சிறப்பு செய்திகள்

திருப்பூர் மாவட்ட மக்கள் வளம்பெற 1875.45 கோடியில் 10 திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்

திருப்பூர்:-

திருப்பூர் மாவட்டத்துக்கென ரூ.1875.45 கோடி மதிப்பிலான 10 திட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

திருப்பூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது;-

திருப்பூர் மாநகராட்சியில் 604 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டத்தையும் உருவாக்கித் தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அம்ருத் திட்டத்தின் மூலமாக 19.27 கிலோமீட்டர் நீளத்திற்கு ராட்சத இரும்புக் குழாய் அமைத்து 196 ஆடுனு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது. இந்தத் திட்டம் நிறைவேறுகின்றபொழுது 1 லட்சத்து 17 ஆயிரத்து 500 புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கும்.பழைய பேருந்து நிலையம் ரூபாய் 36 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புனரமைத்து, பல வசதிகளுடன், புதிய சீர்மிகு பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற இருக்கிறது. மேலும், அடுக்குமாடி வாகன நிறுத்தமும் அமைக்கப்படுகிறது. டவுன் அரங்கம் முழுவதுமாக அகற்றப்பட்டு, புதிய மாநாட்டு அரங்கம் ரூபாய் 52 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

மாநகராட்சி மைய அலுவலகங்களில், ஒருங்கிணைந்த மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டு மையம் 30 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட இருக்கிறது. சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, இன்றைக்கு திருப்பூர் மாநகரத்திலுள்ள பகுதிகள் முழுவதும் கண்காணிக்கப்படுகிறது.இந்த நிகழ்ச்சியின் வாயிலாக கிட்டத்தட்ட ஆயிரத்து 875 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பிலான 10 பணிகளுக்கு என்னால் இன்று அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. இந்த திட்டங்கள் அனைத்தும் இன்னும் இரண்டு ஆண்டுகளில் நிறைவு பெற்று நாங்களே வந்து திறக்கின்ற காட்சியை மக்கள் பார்க்கப் போகிறீர்கள். அதுதான் அம்மாவினுடைய அரசு. அடிக்கல் நாட்டுவதும் நாங்கள்தான், திறக்கப் போவதும் நாங்கள்தான்.

அதேபோல, ரூபாய் 27.16 கோடி மதிப்பீட்டில் சூரிய ஒளி மூலம் 4.8 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கும், 2.18 கோடி மதிப்பீட்டில் மீன் மார்க்கெட்டை மேம்படுத்துவதற்கும் நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு உட்புறச் சாலைகளெல்லாம் சீர் செய்வதற்காக 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. நொய்யல் ஆற்றினை மேம்பாடு செய்து, பொழுதுபோக்கு வசதிகள் ஏற்படுத்துவதற்காக இந்த அரசு ரூபாய் 156 கோடியே 76 லட்சம் மதிப்பீட்டில் இந்தப் பணியையும் மேற்கொள்ள இருக்கிறது.ஆகவே, திருப்பூர் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் உள்பட 490 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 12 திட்டப் பணிகளுக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

வாழவாடி முதல் தெற்கு பூதானம் சாலையில் புதிய பாலம், திருப்பூர் வட்டசாலையில் திருமுருகன்பட்டி நல்லூர் மேம்பாலத்தில் ஒரு பாலம், திருப்பூர் மாவட்ட பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் உட்பட மொத்தம் 57 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்ட 34 திட்டப் பணிகளை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக நான் திறந்து வைத்துள்ளேன் என்ற மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் 500 பயனாளிகளுக்கு 1 கோடியே 25 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகின்றது. இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட உழைக்கும் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனம், அம்மா மறைவிற்குப் பிறகு, நான் முதலமைச்சராக வந்தவுடன் இப்பொழுது அம்மாவின் அரசு இந்த நிகழ்ச்சியின் வாயிலாக 500 பயனாளிகளுக்கு வழங்குகின்றோம்.

அதேபோல, தமிழ்நாடு முழுவதும் புரட்சித்தலைவி அம்மா காலத்திலிருந்து, மகளிர் சுயஉதவிக் குழுவின் மூலம் சுயமாக தொழில் தொடங்கி சொந்தக் காலில் நிற்க வேண்டுமென்பதற்காக ரூபாய் 41,000 கோடி அளவிற்கு மிகப்பெரிய கடனுதவி கொடுத்திருக்கின்றோம். திருப்பூர் பகுதியில் மட்டும் 500 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூபாய் 1 கோடியே 12 இலட்சம் மதிப்பிற்கு கடனுதவி வழங்கப்படுகிறது. இவைகளெல்லாம் எதிர்க்கட்சித் தலைவருக்கு தெரியவில்லை. இவர்கள் ஆட்சியில் எதுவுமே நடக்கவில்லை, தரவில்லை என்று குறை சொல்லிக் கொண்டிருக்கின்றார்.

