திருப்பூர்

திருப்பூரில் கழக வேட்பாளர் ஆனந்தன் தீவிர வாக்கு சேகரிப்பு…

திருப்பூர்:-

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தொழில் அமைப்பினரிடம் ஆதரவு திரட்டுவது, சங்க நிர்வாகிகளை சந்தித்து ஓட்டு கேட்பது, பொதுமக்களை நேரடியாக சந்தித்து ஓட்டு வேட்டையாடுவது என பல வழிகளிலும் அவர் ஓட்டு சேகரித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக திருப்பூரில் ஆயிரக்கணக்கானோர் நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளும், திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி பள்ளி மைதானத்தில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் புடைசூழ மைதானம் முழுவதும் நடந்து சென்று இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு சேகரித்தார்.

நஞ்சப்பா பள்ளி நடை பயிற்சியாளர்கள், ஓட்டப்பயிற்சி மேற்கொள்பவர்கள், பாட்மின்டன், கூடைப்பந்து, ரிங் பால் விளையாடுபவர்கள் என ஒவ்வொரு குழுவாக தனித்தனியே சந்தித்து அவர் ஓட்டு கேட்டார். அப்போது மைதானத்தில் இருந்தவர்கள், வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு சால்வைகளை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் மைதானத்தில் திரண்ட கூட்டத்தினரிடையே இரட்டை இலை சின்னத்துக்கு ஓட்டு கேட்டு பேசியதாவது:-

தமிழகத்துக்கு அம்மா அவர்களின் அரசு எண்ணற்ற திட்டங்களை தந்து இருக்கிறது. அதே போல கழக கூட்டணியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி அரசும் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திருப்பூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை உள்ளிட்ட திட்டங்களை மோடி துவக்கி வைத்துள்ளார். மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் 40 ஆயிரம் கோடி அளவுக்கு திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். தமிழகத்துக்கு இணக்கமான அரசாக மோடி அரசு இருந்து வருகிறது.
மேலும், திருப்பூர் தொழில் பாதுகாப்புக்காக பல்வேறு திட்டங்களை அம்மா அரசு நிறைவேற்றி இருக்கிறது.

இன்னும் திருப்பூரில் உள்ள சிரமங்களை தீர்க்க மத்திய அரசுடன் இணைந்து சிறப்பாக செயல்படுவோம். திருப்பூரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு நீங்கள் இரட்டை இலைக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை திட்டமிட்டு இருக்கிறோம். எளிமையான முறையில் நீங்கள் எங்களை அணுகி திட்டங்களை பெற முடியும். இதற்காக இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களித்து, திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி தான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

இவ்வாறு திருப்பூர் தொகுதி வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.