மதுரை

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கழகம் மாபெரும் வெற்றி பெறும் – வி.வி.ராஜன்செல்லப்பா நம்பிக்கை…

மதுரை

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் கழகம் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெறும் என்று மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் நடைபெற்ற கழக அரசின் சாதனை விளக்க மாபெரும் பட்டிமன்றத்தில் புறநகர் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இந்த இயக்கம் 100 ஆண்டுகள் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று சூளுரைத்தார். அதன் படி நிச்சயம் கழகம் 100 ஆண்டுகள் தமிழகத்தில் மக்களுக்கு சேவை செய்யும், இந்த இயக்கத்தை அழிக்க, ஒழிக்க எதிர்க்கட்சிகள் சூழ்ச்சி செய்த போது அதையெல்லாம் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் தகர்த்தெறிந்தார்கள். இந்த ஆட்சி ஒருநாள் கூட தாக்குப்பிடிக்காது என்று கூறியவர்கள் மத்தியில் இன்றைக்கு இரண்டு ஆண்டு காலத்திற்கு மேல் மகத்தான ஆட்சியை முதலமைச்சர் நடத்தி வருகிறார்.

புரட்சித்தலைவர் மறைவிற்குப்பின் இந்த இயக்கத்தை வலிவோடு நடத்தி ஒன்றரை கோடி தொண்டர்களை உருவாக்கி தந்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள். அந்த ஒன்றரை கோடி தொண்டர்களும் இன்றைக்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் வழியில் கழக பணியாற்றி வருகின்றனர். வரும் நாடாளுமன்ற தேர்தலில் கழகத்திற்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தர கழக தொண்டர்கள் கடுமையாக பணியாற்றி வருகின்றனர்.

இதே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று அறிவித்தார். அதற்கு பின் கொல்கத்தாவில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் வேட்பாளரை பற்றி வாய்திறக்க மறுத்து விட்டார். ஆனால் ஸ்டாலினுக்கு மக்கள் செல்வாக்கு இருப்பது போல் அவர்களின் குடும்ப தொலைக்காட்சிகள் ஒரு மாயையை பரப்பி வருகின்றன.

ஆனால் தி.மு.க.விற்கு மக்கள் செல்வாக்கு குறைந்து வருகிறது என்பதை என்னால் ஆதாரத்துடன் கூற முடியும். ஏற்கனவே கழகத்திற்கு 40 சதவிகிதம் மக்கள் ஆதரவாக இருந்து வந்தனர். தற்போது பொங்கல் ரூ.1000 பரிசின் மூலம் கூடுதலாக கழகத்திற்கு மக்கள் ஆதரவு பெற்று ஏறத்தாழ 50 சதவிகிதம் மக்கள் இன்று கழகத்திற்கு ஆதரவாக இருந்து வருகின்றனர்.

வரும் நாடாளுமன்ற தேர்தல் ஆனாலும் சரி, இடைத்தேர்தல் ஆனாலும் சரி முதலமைச்சர் நிச்சயம் ஒரு ராஜதந்திர முடிவை எடுப்பார். எதிர்கட்சிகள் சூழ்ச்சிகளை முறியடித்து, மாபெரும் வெற்றியை கழகத்திற்கு முதலமைச்சர் பெற்றுத்தருவார், அதற்கு உறுதுணையாக துணைமுதலமைச்சர் இருப்பார். இந்த திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின் போது கழகம் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றி பெறும். ஏனென்றால் இன்றைக்கு மக்கள் மனநிலை கழகத்திற்கு வாக்களிக்க கூடிய நிலையில் உள்ளனர். எதிர்கட்சிகள் எவ்வளவு பொய் பிரச்சாரம் செய்தாலும் தோல்வி உறுதி.

இவ்வாறு வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.