திருப்பூர் மாவட்டத்தில் அம்மாவின் அரசால் நிகழ்த்தப்பட்ட சாதனைகளில் ஒரு சிலவற்றை இங்கே குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.250 கோடி ரூபாய் செலவில் திருப்பூர் மாநகராட்சியில் விரிவடைந்த பகுதிகளில் குடிநீர் அபிவிருத்தி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இதுவரை 65 விழுக்காடு பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. திருப்பூர் மாநகராட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களின் கீழ் 1899 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

எதிர்க்கட்சித் தலைவருக்கு இந்த நிகழ்ச்சியின் வாயிலாக சொல்வதெல்லாம், திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் நாங்கள் இவ்வளவு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றோம். நீங்கள் ஊர், ஊராக, தெருத்தெருவாக போனாலும், மக்கள் உங்களைப் பற்றி நன்றாக அறிந்திருக்கிறார்கள் என்பதை இந்த நேரத்திலே நினைவுகூர விரும்புகின்றேன். எனவே, பல்வேறு திட்டங்களை திருப்பூர் பகுதி மக்களுக்கு அம்மாவினுடைய அரசு செய்து வருகிறது என்பதையும் இந்த நேரத்திலே சுட்டிக்காட்ட விழைகின்றேன்.

திருப்பூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறைகள் மூலமாக பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரையில், தேசிய, மாநில, மாவட்ட நெடுஞ்சாலைகள், மாவட்ட இதர சாலைகள், கரும்பு அபிவிருத்தி சாலைகள் என பல்வேறு சாலைகள் திட்டத்தின் கீழ் 3153 கிலோ மீட்டர் சாலைகள் இன்றைக்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, 2016-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகளில் 862 கிலோ மீட்டர் சாலைகள் ரூபாய் 636 கோடியில் அகலப்படுத்தப்பட்டு தற்சமயம் மக்களின் பயன்பாட்டிற்கு நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

திருப்பூர் மாவட்டத்தில் 525 கிலோ மீட்டர் சாலைகள் ரூபாய் 272 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்தப்பட்டு, மேம்படுத்தும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றது. திருப்பூர் நகருக்கும் 3 இரயில்வே கடவுகளுக்கு பதிலாக மேம்பாலம் கட்டும் பணிகள் ரூபாய் 81 கோடி மதிப்பீட்டிலும், 6 சிறு பாலம் கட்டும் பணிகள் ரூபாய் 15 கோடி மதிப்பீட்டிலும் இன்றைக்கு நடைபெற்று வருகின்றன.மேலும், திருப்பூர் மாவட்டம், பழைய பேருந்து நிலையம் அருகில் தாராபுரம் சாலை சந்திப்பில், போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூபாய் 43 கோடி செலவில் சாலை மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு இன்றைக்கு வந்துள்ளது.ஒட்டன்சத்திரம்-தாராபுரம்-திருப்பூர் சாலையில் 71 கிலோ மீட்டருக்கு இரு வழிப் பாதையை, நான்கு வழிப் பாதையாக அகலப்படுத்தும் பணிகள் ரூபாய் 734 கோடி செலவில் நடைபெற்று வருகிறது.

திருப்பூர் அவினாசிப்பாளையம் இரு வழிப் பாதையை, நான்கு வழிப் பாதையாக அகலப்படுத்தும் பணிகள் ரூபாய் 114 கோடி செலவில் நடைபெற்று தற்சமயம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப் பட்டுள்ளது.திருப்பூர்-பெருமாநல்லூர் சாலை போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய சாலை மேம்பாலம் அமைக்க ரூபாய்1.47 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் கால்நடைகளுக்கும் சிறந்த சிகிச்சை செய்ய வேண்டுமென்பதற்காக திருப்பூர் நகரத்தில் 24 மணி நேரமும் இயங்கக் கூடிய கால்நடை மருந்தகத்தை இன்றைக்கு அம்மாவினுடைய அரசு திறந்து, இன்றைக்கு வேளாண் பெருமக்களுக்கு வரப்பிரசாதமான திட்டத்தை தொடங்கி வைத்திருக்கின்றோம்.

