தற்போதைய செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோவிலில் விரைவில் சுற்றுச் சுவர் கட்டப்படும்’’ – அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அறிவிப்பு…

சென்னை:-

திருச்செந்தூர் முருகன் கோவிலில் விரைவில் சுற்றுச் சுவர் கட்டப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் கூறினார்.

சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது போளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.வி. சேகரன் கேள்வி ஒன்றை எழுப்பி, போளூர் தொகுதிக்குட்பட்ட நெடுங்குளம் ஊராட்சியில் உள்ள அருள்மிகு ஸ்ரீராமச்சந்திர பெருமாள் திருக்கோவிலை புனரமைத்து குடம்முழுக்கு நடத்த அரசு ஆவன செய்யுமா? என்றார்.

அதற்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் பதிலளிக்கையில்,

போளூர் தொகுதிக்குட்பட்ட நெடுங்குளம் ஊராட்சியில் உள்ள அருள்மிகு ஸ்ரீராமச்சந்திர பெருமாள் திருக்கோவிலுக்கு திருப்பணி செய்திட தொல்லியல் வல்லுனர் குழுவில் கருத்து பெறப்பட்டுள்ளது. இந்த கருத்து மீது விழுப்புரம் மண்டல வல்லுனர் குழு மற்றும் உயர்நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவின் ஒப்புதல் பெறப்பட்டு மதிப்பீடு தயாரிக்கப்பட உள்ளது. மதிப்பீடு தயார் செய்த பின்னர் உரிய நிதி ஆதாரத்தை பெற்று திருக்கோவிலை புனரமைத்து குடமுழுக்கு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

அதைத் தொடர்ந்து தி.மு.க. உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் துணை கேள்வி ஒன்றை எழுப்பினார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சுற்றுப்பிரகார சுவர் இடிந்து விழுந்துள்ளது. அந்த சுவர் முற்றிலுமாக இடிக்கப்பட்டு ஓராண்டு ஆகிவிட்டது. இதனால் பக்தர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே சுற்றுச்சுவர் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்குமா?அதே போல் 500 அறைகள் பழுதடைந்து பயன்படுத்தபடாமல் உள்ளது. அதையும் அரசு சரி செய்யுமா? என்றார்.

அதற்கு அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பதிலளிக்கையில், திருச்செந்தூர் சுற்றுப்பிரகார சுவர் கட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வல்லுநர் குழு ஒப்புதல் பெறப்பட்டு அந்த சுவர் கட்டித்தரப்படும். அதே போல் அங்குள்ள பயணிகள் தங்கும் அறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக ஆய்வு செய்து பின்னர் அறிக்கை தரப்பட்டுள்ளது. அங்கு ரூ.22 கோடி செலவில் புதிதாக தங்கும் அறைகள் கட்டித்தரப்படும் என்றார்.