அரியலூர்

திருமானூர் அருகே ஜல்லிக்கட்டு – காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசு…

அரியலூர்:-

சன்னாவூர் மற்றும் சில்லக்குடி கிராமங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற்றது.

அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே சன்னாவூர் கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் ஒருங்கிணைப்பாளர்களாக பாலமூர்த்தி, முருகேசன், ஆனந்த் உள்ளிட்டோர் செயல்பட்டனர். வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகளை அடக்கும் முயற்சியில் 150 வீரர்கள் ஈடுபட்டனர். போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் பிடிபடாமல் ஓடிய காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர்.ஸ்ரீநிவாசன், டி.எஸ்.பி., இளஞ்செழியன், மாவட்ட வழங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், தாசில்தார் கதிரவன், சன்னாவூர் ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் சிறப்பு பார்வையாளர்களாக பங்கேற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு களித்தனர்.

இதேபோல் சில்லக்குடி கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை ஒருங்கிணைப்பாளர் குமார் தொடங்கி வைத்தார். 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற இப்போட்டியில் பங்கேற்று காளைகளை அடக்கிய வீரர்கள், பிடிபடாமல் ஓடிய ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்களுக்கு, பீரோ, கட்டில், சில்வர் பாத்திரம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி, வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், ஆலத்தூர் தாசில்தார் ஷாஜகான் உள்பட ஏராளாமானோர் கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர்.ஸ்ரீநிவாசன் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.