திருவண்ணாமலை

திருவண்ணாமலை அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை…

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் க.சு.கந்தசாமி கூறியிருப்பதாவது;-

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப் பள்ளியில் பல்வேறு கலைகளில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. நடப்பு 2019-2020 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்பயிற்சி வகுப்பில் தகுதியும், ஆர்வமும் உள்ள மாணவர்கள் சேர்ந்து பயனடையலாம்.

இந்த பயிற்சிக் காலம் மூன்றாண்டுகள் படிப்பாகும் (சான்றிதழ் தேர்வு). இப்பயிற்சியில் குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய கலைப் பிரிவுகள் பாடமாக நடத்தப்படுகிறது. பயிற்சியில் சேருவதற்கான வயது வரம்பு 13 வயது முதல் 25 வயது வரை ஆகும். மேலும், கல்வித்தகுதியாக நாதசுரம், தவில் கலைகளுக்கு எழுதப்படிக்கத் தெரிந்திருத்தல் வேண்டும், பிற கலைகளுக்கு 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி காலத்தில் மாதம் ரூ.400 உதவித்தொகையும், கட்டணமில்லா பேருந்து பயண அட்டையும் வழங்கப்படும்.

மூன்றாண்டு பயிற்சிக்குப்பின் அரசுத் தேர்வுகள் நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சியில் சேர விரும்பும் தகுதியுடைய மாணவர்கள் பள்ளி மாற்றுச் சான்றிதழ், வருமான சான்றிதழ், சாதிச்சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகிய சான்றுகளுடன் எண்.16, பவழக்குன்று தெரு, திருவண்ணாமலை-606601 என்ற முகவரியில் செயல்பட்டு வரும் அரசு இசைப் பள்ளி அலுவலகத்தில் நேரடியாக காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு அரசு இசைப் பள்ளி அலுவலக தொலைபேசி (04175) 223545 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.