தென்னிந்தியாவிலேயே, மிகப் பெரிய கால்நடைப் பூங்கா ஒன்றை, சேலம் மாவட்டம், தலைவாசல் கூட்டு ரோட்டிற்கு அருகே 900 ஏக்கரில் அமல்படுத்தவிருக்கின்றோம். இது ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்கா. அதில், கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சிக் கல்லூரி, அனைத்துக் கால்நடைகளும் அதிலே வளர்க்கப்படுவதற்கு, வேளாண் பெருமக்கள் தெரிந்துகொண்டு கால்நடைகளை வளர்க்கும் பணியை மேற்கொள்வதற்கு, அதேபோல, கலப்பினப் பசு, நாட்டுப் பசு, நாட்டுக் காளைகள் போன்றவற்றை வேளாண் பெருமக்களுக்கு வழங்கவிருக்கின்றோம் என்பதையும் சுட்டிக்காட்ட விழைகின்றேன். கோழி, ஆடு வளர்ப்பு போன்ற திட்டங்களும் அதில் கொண்டுவரப்படவுள்ளது.

திருப்பூர் மாநகரம் தொழிற்சாலைகளும், தொழிலாளர்களும் மிகுந்த மாநகரமாக இருப்பதால் தொழிலாளர்கள் சிகிச்சை பெறுவதற்கு புதிய இ.எஸ்.ஐ. மருத்துவமனை கட்டடம் கட்ட அம்மா அரசால் இன்றைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அத்திக்கடவு-அவினாசித் திட்டத்தை நிறைவேற்றுகின்ற பொழுது வேளாண் பெருமக்களுக்குத் தேவையான நீரும், குடிநீரும் கிடைக்கும். அம்மா அவர்களிடம் வைத்த இந்தக் கோரிக்கையை இன்றைய தினம் நிறைவேற்றும் வகையில் இத்திட்டத்திற்கு முழுக்க, முழுக்க மாநில நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டு, திட்டம் நிறைவேற்றப்படும் என்ற செய்தியை தெரிவிக்க விரும்புகின்றேன்.

அனைத்து இல்லங்களிலும் தைப் பொங்கல் கொண்டாட அத்தனை குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூபாய் 1000 வழங்கிய அரசு அம்மாவினுடைய அரசு. அதேபோல, மத்திய அரசு, சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டொன்றுக்கு மூன்று தவணையாக தலா ரூபாய் 2000 வழங்கப்படும் என்ற அறிவிப்பை அறிவித்து, இந்த ஆண்டு விவசாயிகளுக்கு, கிட்டத்தட்ட 14 இலட்சம் நபர்களுக்கு வங்கிக் கணக்கிற்கு அந்தப் பணம் வந்து விட்டது.

அம்மா அரசு, தொழிலாளர்கள் நலன் கருதி, சிறப்புத் திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு ஏழைக் குடும்பதொழிலாளர்களுக்கும் ரூபாய் 2000 வழங்கப்படும் என்ற அறிவிப்பை கொடுத்துள்ளதன் வாயிலாக வருகின்ற 4-ஆம் தேதி சென்னையிலே அந்தத் திட்டத்தை நான் துவக்கி வைக்கவிருக்கின்றேன். அதன் பிறகு, கிட்டத்தட்ட 60 லட்சம் நபர்கள் இத்திட்டத்தின் வாயிலாக பயன் பெறுகின்றார்கள். எத்தனை லட்சம் நபர்கள் வந்தாலும், ஒருவரும் விடுபடாமல், அனைவருக்கும் அம்மாவின் அரசினால் வழங்கப்படும். அதற்கான விண்ணப்ப மனு அதிகாரிகள் மூலமாக அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

விவசாயம், தொழிற்சாலை இரண்டும் மிக முக்கியம். மக்களுக்குத் தேவையான வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதற்கு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி ரூபாய் 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்த்தார்கள்.

தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தும் அவரோடு இணைந்து அந்தத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் எல்லாம் வெளிநாட்டிற்கும், இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று தொழிலதிபர்களை சந்தித்து, புதிய தொழில் துவங்க வேண்டுமென்று விடுத்த அழைப்பை ஏற்று, பல்வேறு தொழிலதிபர்களும் ஜனவரி, 2019-ல் சென்னையில் அம்மாவின் அரசால் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொண்டு, 304 புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு, கிட்டத்தட்ட ரூபாய் 3 லட்சத்து 431 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. தொழில்வளம் பெருகுகின்ற நாடாக தமிழகம் திகழவிருக்கிறது. இதன் மூலமாக 10.5 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகின்ற நகரம் திருப்பூர் நகரம் என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன். திருப்பூர் என்றாலே பின்னலாடைகள் தான் ஞாபகத்திற்கு வரும். வெளிநாட்டிலே எந்தப் பகுதிகளுக்குச் சென்றாலும், திருப்பூர் பனியன், பின்னலாடைகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பேணிக் காக்கப்பட்டு, தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. அதற்காக, இந்தியா டுடே என்ற ஆங்கில ஏடு, இந்தியாவில் இருக்கின்ற பல்வேறு மாநிலங்களை ஆய்வு செய்து, சட்டம்-ஒழுங்கை பேணிக் காப்பதில் சிறந்த மாநிலம் தமிழகம் விளங்குகிறது என்று அறிவித்து அதற்கான விருதையும் வழங்கியுள்ளது.மேலும், உள்ளாட்சித்துறை, மின்சாரத்துறை, வேளாண்மைத்துறை, போக்குவரத்துத் துறை என பல்வேறு துறைகளிலும் விருதுகளை பெற்றுக் கொண்டிருக்கின்றோம்.வேளாண்மைத் துறையில், உணவு தானிய உற்பத்தியில் “க்ருஷி கர்மான்” என்ற விருதை தொடர்ந்து பெற்றுக் கொண்டிருக்கின்றோம்.

இன்றைக்கு அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சியைக் காண முடிகிறது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவருக்கு மட்டும் நம்முடைய வளர்ச்சி அவருடைய கண்களுக்குத் தெரியவில்லை. வேண்டுமென்றே, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எல்லாப் பகுதிகளுக்கும் சென்று இந்த ஆட்சியில் எதுவுமே நிறைவேறவில்லையென்ற தவறான குற்றச்சாட்டை சொல்லி, மக்களை குழப்பிக் கொண்டிருக்கின்றார். எந்தளவிற்கு குழப்பினாலும், மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள்.

அம்மாவின் அரசு ஏராளமான திட்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறது. திருப்பூர் மாவட்டத்திற்கு மட்டும் ரூபாய் 1889 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகளை கொண்டு வந்து திருப்பூர் மாநகரத்தின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்கக்கூடிய அளவிற்கு உருவாக்கப்பட்டிருக்கிறது. கல்வியில் புரட்சி, மறுமலர்ச்சியை நாங்கள் ஏற்படுத்தியதன் காரணமாக, 2011-ல் 21 விழுக்காடாக இருந்த உயர்கல்வி படிக்கக்கூடியவர்கள் எண்ணிக்கை, தற்பொழுது 48.6 விழுக்காடாக உயர்ந்து இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து கொண்டிருக்கிறது.

அதேபோல, கடுமையான வறட்சி நிலவியபோதும், சிறந்த நிர்வாகத் திறமையின் காரணமாக, விலைவாசி உயர்வு ஏற்படாத வண்ணம், விலைவாசி உயர்வை அம்மாவின் அரசு கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. மருத்துவத் துறையிலும் மிகச் சிறந்த சாதனைகளை படைத்திருக்கின்றோம். திண்டுக்கல்லைச் சேர்ந்த, இரண்டு கைகளையும் இழந்த ஒருவருக்கு, இறந்தவர் ஒருவரின் உடலிலிருந்து எடுத்த இரண்டு கைகளையும் பொருத்தி நமது அரசு ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் ஒரு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். இந்தியாவில், உறுப்பு மாற்றுச் சிகிச்சை மூலம் இப்படிப்பட்ட அறுவை சிகிச்சை செய்த வரலாறு கிடையாது.

ஏழை மக்கள், தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுவதற்கான காப்பீட்டுத் தொகை ரூபாய் 2 லட்சத்திலிருந்து ரூபாய் 5 லட்சமாக உயர்த்தியிருக்கின்றோம். இந்த அரசு உங்களுடைய அரசு. நாங்கள் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றோம் என்பதை சுட்டிக்காட்டி, அனைவருக்கும் நன்றி தெரிவித்து விடைபெறுகின்றேன்.

இவ்வாறு முதலமைச்சர் உரையாற்றினார்.