தற்போதைய செய்திகள்

திருமங்கலத்தில் ரூ.1.53 கோடியில் ஆர்.டி.ஓ அலுவலகம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பணியை துவக்கி வைத்தார்…

மதுரை

மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், ஆலம்பட்டி கிராமத்தில் திருமங்கலம் மோட்டார் வாகனப்பகுதி அலுவலக கட்டடப்பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் (பொ) எஸ்.சாந்த குமார் தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் துவக்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

திருமங்கலம் மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகம் 2009-ம் ஆண்டு துவக்கப்பட்டது. ஆண்டுதோறும் இவ்வலுவலகம் மூலம் சுமார் 7000 பழகுநர் உரிமமும், 4500 ஓட்டுநர் உரிமமும் வழங்கப்பட்டு வருகிறது. சராசரியாக ஆண்டிற்கு 8400 வாகனங்களுக்கு வாகனப்பதிவு செய்யப்படுகிறது. இவ்வலுவலகம் துவங்கப்பட்டது முதல் வாடகை கட்டடத்தில் இயங்கி வருவதால் தமிழ்நாடு அரசு மோட்டார் வாகன பகுதி அலுவலகம் கட்டுவதற்காக அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி தரைத்தளம் 472 ச.மீ பரப்பளவில் ரூ.153.30 லட்சம் மதிப்பீட்டில் அலுவலக வரவேற்பறை, அலுவலக அறை, கழிவறை உள்ளிட்ட வசதிகளுடன் திருமங்கலம் வட்டம், ஆலங்குடி கிராமத்தில் கட்டுவதற்கான பூமிபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. இக்கட்டடப்பணியானது 8 மாதத்திற்குள் கட்டிமுடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் (கட்டடங்கள்) வி.சுகுமாறன், வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் பஞ்சவர்ணம், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் தனலெட்சுமி, துணை ஆட்சியர் (பயிற்சி) கோட்டைக்குமார், வட்டாட்சியர் தனலெட்சுமி (திருமங்கலம்) உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.