திருப்பூர்

திருப்பூரில் கழக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் தீவிர வாக்குசேகரிப்பு…

திருப்பூர்:-

நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திருப்பூரில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகேட்டு திருப்பூரில் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புஷ்பா தியேட்டர், கொங்கு மெயின் ரோடு, உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். இந்த பிரச்சாரத்தில் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார், தீபா பேரவை நிர்வாகிகள் செந்தில்குமார், கழக நிர்வாகிகள் ஜே.ஆர்.ஜான், ராதாகிருஷ்ணன், கருணாகரன், பட்டுலிங்கம், கணேஷ், கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.

இந்த பிரச்சாரத்தின் போது வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசியதாவது:-

தொழில் செய்வதற்கான சிரமங்களை நீக்க நடவடிக்கை எடுக்கும் விதமாக ஏற்கனவே ரூ.200 கோடியை வட்டியில்லா கடனாக வழங்கி இருக்கிறோம். கோவை விமான நிலையத்தை முழுமையாக விரிவுபடுத்தி சர்வதேச அளவில் செயல்படுத்தினால் வெளிநாட்டு வர்த்தகர்கள் வந்து செல்ல எளிதாக இருக்கும் என்பதால் அதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகிறது.

அவிநாசி அத்திக்கடவு திட்டத்தை இந்த அரசு தான் நிறைவேற்றி தந்து இருக்கிறது. திருப்பூரில் நான்காவது குடிநீர் திட்டப்பணிகள் துவக்கப்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றை தூய்மைப்படுத்தி பக்கவாட்டு சுவர் எழுப்பி பாதுகாக்க ரூ.160 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கழகம் வெற்றிபெற்றதும் மக்களின் கோரிக்கைகளை முழுமையாக கேட்டு அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பேசினார்.