தற்போதைய செய்திகள்

திருப்பதியில் 3 நாட்களில் ரூ.8.44 கோடி உண்டியல் வசூல்…

திருமலை:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வார விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இலவச தரிசனத்திற்கான வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 31 அறைகளும் நிரம்பி 3 கிமீ. வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இவர்கள் 24 மணி நேரத்திற்கு பிறகே சாமியை தரிசனம் செய்தனர். சனிக்கிழமை அதிகாலை முதல் நள்ளிரவு வரை 98 ஆயிரத்து 44 பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகை அதிகரித்ததால் அறை கிடைக்காமல் கோவிலின் எதிரே ஆங்காங்கே வெட்ட வெளியில் இரவு படுத்து தூங்கினர்.

தரிசனத்தின்போது வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகள் நிரம்பி லேபாக்சி சந்திப்பு வரை பக்தர்கள் நின்றுகொண்டிருந்தனர். இவர்கள் 24 மணி நேரம் காத்திருந்தும், ரூ.300 டிக்கெட்டை ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் 5 மணி நேரம் காத்திருந்தும் சாமி தரிசனம் செய்தனர். சனிக்கிழமை பக்தர்கள் ரூ.3.20 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தியிருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமையும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. அன்று 50,904 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 34,908 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.காத்திருப்பு அறைகள் அனைத்தும் நிறைந்து பக்தர்கள் வெளியில் உள்ள தரிசன வரிசையில் காத்திருந்தனர்.

அவர்கள் 25 மணிநேரத்திற்குப் பின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். நடைபாதை, நேர ஒதுக்கீடு, விரைவு தரிசனம் மற்றும் தேவஸ்தானம் வழங்கும் முதன்மை தரிசனங்களில் பக்தர்கள் 3 மணிநேரத்திற்குள் ஏழுமலையானை தரிசித்துத் திரும்பினர். அன்று ரூ.2.63 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது.