீது சுப்ரமணியர் திருக்கோயிலுக்கு பக்தர்கள் எளிதில் சென்று வரும் வகையில் மலைப்பாதை அமைக்க வேண்டும். திருச்செங்கோடு நகர பெரிய மாரியம்மன் கோயிலுக்கு குடமுழுக்கு விழா நடத்த அனுமதி வழங்க வேண்டும். 5 வருடம் பணி புரிந்து வரும் திருக்கோயில் பணியாளர்களை வரன்முறைப்படுத்தி உத்தரவு வழங்க வேண்டும் என்று முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு பொன்.சரஸ்வதி எம்.எல்.ஏ பேசினார்.