தற்போதைய செய்திகள்

திருவண்ணாமலை அருகே ஜீவசமாதி நிலையில் அடக்கம் செய்த சிறுவனின் உடல் தோண்டியெடுப்பு : மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பரிசோதனை…

திருவண்ணாமலை:-

திருவண்ணாமலை அருகே ஜீவசமாதி நிலையில் அடக்கம் செய்யப்பட்ட சிறுவனின் உடலை அதிகாரிகள் தோண்டி எடுத்து மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பரிசோதனை செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த செண்பகத்தோப்பு ராமநாதபுரத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் ஆசிரியர்.இவர் தனது விவசாய நிலத்தில் வீடு கட்டி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் தனநாராயணன் (16). 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவருக்கு வலிப்பு நோய் இருந்ததால் மேற்கொண்டு படிப்பை தொடராமல் வீட்டிலேயே இருந்து வந்தார். வலிப்பு நோய்க்காக யோகாசன பயிற்சி பெற்று வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று திடீரென தனநாராயணனுக்கு வலிப்பு ஏற்பட்டது. அப்போது வீட்டின் அருகில் இருந்த 120 அடி ஆழ கிணற்றில் தனநாராயணன் தவறி விழுந்தார். இதனை கண்ட அவரது பெற்றோர் தீயணைப்பு நிலையத்திற்கும், 108 ஆம்புலன்சிற்கும் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 1 மணி நேரம் போராடி தனநாராயணனை மீட்டனர். 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தனநாராயணனை பரிசோதனை செய்தபோது அவர் இறந்து விட்டதாக கூறினர்.
இதனால் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் விட்டுவிட்டனர்.

அப்போது அந்த பகுதியில் சுற்றி திரிந்த சாமியார் ஒருவர் கூட்டமாக பொதுமக்கள் திரண்டு நிற்பதை பார்த்து அங்கு வந்தார். அவர் தனநாராயணின் கையை பிடித்து பார்த்துவிட்டு அவர் இறக்கவில்லை அவருக்கு உயிர் நாடி உள்ளது. அவர் ஜலசமாதி அடைந்து விட்டார் என கூறினார்.இதையடுத்து தனநாராயணனை ஜீவ சமாதி செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்தனர். அதன்படி உறைகள் வைத்து பள்ளம் தோண்டி அதில் தனநாராயணனின் கை, கால்களை கட்டி உடலை தியான நிலையில் உட்கார்ந்தபடி வைத்து பூஜை செய்து அடக்கம் செய்தனர்.

சிறுவன் ஜீவ சமாதி நிலையில் அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி
தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி சிறுவனின் உடலை தோண்டி எடுத்து மருத்துவ பரிசோதனை நடத்த உத்தரவிட்டார். அதன் பேரில் அதிகாரிகள் செண்பகத்தோப்பு ராமாநாதபுரத்துக்கு சென்று ஜீவசமாதி நிலையில் புதைக்கப்பட்ட சிறுவனின் உடலை தோண்டி எடுத்து மாவட்ட ஆட்சியரின் முன்பு பிரேத பரிசோதனை செய்தனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், சிறுவன் கிணற்றில் விழுந்து மூச்சு திணறிதான் இறந்துள்ளார். வேறு எந்த சந்தேகமும் வேண்டாம், தவறான தகவல்களை வாட்ஸ் அப் மற்றும் யு டியூப்களில் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.