தூத்துக்குடி

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் மாசி திருவிழா தேரோட்டம் – பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…

தூத்துக்குடி:-

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் மாசி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 6.30 மணிக்கு சிறிய தேரில் விநாயகர் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்தார்.

சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி – தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருளினார். காலை 7.45 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தக்கார் கண்ணன் ஆதித்தன், கதிரேச ஆதித்தன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். சுவாமி தேர் நிலையை வந்தடைந்ததும், தெய்வானை அம்பாள் எழுந்தருளிய தேர் நான்கு ரதவீதிகளிலும் பவனி வந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்தனர். மேலும் மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி போன்ற வழித்தடங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.